Monday, December 28, 2009

சிறுமி

பிறந்த நாளுக்கு
சாக்லெட் வாங்கும் சிறுமி
கடைக்காரருக்கு
முதல் சாக்லெட்டை
கொடுத்துவிட்டு ஓடுகிறாள்

வலி

கவனமாக
நடந்து செல்லுங்கள்
நீங்கள் நசுக்கிப்போட்ட
பனித்துளிகளில்
கசிகிறது வலி

ஒத்திகை

ஒத்திகை செய்து வந்தோம்
என்ன பேசலாம் என்று
உதிர்ந்து கிடக்கும் வார்த்தைகள்
நம்மைப் பார்த்து சிரிக்கின்றன

நட்பானது

நனைவதைத் தவிர
வழியில்லை
நட்பானது மழை

Saturday, December 26, 2009

அனுபவ சித்தனின் குறிப்புகள்

28

நீ கூவி
விற்றப் பொய்கள்
வேறொரு
சந்தையில்
விற்றுக் கொண்டிருந்தன
நீ படுத்தடங்கப்போகும்
சவப்பெட்டியை

29

ஏற்கவா
தவிர்க்கவா
துள்ளிக் குதிக்கிறது
கேள்வித்தவளை
ஒன்றிலிருந்து
இன்னொன்றிற்கு

30

நண்பனின்
இறுதிச் சடங்கு
பார்த்து விட்டு
திரும்பினேன்
என் மரணத்தை

31

ஒரே புன்னகைதான்
பூச்செண்டும்
தரும்
போர்வாளாகவும்
மாறும்

Friday, December 25, 2009

விளிம்பில்

பிரபஞ்சத்தின் விளிம்பில்
தொங்கும்
ஒரு சொல்
அசைந்து அசைந்து
எழுப்பும்
அதிர்வில்
கொட்டுகின்றன
சொற்கள்

படிகள்

நீரில்
படிகள் வரைந்து
இறங்கிக் கொண்டிருக்கிறது
மீன்

ஏறிக்கொண்டிருக்கிறேன்
நான்

முன் பின்

நீங்கள்
கைதுடைக்கப்
போகும்முன்
அந்தக் காகிதத்தில்
இருக்கும் கவிதையைப்
படித்து விடுங்கள்

இல்லையெனில்
கையில்
ஒட்டி இருக்கும்
ஒன்றிரண்டு
வார்த்தைகளை
கழுவி விடுங்கள்

அறிவிப்பு

உங்கள் பெயர்
அறிவிக்கப்பட்ட போது
மேடைக்கு வந்து
ஏன் பரிசை
வாங்கவில்லை

உங்கள் குரல்
கேட்காத தொலைவில்
இருந்தேன்
ஒரு கூழாங்கல்லின்
தலையை வருடியபடி

சாயல்

எல்லோர் சாயலும்
என் கவிதையில்
தென்படுவதாகச் சொன்னார்கள்

தேடிக்கொண்டிருக்கிறேன்
எங்கேயாவது
நான் தென்படுகிறேனா என்று

விருந்தினர்

திட்டப்போகும்
அம்மாவை சமாளிக்க
பல பதில்களை
யோசித்து
பலமான ஒன்றைத்
தேர்ந்தெடுத்து
வீட்டிற்குள்
அடியெடுத்து
வைக்கிறாள் சிறுமி

இப்படி
நெனைஞ்சி வந்து
நிக்கிறியே
பதறுகிறாள் அம்மா

அது இல்லம்மா
மழைய விருந்தினரா
கூப்பிட்டுக்கிட்டு
வந்திருக்கேன்
சொல்கிறாள் மகள்

மகளின் பதிலில்
பரவசமாகித்
திட்டுவதை
மறக்கிறாள் அம்மா

Friday, December 18, 2009

அனுபவ சித்தனின் குறிப்புகள்

27

வாழும் போதே
பழகு
வாழும் போதே
மரணத்தை அள்ளித்
தின்னப் பழகு

உயிரின் பாடல்

அவன்
பியானோவின்
மேலேறி
நின்று
அதைச்
செய்தான்

அவன் உடல்
இசை வாகனத்தில்
விழுந்தபோது
அதிரத் தொடங்கியது
உயிரின் பாடல்

நிறமற்ற நான்

நான் வரைந்த
குருட்டுப்பெண்
வண்ணங்களின்
கண்களால்
பார்க்கிறாள்
நிறமற்ற என்னை

தலையாட்டுதல்

வாடாமல் ஒரு காடு

தலைப்பைக் கேட்டுத்
தலையாட்டின பூக்கள்

Tuesday, December 15, 2009

காற்றாடியும் குழந்தையும்

கடற்கரையிலிருந்து
திரும்பிய போது
குழந்தைக் கேட்டாள்

அப்பா நான் தொலைச்ச
காத்தாடி என்னாவும்

வானத்தில
ஒரு அம்மா இருக்கா
அவ பத்திரமா
இது மாதிரி தொலைஞ்ச
காத்தாடிகளப் பாத்துக்குவா

அப்பாவின் பதிலில்
தூங்கத் தொடங்கினாள்
குழந்தை

புன்னகைத்தாள் அம்மா

தன் குழந்தையை
நினைத்தபடி
ஓட்டினார் ஆட்டோக்காரர்

வரும்

வரும்
இன்றிரவை
பெருமைப்படுத்த
ஒரு பெருங்கனவு
வரும்

பயம்

சத்தம் போட்டு
மகனைக் கண்டிக்கும் அப்பா

அடித்து விடுவாரோ என்று
அம்மா பயப்படுகிறாள்

அடித்து விடுவோமே என்று
தந்தையும் பயப்படுகிறார்

Sunday, December 13, 2009

அனுபவ சித்தனின் குறிப்புகள்

25

ஆடுகிறது
தூக்குக் கயிறு
இறந்துகொண்டே வருகின்றன
நொடிகள்
முப்பத்தி ஏழாவது நொடியில்
நானும்

26

யார் தொலைத்த
கண்ணீரோ
என் கண்ணில் வந்து
தொலைக்கிறது

Saturday, December 12, 2009

குழந்தைகளின் பெயர்கள்

தன் பிறந்த
நாளுக்கு
எல்லோருக்கும்
சாக்லெட்
கொடுத்த கொண்டே
வந்த குழந்தை
என்னிடம் வந்தபோது
தீர்ந்து போயிருந்தது

ஏமாற்றத்துடன்
ஒருவரை ஒருவர்
பார்த்துக் கொண்டோம்

பரவாயில்லை
உன் பெயரைச் சொல்
போதும் என்றேன்

சொல்லிய
குழந்தையின் பெயரில்
இனிப்பு மழை

குழந்தையின் டப்பாவில்
நிரம்பி இருந்தது
சாக்லெட் எடுத்திருந்த
குழந்தைகளின் பெயர்கள்

Friday, December 11, 2009

கோடு

நீண்டு கொண்டிருந்த கோடு
நிற்கவில்லை
பேனாவின் மை
தீர்ந்த பின்னும்
கோட்டின் பயணத்தைத்
தொடந்தது
விரல்களின் ரத்தம்

Wednesday, December 09, 2009

இந்த வரிக்குப் பிறகு

என் குழந்தையின்
சிரிப்பைப் போல்
நுரைத்துப் பொங்குகிறது
மதுக்கோப்பை

இந்த வரிக்குப் பிறகு
என்னை அழைத்துப்போனது
ஒரு குழந்தை
ஒயின் ஷாப்பிலிருந்து

மரத்தின் கதை

சுவைத்த பழம்
சொல்லிக் கொண்டே வந்தது
தான் வளர்ந்த
மரத்தின் கதையை

அது இன்னும்
சுவைகூட்ட
தின்று முடித்தேன்
பழத்தையும்
மரத்தையும்

ஒரே ஒரு சொல்

ஒரு சொல்லை
ஒரே ஒரு
சொல்லை
பார்த்தேன்

மனதை
கிறங்கடிக்கும்
ராகத்தைப்
பாய்ச்சியது

கவிதையைப்
போர்த்திக் கொண்டு
ஆடவும்
தொடங்கியது

எப்போது

தன்னை முழுதுமாய்
கருணைக்கு அர்ப்பணம்
செய்யும்
ஒரே ஒரு கண்ணீர்துளி
உங்களிலிருந்து
எப்போது விழும்

காலடியில்

தன் காலடியில்
காற்றை
நட்டுச் செல்கிறது
குழந்தை
அதில் குலுங்கும் பூக்கள்
இறைவனின் சிரிப்புடன்

தீராத ஒளி

குழந்தையின் புன்னகையில்
ஏற்றப்படும் ஒற்றைத் திரி
தீராத ஒளியை வழங்குகிறது
உலகுக்கு

Sunday, December 06, 2009

அனுபவ சித்தனின் குறிப்புகள்

23

நீண்ட தூரம்
வந்துவிட்டீர்கள்
என்ன செய்யப் போகிறீர்கள்

வழி சொல்வதைக்
கேட்கப் போகிறேன்

24

பிற
பிறக்காதே

சேர்
சேராதே

போ
போகாதே

விழு
விழாதே

பார்
பார்க்காதே

அழு
அழாதே

ஓடு
ஓடாதே

துடி
துடிக்காதே

சாவு
சாவாதே

இரண்டும் நீ

இரண்டுமாய்
நீ நீ

வேறென்ன

சொல்

சரியாக சொல்
நீ நிலவைத்
தொட்டாயா

ஆமாம்
இன்னும் சரியாக
சொல்வதென்றால்
நிலவு
என்னைத் தொட்டது

பிறகு

ஈக்களைப் போல்
மொய்க்கும்
வார்த்தைகளிடமிருந்து
முதலில் என்னைக்
காப்பாற்ற வேண்டும்
பிறகு நான்
கவிதையைக்
காப்பாற்றிக் கொள்கிறேன்

Tuesday, December 01, 2009

சம்பவம்

திசைமாறிப்
போன எறும்பு
கவிதையின்
இருபத்தி ஏழாம் வார்த்தையை
தீண்டியபோது
அங்கு புதைத்து வைக்கப்பட்டிருந்த
கன்னி வெடி
வெடித்தது

சிதறின
மொத்தப் பக்கங்களும்

சம்பவத்திற்கு
யாரும் பொறுப்பேற்க வேண்டாம்
என்று எழுதப்பட்டிருந்த காகிதம்
தீக்கிறையாகி இருந்தது
பக்கத்தில் எறும்பும்

சகாவின்
இறந்த செய்திகேட்டு
வந்துகொண்டிருந்தன
மற்ற எறும்புகள்
அஞ்சலி செய்ய

(உரையாடல் கவிதைப் போட்டிக்கான கவிதை)

பேச்சு

ஊருக்கு வந்த மகன்

இரவு தாண்டிப்
போகிறது பேச்சு

தான் தொலைந்த
நகரத்தைப் பற்றிச்
சொல்கிறான் மகன்

அவன் தொலைத்த
கிராமத்தைப் பற்றிச்
சொல்கிறாள் அம்மா

சுவையான ஒன்று

தேநீர் அருந்திய பெரியவர்
சுவையாக ஒன்றை
சொல்லிவிட்டுப் போனார்

முதுமைய நட்பாக்கிட்டா
வயசு எதிரியா தெரியாது

காலடியில் வானம்

உன் காலடி பூமியாக
நான் வரவா
வானம் கேட்பதைக்
கேட்காமல்
விளையாடும் குழந்தை

இருள் சதுரங்கள்

வந்துவிட்டது மின்சாரம்
இருளில்
எத்தனை சதுரங்கள்
வரைந்தேன் என்று
தெரியவில்லை

Saturday, November 28, 2009

தேடிப்பார்

கவிதையை முத்தமிட்ட
நட்சத்திரத்தின்
பெயர் கேட்டேன்
உன் கவிதையில்
தேடிப்பார்
எனச் சொல்லிவிட்டு
மறைந்து போனது

