Wednesday, November 28, 2007

எறும்பின் சொற்கள்

பிரித்து வைத்திருந்த
புத்தகத்தில் நிகழ்ந்தது

எழுத்துக்கள் எல்லாம்
எறும்புகளாயின

வெள்ளையானது பக்கம்

தாளில் ஒளிந்திருக்கும்
எதையோ கண்டுபிடிப்பதுபோல்
அங்கும் இங்கும் வேகமாயின

எறும்புகளின் சந்தையானது
விரித்து வைத்த புத்தகம்

மூடினால் நசுங்கி
இறந்து போகலாம்

புத்தகம் திறந்திருக்க
அறையை மூடிவிட்டுக் கிளம்பினேன்

திரும்பியபோது
அப்படியே இருந்தன எழுத்துக்கள்

எறும்புகள் எதுவுமில்லை

பிரமிப்பிலிருத்து மீண்டு
நகர்ந்தது பார்வை
கவிதையின் தலைப்புக்கு

எறும்பின் சொற்கள்

எறும்பைக் கொல்லாத
ஒரு மனிதனை
தான் இறந்து போவதற்குள்
பார்க்க வேண்டும் என்று
ஒரு எறும்பு சொல்வதுபோல்
முடிந்திருந்த்து

புத்தகத்தை மூடாமல்
அப்படியே பார்த்தேன்

தாளை சுதந்திரவெளியாக்கி
போனது ஒரு எறும்பு

1 comment:

  1. quite dramatic.........

    வார்த்தைப் படங்கள்...

    ReplyDelete