பாவத்தின் நூலகம்

தவறுதலாக நுழைந்து விட்டேன்
பாவத்தின் நூலகம்
என்று எழுதி இருந்தது
எனக்கான புத்தகம்
இங்கில்லை என
திரும்பியபோது
எனது பாவங்கள் பற்றிய
புத்தகத்தை ஒருவர்
எடுத்துக் கொண்டிருந்தார்

Tuesday, November 24, 2009

ஒளித்து வைத்தல்

என் நாளைப் பறித்து
தன் சிரிப்பில்
ஒளித்து வைக்கிறது குழந்தை

Saturday, November 21, 2009

அனுபவ சித்தனின் குறிப்புகள்

20

இன்னும் கொஞ்சம்
இருள் கொடுங்கள்
என்னிடம்
ஒளி இருக்கிறது

இன்னும் கொஞ்சம்
வலி கொடுங்கள்
என்னிடம்
கண்ணீர் இருக்கிறது

21

கையிலிருக்கும்
முட்டை
முட்டைக்குள்ளிருக்கும்
குஞ்சு
குஞ்சுக்குள்ளிருக்கும்
உலகம்
உலகத்திற்குள்ளிருக்கும்
நான்

22

நேற்றை
தன் கோப்பையில்
நிரப்பி
குடிப்பவனுக்கு
என்றும்
தீராது தாகம்

காலம்

காலண்டரில்
சிதறிய மழைத்துளி
துளியிலிருந்து
பெய்கிறது காலம்

உருவாதல்

கவிதையில் உருவான
பட்டாம் பூச்சி
பூக்களுக்குப் போகாமல்
வார்த்தைகளையே
மொய்க்கிறது

அன்பைக் கொடுங்கள்

எதையும்
மறைக்கத் தெரியாமல்
பேசும் நண்பர்
பார்க்க வந்தபோது
களைப்புடன் இருந்தார்

அவர் புறப்பட்டபோது
ஏதாவது வேண்டுமா என்றேன்

கொஞ்சம் அன்பைக் கொடுங்கள்
தின்றுகொண்டே
போகிறேன் என்றார்
சிரித்தபடியே

நானும் புன்னகைத்துத் தர
வாங்கிக் கொண்டார்
அன்பையும் பணத்தையும்

கரையோரம்

கரையோரம்
நடந்து போகும்
தந்தையும் மகனும்

அப்பா சொல்வதை
அலைகளைப் போல வாங்கி
கடலாகிக் கொண்டிருக்கிறான்
மகன்

(ஆனந்த விகடன்,30.12.09
இதழில் வெளியானது)

ராகத்தின் பெயர்

ரயிலில்
புல்லாங்குழல் வாசித்த
பெரியவரிடம்
அது என்ன ராகம் என்றேன்

தெரியாது என்றார்

பெயரைக் கேட்டேன்
சொன்னார்

துணையாக வந்தது
அவர் இசை

இறங்கியபோது
அவரிடம் சொன்னேன்
அந்த ராகத்தின் பெயர்
தெரியுமென்று

வியப்புடன் பார்த்தார்

அவருக்குத் தெரியாது
அவர் பெயரை
அந்த ராகத்திற்கு
நான் வைத்திருப்பது

Wednesday, November 18, 2009

பெயர் வைக்கும் சிறுமி

நாய்க்குட்டிகளுக்கு
பெயர் வைக்கும் சிறுமி
நாய்க்குட்டிகளிடம்
கேட்கிறாள்
தனக்கு பெயர்
வைக்கச் சொல்லி

படி

படி படி என்று
சொன்ன அப்பாவை
படிக்கத் தொடங்கியது
குழந்தை

கனவின் வரைபடம்

சொட்டு சொட்டாய்
விழும் இரவு
கலைந்து கொண்டிருக்கும்
கனவின் வரைபடம்

அழைத்து வருகிறது

வானவில்லை
அழைத்து வருகிறது
வண்ணத்துப்பூச்சி

வண்ணத்துப்பூச்சியை
அழைத்து வருகிறது
வானவில்

ஆனாலும்

எதிர்ப்பை மறந்து
கைகுலுக்கிக் கொண்டோம்
ஆனாலும்
உள்ளோடிப் போயிருந்தது
விரோதத்தின் விஷம்

Saturday, November 14, 2009

அனுபவ சித்தனின் குறிப்புகள்

15

ஏற்று
காற்றுத் திரியை
காற்றில்
அணையாமல் எரிய

16

சூன்யம் தின்னும் குரங்கு
கிளை தாவும்
தாவும்
தாவும்
தா
வும்
மரணம் தாவும்

17

இறந்துபோனவர்கள்
விழித்துக் கொண்டார்கள்
தூங்கியவர்கள்
எழவில்லை

18

என் அரசவையில்
மக்களென்று
யாருமில்லை
எல்லோரும்
ராஜாக்கள்தான்

19

எல்லா முடிந்த
கவிதையிலும்
ஒரு முடியாத
கவிதை

Friday, November 13, 2009

மன்னிப்புத் தோட்டம்

என் தவறுகள்
கொட்டிக் கிடக்கின்றன
மன்னிப்புத் தோட்டத்தில்
மன்னிப்புகள்
தீர்ந்து போகும் முன்
நிறுத்தியாக வேண்டும்
கொட்டுவதை

Monday, November 09, 2009

அவனும் நானும்

அவன் பைத்தியக்காரனைப்போல
காகிதத்தைத்
தின்று கொண்டிருந்தான்

அருகில் போய்
ஏன் அப்படிச் செய்கிறாய்
எனக் கேட்டேன்

எனக்கு பசித்தது
காகிதத்தில்
ஒரு ஆப்பிளை வரைந்தேன்
சாப்பிட்டு விட்டேன்
எதற்கு பைத்தியக்காரனைப்போல
பார்க்கிறாய்
போ என்றான்

Sunday, November 08, 2009

பறவையின் உயிரில்

அந்தப் பறவையைக்
கொன்றவர்களுக்குத்
தெரியவில்லை

அதன் உதட்டில்
குஞ்சின் பெயர்
ஒட்டி இருந்ததும்
வாயில்
குஞ்சுக்கான
உணவிருந்ததும்

அனுபவ சித்தனின் குறிப்புகள்

12

எதுவும் செய்யவில்லை
நான்

எதையாவது செய்யாமலில்லை
இன்னொரு நான்

13

எல்லோருக்குமாக
தற்கொலை
செய்து கொண்டேன்
எழுபது முறை

எனக்காக
வாழ வேண்டும்
ஒரு முறை

14

காட்டுக்கு
மிருகங்கள்
தேவை என்பதால்
காட்டை
அழிக்கவில்லை

மிருகங்களுக்கு
காடு
வேண்டும் என்பதால்
மிருகங்களை
அழிக்கவில்லை

எனக்குள் இருக்கிறது
காடும் மிருகங்களும்

Saturday, November 07, 2009

துறவி அவன் மற்றும் பூ

நீங்கள் வரைந்த
பூவிலிருந்து
துர்நாற்றம் வீசுகிறது

சொல்லியவனைப் பார்த்து
சிரித்தபடியே
துறவி கேட்கிறார்

எப்படி சொல்கிறாய்
உன் கையில்
பூ இருக்கிறது
என் கையில்
தூரிகை இருக்கிறது
நமக்கிடையே
வெள்ளைத்தாள்
படபடக்கிறது

கண் மூடி
அவர் கேள்வியை
முகர்ந்த அவன்
அதில் சுகந்தம் வீசுகிறது
எனச்சொல்லி
பூவை
துறவியிடம் தர
அவர் வாங்கி
வெள்ளைத் தாளில்
நடுகிறார்

வளர்ந்து விரியும்
பூவை பார்த்து
வியக்கும் அவன்
எட்டிப் பிடிக்க
நினைக்கும் வாசம்
இடம் மாறிக்கொண்டே
இருக்கிறது

Monday, November 02, 2009

அனுபவ சித்தனின் குறிப்புகள்

11

தெய்வம் நின்று கொல்லும்
நான் தெய்வமாக
விரும்பவில்லை

பெயர் தேவையில்லை

அந்தக் குழந்தையிடம்
பெயர் கேட்கத்
தோன்றவில்லை
தேவதைக்குப் பெயர்
தேவையில்லை

கடவுள் சொன்ன கவிதை

கடவுள் சொன்ன கவிதையை
நினைத்துப் பார்த்தபோது
இருந்தது
எழுதிப் பார்த்தபோது
மறைந்தது

Sunday, November 01, 2009

தேடிய மழை

வானத்தை வெட்டி
தொலைந்த
மழையைத் தேடினேன்

சிரித்தபடியே
மேகம் சொன்னது
அது பூமிக்கு போய்
நீண்ட நாளாகிறது
போய்ப் பார்

வித்தை காட்டிய சிறுமி

வித்தை காட்டிய சிறுமியை
பிடித்துப் போனது
இறங்கி வந்து
அம்மாவின்
மடியில் அமர்ந்து
ஆசையாய் எதையோ
சாப்பிட்டபோது

Saturday, October 31, 2009

ஒருவரில் ஒருவர்

தெரியாதது போல்
கேட்டுக் கொண்டிருந்தவர்
கடைசியில் சொன்னார்
தனக்கு எல்லாம்
தெரியும் என்று

தெரிந்தது போல்
சொல்லிக் கொண்டிருந்தவர்
பிறகு சொன்னார்
தனக்கு எதுவும்
தெரியாது என்று

விளையாட்டு

அடிக்கடி நடக்கும்
விளையாட்டு
என்னைத் தொலைத்து
நானே கண்டெடுப்பது

விடுமுறை

இன்று விடுமுறை
எடுத்துக் கொண்டேன்
தூக்கத்தை
ரசிக்க வேண்டும்
தூங்கியபடி

விருந்து

பனித்துளிக்கு
விருந்து வைத்தேன்
கவிதையில்

கடிகாரம்

யாருமற்ற வெளியில்
ஓடிக்கொண்டிருக்கும்
கடிகாரம்
தனக்கு நேரத்தைச்
சொல்லியபடி

Friday, October 30, 2009

அனுபவ சித்தனின் குறிப்புகள்

09

சுருண்டு கிடக்கும் கயிறு
உங்கள் கால்களின்
மிதியைப் பொருத்து
பாம்பாய் மாறும்

சுருண்டு கிடக்கும் பாம்பு
உங்கள் கால்களின்
மிதியைப் பொருத்து
கயிராய் மாறும்

10

இல்லாத ஒன்றிலிருந்து
இருக்கும் ஒன்றுக்கு
வந்தேன்

இருக்கும் ஒன்றிலிருந்து
இல்லாத ஒன்றுக்கு
சென்றேன்

Monday, October 26, 2009

தேடி நடப்பவன்

கையில் கோடரியுடன்
தொண்டை வறள
தேடி நடப்பவன்
கனத்த மனத்துடன்
சொல்கிறான்
அய்யோ
எல்லா நிழலையும்
வெட்டிட்டனே
பாம்பாய் நீளும்
அவன் நிழலை
கொத்தி தின்கிறது
வெயில்

Sunday, October 25, 2009

மீட்சி

நம்ம வீட்டுக்கு
எப்பப் போவம்மா
முள்வேலி போல் தைக்கிறது
குழந்தை கேட்பது

விடை தெரியாத தாய்
குழந்தையின்
கவனத்தை மாற்றி
கதை சொல்லி
தூங்க வைக்கப் பார்க்கிறாள்

தூங்கிய
குழந்தையின் உதடுகள்
முணுமுணுக்கிறது
நம்ம வீட்டுக்கு
எப்பப் போவம்மா

Thursday, October 22, 2009

நாங்கள்

வேகமாய் வந்தும்
விட்டு விட்டோம்

ரயில் போயிடுச்சி
நான் கோபப்பட்டேன்

ரயில் போயிடுச்சே
மனைவி வருத்தப்பட்டாள்

ரயில் போயிடுச்சா
குழந்தை சிரித்தாள்

(இந்த கவிதை அலைவரிசை
என்ற தலைப்பில்,ஆனந்த விகடன்
2.12.09இதழில் வெளியானது)

தொடுவானத்தில்

தொடுவானத்தில்
எழுதி வைத்துவிட்டுக் கிளம்பினேன்
காத்திருப்பின் குறிப்புகளை

நாளை வந்து
பார்க்க வேண்டும்
வானம் என்னவெல்லாம்
திருத்தி இருக்கும் என்பதை

அனுபவ சித்தனின் குறிப்புகள்

07

உடைந்து போகாமலிருக்கிறது
உடைந்து போன
நான்கள்

08

தொடர்ந்த கேள்விகள்
சங்கிலியாகி
இழுத்து வருகிறது
பதிலை

Tuesday, October 20, 2009

பெயர்

நான் இல்லாத போது
பார்க்க வந்தவர்கள்
என் பெயரின் மேல்
நிறங்களைப் பூசி
சென்றனர்

ஒரு வண்ணத்தில்
அன்பு இருந்தது

ஒரு வண்ணத்தில்
கோபம் இருந்தது

பொறாமை,வருத்தம்,வன்மம்
இப்படி படிந்திருந்தன
நிறைய

ஒவ்வொன்றாய்
உரித்துப் பார்க்க
நிறமிழந்து போயிருந்தது
என் பெயர்

பதில்

எறும்பு
சுமந்து சென்றது
ஒரு மலையை

எப்போது இறக்கி வைப்பாய்
கேட்டேன்

மலை விரும்பும் போது
பதில் வந்தது

Sunday, October 18, 2009

மிதக்கும் இசை

படுத்திருக்கும்
வயலின் போல
மீன்தொட்டி

நகரும் மீன்களின்
லயத்திற்கேற்ப
மேலேறி
மிதக்கிறது இசை

Saturday, October 17, 2009

பார்க்கும் பொம்மை

தன் குழந்தைக்கு
பொம்மை
வாங்க முடியாது
எனத் தெரிந்து
பேரம் பேசி
வெளியேறப் பார்க்கிறார்
அப்பா

பாசம் உணர்ந்து
கட்டுபடியாகும் பேரத்துக்கு
படிய வைத்து
விற்கப் பார்க்கிறார்
கடைக்காரர்

பொம்மைப் பார்க்க
போராடுகின்றனர்
இருவரும்

Thursday, October 15, 2009

தெரிதல்

பசித்தவன்
கண்களில் தெரிந்தது
இல்லாத வயிறு

வரைதல்

வண்ணங்களிலிருந்து
இசை எடுத்து
வரைகிறேன்
ஒரு புல்லாங்குழல்

அனுபவ சித்தனின் குறிப்புகள்

04

கைபிடித்த காற்றை
திறந்து பார்த்தேன்
பத்திரமாயிருந்தது
பிரபஞ்சத்தில்

05

முற்றுப்புள்ளிக்கு
முன்னால் இருக்கிறது
நான் படித்த கதை

முற்றுப்புள்ளிக்கு
பின்னால் இருக்கிறது
நீங்கள் படிக்க வேண்டிய கதை

06

நீங்கள் விரலாக
பார்ப்பதற்கு முன்
ஒரு வேண்டுகோள்

இந்த ஆறாவது விரலை
நான் வாளாகவும்
பயன்படுத்துவேன்

Wednesday, October 14, 2009

மையப்புள்ளி

வட்டத்தின் உள்ளே
சுற்றும் எறும்பு
மாற்றிக் கொண்டே இருக்கிறது
மையப்புள்ளியை

வியூகம்

நாவின் மேலே
வியூகம் அமைக்கும்
வார்த்தைகள்

நாவின் அடியில்
பதுங்கிய கோபம்

ஒற்றைச் சலங்கை

மேடையில் கிடக்கும்
ஒற்றைச் சலங்கை
ஆடியாடித் தேடுகிறது
அனாதையாய்
விட்டுப் போனவளை

ஊஞ்சல்

ஊஞ்சலில்
ஆடிய குழந்தை
தூங்கிப் போனது

தாலாட்டிய ஊஞ்சலும்
தூங்குகிறது
அசைவைக் கேட்டபடி

Friday, October 09, 2009

அனுபவ சித்தனின் குறிப்புகள்

01

எனக்குள் நேராய்
தொங்கும் வெளவால்கள்
நான் தலைகீழாய்
இருப்பதாய்
பரிகசித்துப் பறக்கின்றன

02

நான் இறந்த செய்தி கேட்டு
பார்க்க வந்த
முதல் நண்பர்
சிந்திக் கொண்டிருந்தார்
என் கண்ணீரை

03

…65…64…63
என எண்களைச்
சுருக்கிக் கொண்டே வருகிறது
வெடிகுண்டு

சீக்கிரம் ஓடிப்போய்
தொலைக்காட்சி பெட்டிமுன்
அமர்ந்து கொள்ளுங்கள்

சேதாரங்கள் சோகங்கள்
உங்களுக்கு
'லைவ்' வாக வரும்

Wednesday, October 07, 2009

எலக்ட்ரானிக் விலங்கு

கதை தட்டுப்பாடு
தடைகளைத் தாண்டி
மூன்று வருடங்களாக
எங்கள் பழைய டீவியில்
ஓடிக்கொண்டிருக்கிறது
அந்த மெகா சீரியல்

நாங்கள் டீவி மாற்ற போட்ட
திட்டம் எல்லாம்
கை நழுவிப் போனது

அது ஒரு
இறந்து போன
எலக்ட்ரானிக் விலங்கு
என்றான் விஞ்ஞானம்
படிக்கும் மகன்

ஒரு நாள்
மெகா சீரியலில்
பேசிக்கொண்டிருந்தார்கள்
எல்லோரும்

இந்த மங்கிப் போன டீவிய
இவுங்க எப்ப மாத்தப் போறாங்க

என் மேல்

நான் தூக்கி எறிந்த
ஒவ்வொரு கணமும்
இறந்த பழமாக
விழுந்தது என் மேல்

நிகழ்வின் முடிவில்

நிகழ்வின் முடிவில்
எப்போதும் பேசிக் கொள்கிறோம்

இந்த விபத்தை
தவிர்த்திருக்கலாம்

Tuesday, October 06, 2009

காத்திருத்தல்

காத்திருந்து
காத்திருந்து
பழகிப் போச்சி
காத்திருக்க

Monday, October 05, 2009

இல்லாதது

இல்லாத ஒரு கவிதையை
இல்லாத ஒருவன் எழுத
இல்லாத மற்றொருவன் படிக்கிறான்
இல்லாத வேறொரு இடத்திலிருந்து

அனுமதி

எனது தற்கொலைக்கு
அனுமதி கிடைத்து விட்டது
என்னிடமிருந்து

Friday, October 02, 2009

வானவில்

உதட்டில் ஊர்ந்து
போகிறது வானவில்
மெளத் ஆர்கன்
வாசிக்கும் சிறுவன்

அரங்கில் அவன்

அரங்கில் நடித்து முடித்து
பார்வையாளர் இருக்கையில் அமர்ந்து
மீண்டும் பார்த்து
சரி செய்கிறான்
மறுபடி பழுதின்றி தயாராக

வெறும் மேடையை
ஏன் வேடிக்கைப் பார்க்கிறாய்
என்று அவனைப் போகச் சொல்கிறான்
கதவை மூடும் காவலாளி

பூவிலிருந்து...

பூவிலிருந்து
பூக்களைக்
கிள்ளி எறிகிறது
குழந்தை

வார்த்தைகளின் தூரத்தில்

இன்னும் சில நொடிகளில்
இந்த பல்லி
அந்த பூச்சியைத்
தின்றுவிடக் கூடும்
என தட்டச்சு செய்யும் மனம்

வார்த்தைகளின் தூரத்தில்
அப்படியே இரண்டும்
பல்லி பசியற்று
பூச்சி மரண பயமற்று

நீரில் சதுரங்கம்

நீரில் சதுரங்கம் ஆடுகின்றன
சிறுவன் எறியும் கற்கள்

தோல்வியை
ஒத்துக் கொள்கிறது குளம்
வட்ட புன்னகை செய்து

ஞாபகத்திற்காக

வியந்து பார்த்து
ஏறிய மலை
திரும்பி இறங்குகையில்
கையில் சில
கற்களைத் தந்திருந்தது
ஞாபகத்திற்காக

Tuesday, September 29, 2009

தலைப்பு

நள்ளிரவில் எழுதிய கவிதைக்கு
பெயர் தேடிக் கொண்டிருந்தேன்
வெளிச்சத்தை தலைப்பாக
விட்டுச் சென்றது விடியல்

Sunday, September 27, 2009

மைக்கேலின் ஓவியம்

வரைந்தபடி சொல்கிறான் மைக்கேல்
தாளில் சிலுவையை
அறைந்து கொண்டிருக்கிறேன்

குழந்தையின் கடல்

கடலை வீட்டுக்கு கூப்பிட்டுப் போகலாம்
என அழுது அடம் பிடித்தக் குழந்தை
தூங்கிப் போனது
அலைகளின் தாலாட்டுக் கேட்டு

நாங்கள் திரும்பி வந்தோம்
கடலை விட்டு விட்டு

...இருக்கிறது

திரும்பாமல் போகலாம்
நம்பிக்கை இருக்கிறது

திரும்பிப் போகலாம்
பாதை இருக்கிறது

Tuesday, September 22, 2009

பிரிட்ஜின் மீது ஒட்டப்பட்டிருக்கும் கவிதை

பிரிட்ஜின் மீது
ஒட்டப்பட்டிருக்கிறது
ஒரு கவிதை

திறந்து மூடும் நேரத்தில்
சின்ன வரிகளைப்
படித்துவிட முடிகிறது

ஒட்டப்பட்டிருக்கும் கோணத்தில்
கவிதையால் வாசிக்க முடிகிறது
முழு வீட்டையும்

பிரிட்ஜ்க்குள் இருக்கும் பழம் போல
எழுத்து கெடாமல் இருக்குமா
சிரித்தபடிக் கேட்கிறாள் பாட்டி

அந்தக் காகிதம்
குளிர்ச் சாதனப் பெட்டியின்
அழகைக் குறைக்கிறது
என்கிறாள் மருமகள்

வேலைக்காரியின் மகள்
சத்தம் போட்டு
எழுத்துக் கூட்டிப் படிக்கிறாள்

ஒரு விருந்தினர்
யார் எழுதியது எனக்கேட்டு
காப்பியைக் குடித்து முடித்து
பாராட்டிச் செல்கிறார்

இதனால்
கிழிக்கப்பட இருந்த கவிதையின்
ஆயுள் நீள்கிறது

தூக்கம் வராத அப்பா
ஒரு நள்ளிரவில்
அருகில் போய் படித்து
கையால் வருடிக் கொடுக்கிறார்

சிலிர்த்துப் போகின்றன எழுத்துக்கள்

கவிதையின் பக்கத்தில்
ஆப்பிள் ஓவியத்தை ஒட்டி வைத்து
எப்படி இருக்கிறது
கேட்கிறாள் மகள்

கைதட்டி ரசித்து
அவளைப் பாராட்டிய அப்பா
படித்துப் பார்க்கிறார்

கூடி இருக்கிறது
கவிதையின் சுவை

Monday, September 21, 2009

சே குவாராவின் கனவில்

சே குவாராவின் கனவில்
நான் வருவது போல்
கண்ட கனவு
சொல்லிக்கொண்டே இருக்கிறது

விழித்திரு எப்போதும்

Friday, September 18, 2009

உண்மை

என் வயதைவிட
என் பொய்களுக்கு
வயது அதிகம்

என் மரணத்தைவிட
என் பொய்களுக்கு
உயிர் அதிகம்

Thursday, September 17, 2009

நீந்தும் வரிகள்

மீனாக நீந்து
இல்லை பிணமாக
கரை ஒதுங்கு

அப்பாவின் இந்த வரிகளை
நான் நினைக்க மறந்தாலும்
அவை நீந்த மறப்பதில்லை
என் செயல்களில்

காற்றின் பெருவெளி

காற்றின் பெருவெளியில்
அப்பாவின் இசை

அவர் விரல்கள் ஒற்றி எடுக்க
பரவுகிறது நாதம்
புல்லாங்குழலிலிருந்து

அருகே வரும் குழந்தை
நாய்க்குட்டி பொம்மையை
வைத்துவிட்டுப் பார்க்கிறது

வாசிப்பின் இடையே அப்பா
மெல்ல கண் திறக்கும்போது
புல்லாங்குழலைக் கேட்கிறது

வாங்கிப் போய் அதை
ஒரு பொம்மையாக்கி விளையாடுகிறது

புல்லாங்குழலைத் தூக்கி எறிகிறது

பின் ஓடிப்போய் எடுக்கிறது

பிரியமான நாய்க்குட்டியைத்
தட்டுகிறது

தன் வாயில் வைத்து
ஊதிப் பார்க்கிறது

ததும்பும் ஆனந்தத்துடன்
இரு வேறு அனுபவங்களில்
திளைக்கிறார் அப்பா

குழந்தையின் கையில்
இசை விளையாடுவது போன்றும்

தனக்குத் தெரியாத இசையை
குழந்தை கற்பிப்பது போன்றும்

Tuesday, September 15, 2009

தேவதைகளின் கணக்கு

விண்ணிலும் மண்ணிலும் உள்ள
தேவதைகளின் கணக்கு
என்னிடமில்லை

என்றாலும்
தேவதைகள் எல்லோரையும்
அடக்கிவிட முடியும்
இந்தக் குழந்தையின்
ஒற்றைப் புன்னகைக்குள்

சவப்பெட்டியின் அடியில்

சவப்பெட்டியின் அடியில்
பாதி நசுங்கிய மண்புழு
மீதி உயிரோடு போராடுகிறது
வெளியே வர

ஒரு புராதன சொல்

ஒரு புராதன சொல்
கவிதையில் புகுந்து கொண்டு
மொத்த கட்டுமானத்தையும்
கலைத்துப் போட்டது

ஒரு அகராதியின் குணம்
தன்னிடம் இருப்பதாக
சொல்லியபடி
எழுதிய காகிதங்களைத்
தின்று முடித்தது

பின் ஓடிப் போனது
புராதன வெளிக்குள்

சொல் சென்ற
வழி எங்கும்
இறைந்து கிடந்ததன
காலத்தின் தூசிகளும்
கவிதையின் சில்லுகளும்

Saturday, September 12, 2009

சாவி

திரும்பி வருகையில்
சாவியைத் தொலைத்தவர்கள்
தேடிக் கொண்டிருந்தார்கள்

தன் சின்ன நோட்டில்
சாவியை வரைந்த சிறுமி
அதை எடுத்து
பூட்டைத் திறந்து
உள்ளே செல்லும்போது
சொல்லிவிட்டுப் போனாள்

உங்கள் சாவி கிடைத்தவுடன்
திறந்து கொண்டு
வாருங்கள்

முனுசாமி தாத்தா

காலில் சக்கரம் மாட்டியது போல்
சுற்றி வருவார் முனுசாமி தாத்தா

எது கேட்டாலும்
அதுக்கெல்லாம் நமக்கு எங்கப்பா
நேரம் இருக்கு என்று
சொல்லிவிட்டு பறப்பார்
இளமை சாரல் அடிக்க

பாட்டி ஒரு நாள் கோபத்தில்
கத்தினாள்

சிரித்தபடியே தாத்தா
சொல்லிவிட்டுப் போனார்

அட சாவறதுக்கெல்லாம்
நமக்கு எங்க நேரம் இருக்கு

வழிகாட்டி பலகை

வழிகாட்டி பலகை
சுழல்கிறது
காற்றின் குரலுக்கேற்ப

பயணம் விரிகிறது
எல்லா திசைகளிலும்

எதுவுமற்று எல்லாம்

நானற்று கவிதை
கவிதையற்று நான்
எதுவுமற்று எல்லாம்

Friday, September 11, 2009

குட்டிச் சித்திரங்கள்

என் ஒவ்வொரு கேள்விக்கும்
பதிலை படமாக
வரைந்து காட்டினாள் குழந்தை

அவள் பிஞ்சு விரல் பிடித்து
வெளியே வந்தன
குட்டிச் சித்திரங்கள்

வண்ணங்களில் நுரைத்து
மிதந்து போனது
குழந்தையின் மொழி

முற்றிலுமாக
என் கேள்விகள் வடிந்து விட
கடைசியாக
அவள் பெயர் கேட்டேன்

எல்லா வண்ணங்களையும் குழைத்து
என் மேல் பூசி விட்டு
வீட்டுக்குள் ஓடிப்போய்
கதவைச் சாற்றிக் கொணடாள்

இந்த வண்ணங்களில்
தேடிக் கொண்டிருக்கிறேன்
குழந்தையின் பெயரை

Wednesday, September 09, 2009

மின்னல் குட்டி

அணில் சொன்ன கதையில்
மரம் இருந்தது

மரத்தில் விளையாடிய போது
கதை மறைந்தது

ஒரு கிளையில் அணிலும்
மறு கிளையில் நானும்

எனது வார்த்தைகளை
பழங்களாகத் திருப்பித் தந்தது

ஒவ்வொரு பழமும்
ஒவ்வொரு ருசியில்

கிளை அசைத்து
ஒளியை ஆடவிட்டது

குதித்து உச்சி ஏறி
கை தட்டி சிரித்தது

பயத்தைப் போட்டு விட்டு
மேலே வா என்றது

நகராத என் மேல் இரக்கப்பட்டு
கீழிறங்கியது

ஒரு பொம்மை போல்
என்னை வைத்து
விளையாடிய அணிலுக்கு
மின்னல் குட்டி
என்று பெயர் வைத்தேன்

தன் சகாக்களுக்கு என்னை
அறிமுகம் செய்தது

நீ மாமிசம் புசிப்பவனா
வேகமாய் கேட்டது
சற்று வயதான அணில்

எனது ஆமாம்
கோபத்தை உண்டாக்கியது
அந்த மையத்தில்

விருந்தினரை நாகரீகமாக நடத்த வேண்டும்
எனக்காக வாதாடிய மின்னல் குட்டி
மறைந்தது போனது
கதையில் என்னை விட்டு விட்டு

Sunday, September 06, 2009

வரியின் அடியில்

என் அழுகையில்
கண்ணீர் ஞானமடைகிறது
இதை எழுதிய போது
வரியின் அடியில்
ஓடியது புன்னகை

வனம்

உள்ளங்கையில்
மரம் முளைத்தது

தலையில் பறவைகள்
கூடு கட்டின

வியர்வையில் மிதந்தன
உதிர்ந்த இலைகள்

மரங்கொத்தி கையில்
ஓட்டைகள் போட்டு
புல்லாங்குழலாக்கி இசைத்தது

மூச்சுக்குள் ஓடி
வெளி வந்து விளையாடின
பனித்துளிகள்

மயிர்கால்கள் புற்களாயின

கால்களின் ஈரத்தில் மன்புழுக்கள்
நெளிந்தன

புன்னகையைத் தடவிப்பார்த்த
குருவி நன்றி சொல்லி
சுற்றி வந்தது

காட்டின் மொழியை
பேசத் தொடங்கியது நாக்கு

விரிந்த சத்தத்தை
நனைத்தது மழை

மெல்ல நடமாடும்
வனமாகியது உயிர்

வனத்திலிருந்து
வெளியேறிக் கொண்டிருந்தது
உடல்

தூங்காத நெடுஞ்சாலை

முன்னிரவில்
ரகசியமாய்
விசும்பி அழும் பெண்ணுக்குள்
என்ன ஓடுகிறது என்று
தெரியவில்லை

முகம் துடைத்து
நிதானித்து
மீண்டும் மெளனமாய்
அழுகிறாள்

அவள் பக்கத்து இருக்கை
காலியாக உள்ளது
பின்னால் இருக்கும் எனக்கு
எல்லாம் கேட்கிறது

என் தூக்கத்தை
களவாடி இருக்கிறது
தெரியாத ஒரு அழுகுரல்

காற்று வேண்டி
கண்ணாடியைத் திறந்து வைக்கிறேன்

வாகன ஓட்டிகளுக்கு
நட்பான
தூங்காத நெடுஞ்சாலை

இலேசாக கண் மூட
உறக்கத்தின் மீது விழுகிறது
அவள் கண்ணீர் துளி

பேருந்தில் சுற்றி வருகிறது
வயிறு பெருத்த கனவானின்
குறட்டை சத்தம்

என் யோசனை சிலுவையில்
ஆணிகள் அறைந்திருந்த
அவள் அழுகை
நின்றிருப்பது போல்
தெரிகிறது

அதிகாலை நிறுத்ததில்
இறங்கிப் போனாள்
இரவின் எந்த சுவடும் அற்று
வேறொரு பெண்ணாய்
இன்னொரு நாளுக்குள்

Friday, September 04, 2009

மூவர் மற்றும் கடல்

அப்பா மீன்கள் விற்கிறார்

மகன் மீன்களைத் தூக்கி
கடலில் எறிகிறான்

அப்பா மீன்கள் விற்ற பணத்தை
எண்ணியபடி நடக்கிறார்

மகன் எறிந்த மீன்களின் கணக்கை
போட்டபடி நடக்கிறான்

சிரிக்கிறது கடல்
தந்தை மகன் மற்றும்
என்னைப் பார்த்து

நள்ளிரவில்

நள்ளிரவில் விழித்துக் கொண்டோம்

முற்பகல் நடந்த
சண்டையை நினைத்துப் பார்த்தோம்

பின் உறங்கப் போனோம்

உன் தலையணை அடியில்
கத்தி இருந்தது

என் தலையணை அடியில்
கத்திக்கான ரத்தம் இருந்தது

Tuesday, September 01, 2009

கண்ணாடி கோப்பை

ஏறக்குறைய
விழுந்து விடுவதுபோல்
மேஜை மீது
ஓரமாய் வைக்கப்பட்டிருக்கும்
கண்ணாடி கோப்பை
விழத்தொடங்கியது
எதிர்பார்த்தது போலவே
எவரின் கையோ தீண்டி
உடைந்து நொறுங்கிய
சில்லுகளின் சத்தம்
கேட்ட கவிதை
தன் வரிகளுக்குள்
பத்திரமாய்
தள்ளி வைத்துக் கொண்டது
அதே கண்ணாடி கோப்பையை

Sunday, August 30, 2009

ஓடு…ஓடு…

ஓடு
ஓடுவதிலிருந்தும்
ஓடியதிலிருந்தும்
ஓடு…ஓடு…

Wednesday, August 26, 2009

வீடு

எல்லோரும் உள்ளிருக்க
நனைந்து ரசிக்கிறது வீடு
மழையை

கூலி

பேரம் பேசிய பின்
கூலி தரப்பட்டது
நிமிர்ந்து வாங்கிப் போனான் அவன்
குனிந்து உள்ளேப் போனார்கள் அவர்கள்

மீசை

பிறகு வீரமாய்
கவிதை எழுதலாம்
முதலில்
பாரதியார் மீசையை
வரைந்து பார்

யாருக்கும் தெரியாமல்

தற்கொலை செய்து கொள்வதற்காக
கவிதையில் ஒருவனை
மலை உச்சி வரை கொண்டு வந்தேன்
வார்த்தைகள் அவனைத் தள்ளிய வேளை
விழுந்து போகாமல் பறந்து போனான்
கவிதைக்கும் எனக்கும் தெரியாமல்

Monday, August 24, 2009

மதுக்கோப்பை

காலியாகி விட்டது
என் மதுக்கோப்பை
பிரபஞ்சத்தை ஊற்றுங்கள்
குடிக்க வேண்டும்

மந்தை

தனது ஆட்டை
மந்தையிலிருந்து
பிரிக்கத் தெரியாதவன்
இன்னொரு மந்தையில்
சுற்றிக் கொண்டிருக்கிறான்
ஆடாக

Friday, August 21, 2009

குழந்தை

நடந்து நடந்து
கால் வலித்த குழந்தை
நடந்து நடந்து ஏறுகிறது
அம்மாவின் இடுப்புக்கு

கதைகள்

பாட்டியின் கையில்
தாத்தாவின் மோதிரம்
காலம் அணிந்து பார்த்த
கதைகளைச் சொல்கிறது

இசையின் வலி

மிருகங்கள் ஆடித் திரியும்
கனவில்
மிதிபடுகிறது
ஒரு புல்லாங்குழல்
நசுங்க நசுங்க
இசையின் வலி
பரவுகிறது காற்றில்

Monday, August 17, 2009

பொம்மைகள்

பேருந்தும் பயணிகளும்
பொம்மைகளாயின
உள்ளிருந்த குழந்தைக்கு

தீராத பக்கங்கள்

நிசப்தம் தாழ்ப்பாள் போட்ட
வெள்ளைக் காகிதம்
திறந்து போக
படிக்க உண்டு
தீராத பக்கங்கள்

Thursday, August 13, 2009

அப்பாவின் கடிதம்

இந்த முறை
அப்பா எழுதியக் கடிதத்தில்
ஒரு வரியை
ரசிக்க முடிந்தது
தனிமைக்கும் எனக்கும் இடையே
நீ நடந்து போகிறாய்

இன்னும்

திசைகளைத் தின்ற பறவை
வானத்தைக் குடிக்கிறது
இன்னும் பறக்க

Tuesday, August 11, 2009

ஒரு மூதாட்டி

As a woman I have no country.
As a woman my country is the whole world.
-Virginia Woolf

வெளியேற்றப்பட்ட ஒரு மூதாட்டி
நகரத்தின் வீதிகளில்
நடந்து கொண்டிருக்கிறாள்

அவள் பையில் இருக்கிறது
கிழிந்த புடவைகளும் மீதிக் கனவுகளும்

புறக்கணிப்பின் துயரம்
அவள் கண்களில் பெருகுகிறது

ரத்த உறவுகளின் முகவரிகளை
கிழித்துப் போட்டபடிச் செல்கிறாள்

யாரும் வாய் திறந்து சொல்லவில்லை
அவள் வெளியேற்றப்பட்டிருக்கிறாள்

சிறு தூறல் அவள் புழுக்கங்களை நனைத்து
ஒத்தடம் கொடுக்கிறது

சாலையோரத் தேநீர் ஒரு சில நிமிடங்களுக்கு
சூடான நட்பாகிறது

சீக்கிரம் போய்ச் சேர்ந்துவிட்ட
தன் கிழவனைத் திட்டியபடி நடக்கிறாள்

இந்த ஒத்தைச் சுமை
அவள் முதுமையை இன்னும்
பாரமாக்குகிறது

நிராகரிப்பின் கசப்பை
உணர்ந்தபடி நடக்கிறாள்

அவளுக்கான இடம் இல்லையெனினும்
உலகத்தை நிரப்பியபடி
நடந்து கொண்டிருக்கிறாள் அந்த மூதாட்டி

அன்பின் அடியில்

அன்பின் அடியில்
ஒட்டிக் கிடக்கும்
மண்புழுக்கள் கேட்கும்
பிரியங்களின் மொழி

Sunday, August 09, 2009

ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் துப்பாக்கி

இந்த கவிதையில்
ஒரு துப்பாக்கி ஒளித்து
வைக்கப்பட்டிருக்கிறது

நீங்கள் படித்து முடிப்பதற்குள்
தென்படலாம்

அல்லது உங்கள்
கண்களுக்குப் படாமலேயே
கவிதை முடிந்திருக்கலாம்

பார்ப்பீர்கள் எனில்
துப்பாக்கியை எடுத்து
பரிசோதிக்கும் முயற்சியாய்
வரிகளுக்கிடையே
ஓய்வெடுக்கும் பறவையை
சுட்டு விடாதீர்கள்

துப்பாக்கியின் கனம்
மற்றும் அதன் உலோகத்தன்மை
எதுவும் இந்த
கவிதைக்குத் தெரியாது
அது குடித்திருக்கும் ரத்தம் பற்றிய
குறிப்புகளும் இல்லை

உங்கள் கம்பீரத்தை
காட்டும் பொருட்டு
வேண்டுமானால் துப்பாக்கியோடு
ஒரு புகைப்படம்
எடுத்துக் கொள்ளுங்கள்

வேட்டையாடிய பெருமிதம்
முகத்தில் இருக்கட்டும்

துப்பாக்கியை பயன்படுத்தியே
தீர வேண்டும் என்ற வெறி
பரவும் பட்சத்தில்
ஒவ்வொரு வார்த்தையாய்
சுடுங்கள் குறி வைத்து

செத்து விழட்டும் கவிதை
உங்கள் சிரிப்பைக்
கேட்டபடி

Thursday, August 06, 2009

கவிதையின் ஏழாம் வரி

கவிதையின் ஏழாம் வரியை
பிடுங்கிக் கொண்டு
ஓடுகிறது குழந்தை

குழந்தை கலைத்துப் போட்ட
சொற்களுக்கிடையே
கண்டெடுக்கிறேன்
குழந்தை விட்டுச் சென்ற
கிளி பொம்மையை

கேட்டுத் தெரிந்து கொண்ட பின்
திரும்ப திரும்பச் சொல்லி
வீடு முழுதும்
தானியம் போல்
இறைத்துக் கொண்டிருந்தது கிளி
என் பெயரை

புல்லாங்குழல் கலைஞன்

நாடோடி போல் தெரியும்
புல்லாங்குழல் கலைஞன்
அறிமுகம் செய்து செல்கிறான்
இசையோடு ஒரு
வனத்தையும்

Monday, August 03, 2009

இரவு நதி

உறங்காத என்
விழிகளின் அடியில்
மெல்லிய வெப்பத்துடன்
ஓடிக்கொண்டிருக்கிறது
இரவு நதி

Friday, July 31, 2009

கால்பந்து ஆடிய தேவதை

நீருக்குள்
கால்பந்து ஆடிய தேவதை
விளையாட வரச் சொன்னாள்

நீச்சல் தெரியாது என்றேன்
வருத்தத்துடன்

ஆடத் தெரியுமா என்றாள்
இல்லை என்றேன்

ஒன்றைக் கற்றுக் கொள்
அது இன்னொன்றை
சொல்லித் தரும் என்றபடி
பந்தை உதைத்து
மறைந்து போனாள்

நதிக்கரை சிலையாய் அமர்ந்திருந்த
என்னை கலைத்தது
குளித்துக் கரையேறிய
சிறுமியின் சிரிப்பு

அவள் கண்களில்
தேவதையின் புன்னகை

Thursday, July 30, 2009

பிறகு பேசுவோம்

பயன்பாடு பற்றி
பிறகு பேசுவோம்
துப்பாக்கியின்
விசை மீதும்
திசை மீதும்
இருக்கட்டும் கவனம்

இரண்டு எறும்புகள்

நான் இளைப்பாறிய
நிழலின் அருகில்
கவலையுடன் பேசிக்கொண்டிருந்தன
இரண்டு எறும்புகள்
நாளை வெட்டப்போகும்
இந்த மரம் பற்றி

சொற்கள்

அருகில் உள்ள சொற்கள்
உற்றுப் பார்க்கின்றன
எனக்குத் தெரியாத கவிதையை

Tuesday, July 28, 2009

குதிரை

கனவில் அமர்ந்து
குதிரை வரைந்து கொண்டிருந்தேன்
முடியும் வரை காத்திருந்து
ஓடிப்போனது குதிரை
கனவை எடுத்துக்கொண்டு
என்னைப் போட்டுவிட்டு

(ஆனந்த விகடன்,2.09.09 இதழில்
பிரசுரமானது)

Sunday, July 26, 2009

மழை வாசம்

செல்லமாய் கோபித்து
குழந்தை மேல்
படிந்துள்ள மழையை
துடைத்தெடுத்து
வேறு உடை எடுக்கப்
போகிறாள் அம்மா
ஈர துணி முகர்ந்து
மழை வாசம்
பிடிக்கிறது குழந்தை

Thursday, July 23, 2009

ஒரு வரி

யாரும் பக்கத்தில் இல்லை
வண்ணதாசனின் இந்த வரியை
நான் பார்த்துக் கொண்டிருந்தபோது
அவரும் பார்த்துக்கொண்டிருந்தார் என்னை

தனிமை நட்பாகிறது

தனிமை நட்பாகிறது என்ற
இந்த கவிதையை
நீங்கள் வாசிக்கும்போது
நட்பாகி விடுகிறீர்கள்
கவிதைக்கும் எனக்கும்

ஒன்றுதான்

உங்கள் புன்னகையில்
இருக்கும் ஒப்பனையும்
என் ஒப்பனையில்
இருக்கும் பொய்யும்
ஒன்றுதான்

Tuesday, July 21, 2009

வெற்றிடத்தில் ஒரு குறிப்பு

அந்தக் கதையில்
நிறைய அறைகள் இருந்தன
ஒவ்வொருவராகப் புகுந்து
வெளியேறிக் கொண்டிருந்தனர்

அந்தக் கதையில்
நிறைய ஜன்னல்கள் இருந்தன
காற்றும் இசையும்
உள் நிறைந்து
வெளி வந்தது

அந்தக் கதையில்
நிறைய மரங்கள் இருந்தன
அணிலும் பறவைகளும் விளையாடின

அந்தக் கதையில்
விதைகள் நடப்பட்டிருந்தது
படிக்கப் படிக்க
பூத்துக் குலுங்கியது

அந்தக் கதையில்
மழை பெய்தது
வானவில் தென்பட்டது
கடவுள் குழந்தைகளோடு
பேசிக்கொண்டிருந்தார்

அந்தக் கதையில்
வாசிப்புத் தன்மை
கடைசி பக்கத்திலிருந்தும்
படிப்பதுபோல் அமைந்திருந்தது

முன்னிருந்தும் பின்னிருந்தும்
படித்துக் கொண்டே வந்தவர்கள்
சந்தித்துக் கொண்டார்கள்

வெற்றிடமான பக்கங்களில்
அமைதியாக உங்களைப் படியுங்கள்
என்ற குறிப்பு மட்டும்
காணப்பட்டது

Saturday, July 11, 2009

பெய்யும் கணங்களில்...

ஜன்னலோரம்
கவனிப்பாரற்று ஹார்மோனியம்

பெய்யும் கணங்களில்
ஹார்மோனியம் கேட்கிறது
மழையின் ஓசை

மழை கேட்கிறது
ஹார்மோனியத்தின் இசை

Tuesday, July 07, 2009

குழந்தை அருவி

தான் வரைந்ததைக் காட்டி
கேட்கிறாள் சிறுமி

அருவி என்கிறார் அப்பா

ஓவியத்தை மேல்கீழாக்கி
என்ன என்கிறாள்

இது தப்பு என்கிறார்

தலைகீழாய் யோகா
செய்யும் அருவி என்கிறாள்
சிரித்தபடி

தூக்கி கொஞ்சுகிறார் தந்தை
குழந்தை அருவியை

(ஜெஸிக்காவுக்கு)

*கல்கி தீபாவளி சிறப்பிதழில்(18.10.2009)
வெளியானது

நட்பும் வரிகளும்

அவசரமாய்ப் போகிறேன்
அப்புறம் பேசுவோம்
என்றார் ஒரு நண்பர்
இம்முறையும்

பிறகு பார்க்கலாம் என
அலைபேசியை அணைத்தாள்
ஒரு தோழி

கடிதப் போக்குவரத்தை
நிறுத்திவிட்ட நண்பர்
ஈமெயிலில் தென்படுவதும்
குறைந்து போயிற்று

கோயிலில் பழக்கமான புது நண்பர்
பக்தி பரவசத்தில்
சில வார்த்தைகளோடு
சென்று விடுகிறார்

தொலைகாட்சியில் செய்தி வாசிக்கும்
நண்பனின் புன்னகையை
செய்தி முடியும் நேரத்தில்
அரிதாகப் பார்க்க முடிகிறது

குவிந்து கிடக்கின்றன மனதில்
நட்பும் வரிகளும்

தனிமையோடு நடக்கிறது
கபடி விளையாட்டு

யார் மீதும்
வருத்தம் வைக்க
விரும்பவில்லை

எப்போதும் போல்
நிதானமாய்ப் பார்த்து
தலை அசைத்து
நலம் விசாரிக்கிறது
பால்கனி செடி

இப்போது அதில்
புதிதாய்
ஒற்றைப்பூ

Saturday, July 04, 2009

நா...ம்

நாம் பிரிந்ததற்கு
பெரிய காரணம்
எதுவுமில்லை

சேரலாம் எனும்போது
அதிகமாகி இருந்தது
காரணங்களின் கூட்டுத்தொகை

கதை சொல்லி

பாட்டியை எல்லோருக்கும்
கதை சொல்லியாகத்தான் தெரியும்

வாயைத் திறந்தால்
கதைகளாகக் கொட்டும்

ஒவ்வொரு முறையும்
விடுபடும் புதுக்கதை

ஊரில் பெரியவர் முதல்
சிறியவர் வரை
பாட்டி கதைக்குள் அடக்கம்

படிப்பறிவில்லாத பாட்டியிடமிருந்து
எப்படி வருகின்றன கதைகள்
என்ற பிரமிப்பு ஊருக்குள் உண்டு

திரும்ப நினைக்கையில்
பாட்டி சொன்ன கதை
அட்சரம் பிசகாமல் கண்முன் விரியும்

பாட்டியின் கதைகளில்
மழை பெய்யும்

கதையில் வந்த விலங்குகள்
குழந்தைகளுக்கு நட்பாயின்

ஒரு மழைநாளில்
கதை சொல்லி பாட்டி
படுத்த படுக்கையானாள்

ஊரை நிசப்தமாக்கிவிட்டு
முடங்கிப்போனாள்

பாட்டியின் கண்களில்
தேங்கி நின்றது
சொல்ல முடியாத கதை

ஊர்ப் பெரியவரை
அருகே வரச் சொல்லி
பாட்டி முணுமுணுத்ததை
பிறகு அவர்
எல்லோரிடமும் சொன்னார்

எனக்கு எமன்
கதை சொல்லிக்கிட்டிருக்கான்
போங்க பிறகு பாப்போம்

Friday, July 03, 2009

ஒரே தூரம்

நீங்கள் அதிகப்படுத்திக் கொண்டாலும்
நான் குறைத்துக் கொண்டாலும்
உங்களுக்கும் எனக்கும்
இடையில் இருப்பது
ஒரே தூரம்தான்

கதவு

மூடித்திறக்கும்
போதெல்லாம்
காற்றைக் குடிக்கிறது கதவு

கூடு

கால் தட்டிவிட்டுப் போன
குச்சியை எடுத்து
பறவை செய்தது கூடு

தனிமைக் குளம்

நடந்து நடந்து வந்து
என்னைச் சேர்ந்தாயிற்று
காலடியில்
அலை எழுப்புகிறது
தனிமைக் குளம்

Tuesday, June 30, 2009

இடம்

இடம் தெரியாத இடத்தில்
இறங்கிவிட்டேன்
தெரிந்துகொள்ள
எவ்வளவோ
வைத்திருந்தது இடம்

நடுநிசியில்

நடுநிசியில்
பறந்து வந்து
தேன் குடிக்கிறது
பட்டாம்பூச்சி
கனவில்
முளைத்த பூவில்

Friday, June 26, 2009

வழி மாற்றிய ஒற்றன்

என்னை
வழி மாற்றி அனுப்பிய
ஒற்றனைப்
பார்க்க நேர்ந்தது
அவன் இருந்தான்
ஏறக்குறைய என்
முக சாயலில்

Thursday, June 25, 2009

மீண்டும் பிறக்கிறது...

உதிரமாகிக்
கொட்டுகிறது கனவு
உக்கிரமாகி
சுடுகிறது இரவு
தன்னை புணர்ந்து
தன்னில் இறந்து
மீண்டும் பிறக்கிறது காமம்
விலங்கின் பற்களுடன்

Wednesday, June 24, 2009

ஒரு நடை பயணத்தில்...

ஒரு நடை பயணத்தில்
பேசிக்கொண்டு போனார்கள்
தந்தையும் மகனும்

வானத்தில் சிறகடிக்கும் பறவை
உனக்குத் தெரிகிறதா

இல்லை எனக்கு
வானம் ஒரு
பறவையின் சிறகாகத்
தெரிகிறது

*கல்கி தீபாவளி சிறப்பிதழில்(18.10.2009)
வெளியானது

ஊர்ந்து போகும் ரயில்

படிக்கும் புத்தகத்தின்
வரிகளுக்கிடையே
ஊர்ந்து போகிறது
வேகமாகச் செல்லும்
இந்த ரயில்

அப்பாவின் ரெயின்கோட்

தந்தையின் ரெயின்கோட்டில்
போகும் மகன் உணர்கிறான்
அப்பா நனைவது போன்று

*கல்கி தீபாவளி சிறப்பிதழில்(18.10.2009)
வெளியானது

Sunday, June 21, 2009

மலையின் கருணை

தற்கொலை உச்சிக்கு வந்தவனை
இறங்கிப் போகச் செய்கிறது
மலையின் கருணை

*கல்கி தீபாவளி சிறப்பிதழில்(18.10.2009)
வெளியானது

Thursday, June 18, 2009

கடந்து போன வரிகள்

வெட்டப்பட்ட மரம்
துளிர்த்தது
இறந்துபோன முதியவர்
உயிர் பெற்றார்
ஒரு நட்சத்திரம்
அருகில் வந்து
முத்தமிட்டுச் சென்றது
மணல் அடியில்
கிடந்த வளையல் துண்டுகள்
கண்ணீரைக் காட்டின
கடல் மீன்
கரைக்கு வந்து
வார்த்தைகளைக்
கொட்டிவிட்டுப் போனது
இயற்கையின் பரிசுத்தத்தை
வீணாக்கியவர்கள்
தூக்கு தண்டனைப் பெற்றனர்
உதிர்ந்த இலை
உள்ளங்கையில்
விழும்போது
பூவாகி இருந்தது
சேமித்து வைக்கப்பட்ட கோடுகள்
ஓவியங்களாக
மாறிக்கொண்டே வந்தன
ஆண்துணை
தேடிய ஒருவன்
நகரத்து வீதிகளில்
அலைந்து கொண்டிருந்தான்
கடந்து போன
வரிகளைப் பார்த்தபடி
நடந்து கொண்டிருந்தேன் நான்

கிளி பொம்மை விற்கும் சிறுமி

கிளி பொம்மை
விற்கிறாள் சிறுமி

வெயிலின் கடுமை
அவள் கால்களை
நிற்க விடாமல் செய்கிறது

ஒவ்வொரு வாகனமாய் ஓடி
கிளி பொம்மையை நீட்டி
வாங்கிக் கொள்ளும்படி
வேண்டுகிறாள்

சிக்னல் விழுவதற்குள்
ஓரிரு பொம்மைகளை
விற்க வேண்டும் என்ற
ஏக்கம் தெரிகிறது
அவள் கண்களில்

தூரத்திலிருந்து
விரட்டுகிறாள் அம்மா

ஒரு காரின்
கண்ணாடி இறங்குகிறது

ஒரு கை நீண்டு
பொம்மையை வாங்குகிறது

பணத்தை வாங்கிக் கொண்டு
சிறுமி சிரிக்க
சிக்னல் விழுகிறது

காரில் ஆடிக்கொண்டே செல்கிறது
கிளி பொம்மை
சிறுமியின் பெயரை
சொல்லியபடி

Saturday, June 13, 2009

கை அள்ளும் சூரியன்
உள் எங்கும்
ஒளி நதி

Sunday, June 07, 2009

பிடுங்கப்பட்ட உயிர்

நீ எந்த மரத்திலிருந்து
பிடுங்கப்பட்ட உயிர்
தன் பென்சிலிடம் கேட்டபடி
இந்த வரிகளை
எழுதிப் பார்க்கிறாள்
ஒரு சிறுமி

அழகான கூண்டு

பார்க்க அழகாக இருக்கிறது
எப்படி இந்த
குற்றவாளி கூண்டை செய்தீர்கள்
நண்பருக்குச் சொன்னேன்
இது குற்றங்களால்
செய்யப்பட்ட கூண்டு

ஒளிந்திருக்கும் கடவுள்

நன்றி சொல்லலாம் என
கடவுளைப் பார்க்கப் போனேன்
நன்றிக்குள்
கடவுள் ஒளிந்திருந்தார்

Monday, June 01, 2009

வெற்றுக்கோப்பை

வெற்றுக்கோப்பை போதும்
என் தாகம் தீர்க்க

நீர் நிரம்பிய பாத்திரங்கள்
அதிகரிக்கவே செய்யும்
தாகத்தை

Sunday, May 31, 2009

வரிசையற்ற
நான்கள்
வரிசையில் நான்

ஊஞ்சல்

குழந்தை ஆடும் ஊஞ்சல்
பார்க்கும் முதியவர்
போய் வருகிறார்
இளமைக்கும் முதுமைக்கும்

பறந்த கனவு

உன் கண்களிலிருந்து
பறந்த கனவொன்று
இளைப்பாறிச் சென்றது
என் கவிதையில்

துளிகள்

துளி போன்ற
வார்த்தைகள்தான்
ஆனாலும் வந்து
குடியேறுகிறது
கடல் போன்ற கவிதை

காற்று படித்த கதை

அம்மா கூப்பிட
படித்துக் கொண்டிருந்த
புத்தகத்தை
அப்படியே வைத்துவிட்டு
கதையிலிருந்து வெளியேறும்
கதாபாத்திரத்தைப் போல
ஓடுகிறாள் அவள்
மீதிக் கதையை
புரட்டி புரட்டி
படித்துக் கொண்டிருக்கிறது
காற்று

தனிமையின் போதை

இந்த மதுக்கடையின்
சத்தம் குவிந்த
மையப்பகுதியில்
நானும்
என் தனிமையும்
ஏழாவது மதுச்சுற்றில்
எட்டு ஒன்பது என
சுற்றுகள் கூடுகின்றன
இடையிடையே
பரிமாறும் சிறுவன்
வியர்வையைத் துடைத்தபடி
புன்னகைத்துப் போகிறான்
அவன் முகநகை
ஒரு புண்ணிய
நிகழ்வாகத் தெரிகிறது
தனிமைக்கு
போதை பற்றாமல் போக
குடிக்கத் தொடங்குகிறது
என்னை

Wednesday, May 27, 2009

குழந்தையின் மழை

குடைகீழ்
அம்மாவுடன்
சேர்ந்து போகிறது குழந்தை
அடிக்கடி வெளியேறி
குதித்து ஆடி
நனைகிறது
அம்மா சத்தம் போட்டுக்
கூப்பிடும் போதெல்லாம்
குடைக்குள் வந்து சேர்கிறது
கொஞ்சம் மழை
குழந்தையுடன்

ஒரு கவிதையில்

மணல் பற்றி
எனக்குச் சொன்ன நண்டும்
கடல் பற்றிச்
சொன்ன மீனும்
சந்தித்துக் கொண்டன
நான் எழுதிய
ஒரு கவிதையில்

வார்த்தைகளில்
மணல் ஒட்டிக்கிடப்பதைப்
பார்த்ததாகச் சொன்னது நண்டு

கவிதையில்
உப்புக் கரிப்பதாகச்
சொன்னது மீன்

Monday, May 18, 2009

கம்பிமேல்...

கம்பிமேல் நடந்து
வித்தை காட்டும் சிறுமியை
ஐஸ் கிரீம் சுவைத்தபடி
வேடிக்கை பார்க்கும்
இன்னொரு சிறுமி

அன்பான அணில்

அடிக்கடி
மொட்டை மாடியில்
தென்படும் அணிலுக்கு
பெயர் வைத்தேன்

பெயர் சொல்லிக்
கூப்பிட்டுப் பார்த்தேன்
வரவில்லை

பல நாள்
அணிலுடன்
என் சிநேகத்தைப்
பகிர்ந்து கொண்டேன்

என் கண்களின் வாஞ்சையைப்
பார்த்தபடி ஓடியது

மீண்டும் கூப்பிட்டேன்

வேகமாக வந்த அணில்
பெயரில் இருந்த
அன்பைச் சுவைத்து விட்டு
ஓடிப்போனது

Thursday, May 14, 2009

எல்லோரும்
இறங்கிபோன பின்
நள்ளிரவு நிசப்தம்
கலைக்காமல்
மெதுவாய் கேட்டது ரயில்
என் பெயரை
எனக்குள்
மீதி கவிதை
கவிதையில்
முடியாத நான்
ரயில்கள் போய்விட்டன
தண்டவாளத்தில் குவியும்
முதியவரின் கண்கள்

இப்படித்தான்…

இப்படித்தான்
நான் இறந்துபோனேன்
ஒரு விபத்தில்

இப்படித்தான்
நான் இறந்துபோனேன்
ஒரு சொல்லில்

இப்படித்தான்
நான் இறந்துபோனேன்
ஒரு தற்கொலையில்

இப்படித்தான்
நான் இறந்து போனேன்
ஒரு பார்வையில்

இப்படித்தான்
நான் இறந்துபோனேன்
ஒரு துரோகத்தில்

இப்படித்தான்
நான் இறந்துபோனேன்
ஒரு மழைத்துளியில்

இப்படித்தான்
நான் இறந்துபோனேன்
ஒரு கண்ணீர் உளியில்

இப்படித்தான்
நான் இறந்துபோனேன்
ஒரு புன்னகையில்

இப்படித்தான்
நான் இறந்துபோனேன்
ஒரு தருணத்தில்

இப்படித்தான்
நான் இறந்துபோனேன்
ஒரு கவிதையில்

சைக்கிள் சிறுமி

சைக்கிள் ஓட்டக்
கற்றுக் கொண்டதை
அபிநயத்தோடு தோழியிடம்
சொல்லிக் காட்டினாள் சிறுமி
நான் பயத்தை மிதித்து
ஓட்டியபோது
அப்பா கூடவே பிடித்து
ஓடி வந்தார்
பெடலை மிதித்து
ஓட்டியபோது
அப்பா ஓரமாய் நின்று
பார்த்து ரசித்தார்

Thursday, May 07, 2009

வாழ்வெனும் தீவு

எங்கள் குருதியில்
கால் நனைத்து
நீங்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறீர்கள்
உங்கள் மரணத்தை நோக்கி

Wednesday, April 29, 2009

பயணங்களின் இசை

வழிப்போக்கன்
புல்லாங்குழலில்
பயணங்களின் இசை

பறந்த காகிதம்

எழுதிய காகிதம்
காற்றில் பறந்து
பூந்தொட்டி அருகில்
விழுந்தது
கவனித்துப் பார்க்க
பூந்தொட்டியில்
சிதறிக் கிடந்தன
வார்த்தைகள்
கவிதையில்
உதிர்ந்து இருந்தன
பூக்கள்

Saturday, April 25, 2009

ஊஞ்சல் பிம்பங்கள்

ஊஞ்சலில் ஆடியது
பனித்துளி

பிறகு ஆடியது
வானவில்

அடுத்து ஊஞ்சலை
அழகாக்கியது
மழைத்துளி

கண் இமைத்துப் பார்க்க
ஊஞ்சலில்
சிறகசைத்து
ஒரு பறவை

ஆடிய
இசை அசைவில்
மாறிக் கொண்டே வந்த
ஊஞ்சல் குழந்தை
ஆடிக்கொண்டிருந்தது
அம்மாவின்
சந்தோஷத்திலும்

கனவுகளுக்கு அப்பால்...

கனவுகளுக்கு அப்பால்
என்ன இருக்கிறது

பிசுபிசுக்கும் இரவும்
பிரிக்க முடியாத இருளும்

Wednesday, April 22, 2009

கண்மூடிக் கேட்கிறேன்
காற்று விட்டுச்
சென்ற பாடலை

Tuesday, April 21, 2009

பயணமாகிறேன்
வழிகளைத் தவிர
ஏதுமில்லை
என்னிடம்

Monday, April 20, 2009

யாருக்கும் தெரியாமல்

ஒப்பனை இல்லாமல்
நடித்து முடித்ததற்காக
கைதட்டல் பெற்றவர்
தனியே போய்
வார்த்தைகளுக்குப் பூசப்பட்டிருந்த
சாயத்தைக் கழுவிக்கொண்டிருந்தார்
யாருக்கும் தெரியாமல்

பொய்கள்

பல விதமான பொய்கள்
இருக்கின்றன
எந்த விதமான பொய்கள்
வேண்டும் உங்களுக்கு

உண்மைபோல் தெரியும்
பொய்கள் நிறையவும்
மற்ற பொய்கள்
கொஞ்சமும்

Wednesday, April 15, 2009

பேசும் மரம்

முதலில் மரம் பேசியது
பிறகு இலைகள் பேசின
கிளை விழுது வேர் என
ஒவ்வொன்றும் பேசியதை
அவன் கேட்டான்
இலைகளுக்கிடையே
இமை அசைத்த
ஒளிகற்றையின் மெளனமும்
காற்றோடு சேர்ந்து
அவனைத் தடவியது
விரிந்து கிடந்த
மரத்தின் நிழலில்
சாய்த்து வைக்கப்பட்டிருந்த
கோடாலியிடம் விசாரித்தான்
மரம் பேசியது
உனக்குக் கேட்டதா
ஊமை நாவோடு
பார்த்தது கோடாலி
தன்னை சமாதானம்
செய்து கொண்டு
கோடாலியை ஓங்கினான்
வெயிலைக் கிழித்து
பாம்பாய் சீறி
மரத்தைக் கொத்தியது
ஒவ்வொன்றாய்
உதிர்ந்து கொண்டே
வந்தன வார்த்தைகள்
கடைசி வரை
வார்த்தைகளில்
கசிந்த ரத்தத்தை அவன்
பார்க்கவே இல்லை

Tuesday, April 14, 2009

நிலவும் நிலவும்

நிலவைப் பார்த்து
கைதட்டிச் சிரித்தது
அம்மாவின் மடியில்
இருந்த நிலவு

புல்லாங்குழல் வாசிப்பவன்

பசிக்காக
காசுகள் வேண்டி
புல்லாங்குழல் வாசிப்பவன்

இடையிடையே
தன் பசிக்கும்
கொஞ்சம்
இசைப் போட்டபடி

ஓடும் பேருந்தில்...

ஓடும் பேருந்தில்
பக்கத்து இருக்கையில்
அமர்ந்திருந்தவர்
எழுதிய கவிதையைப்
படிக்கச் சொன்னார்

நன்றியோடு வாங்கிப்
படிக்கும் போது
காற்று இழுக்க
விரல்களிலிருந்து விடுபட்டு
வெளியேப் போனது

பதற்றத்துடன் பார்க்க
அமைதிப் படுத்தினார்

என்னால் பறந்து போனதே
உங்கள் கவிதை என்றபோது
பறந்து போனது
காகிதம்தான் கவிதையல்லா
எனச் சொல்லி சிரித்தார்
ஒரு கவிதையைப் போல

Saturday, April 11, 2009

குழந்தையின் மொழி

நேரம் கடந்து வந்ததற்காக
தூங்கிய குழந்தையை
மடியில் வைத்து
பார்வையிலேயே
மன்னிப்பு கேட்கிறார் அப்பா
ஏம்பா லேட்டா வந்தீங்க
தூக்கத்திலேயே
கேட்கிறது குழந்தை

Friday, April 10, 2009

மீதி வார்த்தைகள்

இருளை அசைக்கிறது
முடியாத கவிதை
கனவில் மிதக்கின்றன
மீதி வார்த்தைகள்

இரவுக் காவலாளி

யாராவது வந்தால்
எழுப்பு
தன் தூக்கத்திடம்
சொல்லிவிட்டு
உறங்கப் பார்க்கிறார்
இரவுக் காவலாளி

பயணம்

இரவுப் பயணம்
காலையில் பேருந்திலிருந்து
இறங்கியபோது
புன்னகை மாறாமல்
ஓட்டுனர் கேட்டார்
நல்லாத் தூங்கனீங்களா சார்

இடம்

ஆளறவமற்ற இடத்தில்
நானிருந்தேன்
எனக்குள்
கத்திக் கொண்டிருந்தார்கள்
எல்லோரும்
மீனின் கண்கள் வழியே
பார்க்க வேண்டும்
கடலை

Monday, April 06, 2009

தன்னைப் பிடிக்கச் சொல்லி
ஓடிய பட்டாம் பூச்சி
பறக்க வைத்துப்
பார்த்தது என்னை
http://www.youtube.com/watch?v=RctVaH3iOhY

Friday, April 03, 2009

குற்றவாளிகள்

குற்றவாளிகள் எல்லோரும்
தப்பி ஓடினார்கள்
வேகமாக விரட்டி வந்தும்
நம்மால் பிடிக்க
இயலவில்லை
கூடி நின்றவர்கள்
நம் முயற்சிகளுக்காக
பாராட்டி கைதட்டினார்கள்
குற்றவாளிகள்
ஓடிய திசையில்
புகை மூட்டம்
இறங்கிக் கொண்டிருந்தது
அடுத்த முறை
விட்டு விடாதீர்கள் என்று
வாழ்த்துக்களை வழங்கியபடி
பிரிந்து போனார்கள்
எனக்குள் ஒன்றும்
உனக்குள் ஒன்றுமாக
இரண்டு குற்றவாளிகள்
பதுங்கிப் போனதை
உணராத அவர்கள்
அலாதியான இரவு
மாதாகோயில் மணிசத்தம்
நனைகிறது மழையில்

குழந்தையின் கடல்

நள்ளிரவில் எழுந்து
கடல் பார்க்க வேண்டும் என்று
அடம் பிடித்த
குழந்தையை
சமாதானப்படுத்தி
நாளை போகலாம்
எனச் சொல்லி
தூங்க வைக்க
பெரும்பாடாயிற்று
பின் விடியும் வரை
அலைகள் எழுப்பி
தூங்க விடாமல்
செய்தது
குழந்தையின் கடல்

Tuesday, March 17, 2009

இந்த கவிதை
பூமியின் கனத்தைப் போன்றது
நீங்கள் தூக்குவதற்கு
ஏதுவாய்
பறவையின் இறகைப் போன்றது

வண்ணங்களின் நறுமணம்

ஓவிய அரங்கம்
நேரம் முடிந்து
மூடப்படுகிறது

பார்வையாளர்கள்
வெளி வருகின்றனர்

சிலர் கண்களில்
வண்ணம்
ஒட்டி இருக்கிறது

நிசப்த இரவில்
நிறங்கள்
ஆறாகப் பெருகி
அரங்கம் எங்கும்
வழிந்தோடுகிறது

நான்காவது ஓவியப் பெண்
ஓடி வந்து
ஏழாவது ஓவியத்திலிருக்கும்
பெரியவரை
நலம் விசாரிக்கிறாள்

மூன்றாம் ஓவியத்திலிருக்கும்
மஞ்சள் பூக்களை
இரண்டாவது ஓவியத்தின் குழந்தை
கை நீட்டிப்
பறித்து எறிகிறது

வண்ணங்களில்
விளையாடிப் போகின்றன
பூக்கள்

ஏழாவது ஓவியத்தில்
வராமல் பயந்தபடி
பார்க்கும் பூனையைத்
தூக்கி வருகிறாள்
ஒரு தாய்

அவள் கைகளை
நக்குகிறது பூனை
அன்பின் வண்ணங்கள் மின்ன

பசிக்கும் குழந்தை
நீலத்தை சாப்பிட்டு
பச்சை நீரைக் குடிக்கிறது

அடுத்த நாள் ஞாயிறு

விடுமுறை குதூகலத்தில்
எல்லோரும்

திங்களன்று
பார்வையாளர்கள் வருகைக்காக
கதவைத் திறக்கும் காவலாளி
காலடியில் தட்டுப்படும்
மஞ்சள் பூவை எடுத்து
மெல்ல முகர்ந்தபடி
ஓவியங்களைப் பார்க்கிறான்

வண்ணங்களின் நறுமணம்
அவனுள்
பரவத் தொடங்குகிறது

(ஆனந்த விகடன்,27.05.08 இதழில்
விடுமுறை வண்ணங்கள் என்ற தலைப்பில்
பிரசுரமானது)

Saturday, March 14, 2009

இரவல் சிறகுகள்

சிலையாகவும்
சிலை மீது
அமர்ந்திருக்கும்
பறவையாகவும் இருந்தேன்
ஒரு மாய கணத்தில்

இரவல் சிறகுகள் பெற்று
பறந்து போனது சிலை
பறவை சிலையாக

இப்போது நான்
தொலைவில் புள்ளியான
பறவையைப் பார்த்தபடி

பறக்க முடியாமல்
சிலைக்குள்
இருந்தபடி

நேத்ராவின் மீன்குட்டிகள்

புதிதாய் இடம் பிடித்தது
மீன் தொட்டி

குதிக்கிறாள் நேத்ரா

தன் குட்டி விரல்களால்
தொட்டுப் பார்க்கிறாள்

அவள் கண்களைப் போல்
அசைகின்றன மீன்குட்டிகள்

ஒவ்வொரு மீனுக்கும்
ஒரு பெயரை வைத்துக்
கூப்பிடுகிறாள்

கூப்பிடும் போதெல்லாம்
ஓடி வருகின்றன மீன்கள்

கைதட்டி எல்லோரையும்
அழைத்துக் காட்டுகிறாள்

மீன்குஞ்சுகள்
ஓய்வெடுக்கும் சமயங்களில்
அவள் வைத்த பெயர்கள்
நீந்துவதைப் பார்க்க முடிகிறது

Thursday, March 12, 2009

ஆசிர்வதிக்கப்பட்டவன்

இந்த பயணத்தில்
எங்கும் இறங்குவதாக
உத்தேசமில்லை
நான் வழிகளால்
ஆசிர்வதிக்கப்பட்டவன்

தங்குதல்

நெரிசல்களைத் தவிர்க்க
அடிக்கடி
தங்கிவிடுகிறேன்
கவிதைகளில்

கால வெளியில்

நள்ளிரவில்
கனவின் மீது
ஒரு அபூர்வ நட்சத்திரத்தின்
ஒளி கடந்து போனது

கனவும் ஒளியும்
சந்தித்த தருணத்தில்
மிதந்து கொண்டிருந்தேன்
எதுவுமற்ற
கால வெளியில்

Monday, March 09, 2009

புள்ளிகள்

எனது புள்ளிகளை
எடுத்துக் கொண்டபின்னும்
நூற்றுக்கணக்கான
புள்ளிகள் இருந்தன
நேர்க்கோட்டில்

அப்பாவின் சைக்கிள்

பல பயணக் கதைகளையும்
பல நூறு மைல்களையும்
தன்னுள் புதைத்து
வைத்திருக்கிறது
அப்பாவின் சைக்கிள்

ஓட்டும் போதெல்லாம்
ஒன்றிரண்டை சொல்வதுண்டு
என்னிடம்

Sunday, March 08, 2009

விசிறி விற்கும் பாட்டி
அவள் சொற்களிலிருந்து
இறங்கிப் போகிறது காற்று

தொலைந்து போதல்

கூட்டங்களில்
தொலைந்து போவது
பிடித்திருக்கிறது
அனுபவ நெரிசல்களோடு
திரும்ப வந்து சேர்ந்து
தனித்து நடக்கையில்
கூட்டம் தொலைந்து போவதும்
பிடித்திருக்கிறது

Sunday, March 01, 2009

குழந்தை,பட்டாம் பூச்சி மற்றும் நான்

தூங்கிக் கொண்டிருக்கும்
குழந்தை மேல்
சுற்றுகிறது பட்டாம் பூச்சி
ரசிக்க முடிகிறது இரண்டையும்
பட்டாம் பூச்சி போல்
என்னால்
குழந்தையை ரசிக்க முடியுமா
தெரியவில்லை

வார்த்தைகளின் நடனம்

எவ்வளவோ கூப்பிட்டும்
வந்து சேராமல்
நனைகின்றன
சில வார்த்தைகள்
பூர்த்தியாகாதக் கவிதை
ரசிக்கிறது
மழையோடு சேர்ந்து
வார்த்தைகளின்
நடனத்தையும்

Friday, February 27, 2009

யாரோ ஒருவர்

விலாசத்தைக் காட்டி
விசாரித்த போது
நிதானமாகப் பார்த்தார்
பொறுமையாகச் சொன்னார்
புரிந்து கொண்டது
முகத்தில் தெரிந்தவுடன்
புன்னகைத்தபடியே போனார்
நகரத்தில்
தன் விலாசத்தைத் தொலைக்காத
யாரோ ஒருவர்

Sunday, February 22, 2009

வெள்ளை நிறத்தில் ஒரு பூனை

யாரும்
பார்க்காத நேரம்
பூங்காவின் ஓரத்தில்
இறக்கி விடுகிறேன்
வெள்ளை நிறப்
பூனையை

கை நழுவும் போது
ஒரு கணம்
அதன் கண்களைப்
பார்க்கிறேன்

நெருக்கடி நிறைந்த வீட்டில்
இருக்கக் கூடாது
என்று எதிர்ப்பு கிளம்பியதால்
இந்த ஏற்பாடு

கூப்பிட்டால்
போய் விடலாம் என்ற
நம்பிக்கையில்
குழந்தைகளின் விளையாட்டை
கவனிக்கிறது பூனை

நெடுந்தூரம்
வந்த பின்னும்
என்னைச் சுற்றி சுற்றி
வருகிறது
பூனைக்கு
நான் வைத்த பெயர்

ஒரு அஞ்சலி

இறந்த போது
எவ்வளவோ பேர் வந்து
கண்ணீர் சிந்தினார்கள்

இருந்த போது
ஒருவரும் வந்து
கண்ணீர் துடைக்கவில்லை

Tuesday, February 17, 2009

நமது மழை

எல்லோரையும் முடக்கிப்
போட்டிருந்தது மழை
நான் திட்டிக்கொண்டிருந்தேன்
எப்போதும் மழையைக்
குழந்தை போல ரசிக்கும்
பக்கத்து வீட்டு அக்காவுக்கு
பிரசவ வலி வர
அவசரமாய் ஆட்டோவில்
ஏற்றிக் கொண்டு போனார்கள்
தலை பிரசவம் என்பதால்
பதற்றம் கூடி இருந்தது
மழை நிற்காத காலையில்
செய்தி வந்தது
சுக பிரசவம்
ஆண் குழந்தை என்று
அப்போது பார்த்த மழையை
உள்ளபடியே
ரசிக்கத் தோன்றியது

வானம்

தன் குஞ்சுக்குப்
பறவை ஊட்டியது
உணவை
பின் கொஞ்ச கொஞ்சமாய்
வானத்தை

கண்ணீரின் நாக்குகள்

கண்ணீரின் நாக்குகளில்
பற்றி எரியும் வார்த்தைகள்
யாரால் அணைக்க இயலும்

நினைவுகளின் தாய்

எங்கள் குழந்தைப் பருவம்
இன்னமும் இருக்கிறது
அம்மாவிடம்
ஊர் போகும்
ஒவ்வொரு முறையும்
தன் நினைவுகளில் பிசைந்து
ஊட்டத் தவறியதே இல்லை

Sunday, February 15, 2009

இடுப்பிலிருக்கும் குழந்தை

முண்டியத்து
முன்னேறி
இடம் பிடித்து
அமர்ந்து
வெற்றி பெருமூச்சு விட்டு
பின் பார்க்க
ஏற முடியாமல்
திணறி
வெளியேறி
வெயில் கவ்வ
தள்ளி நிற்கும் தாயின்
இடுப்பிலிருக்கும் குழந்தை
சிரித்தபடியே
கையசைத்துக் கொண்டிருந்தது
என்னைப் பார்த்து

என்னிடம்...

என்னிடம் இருக்கின்றன
பதினேழு கவிதைகளும்
இருபது மதுக்கோப்பைகளும்

நீங்கள் விரும்பினால்
அருந்தலாம்
கவிதையிலிருந்து மதுவும்
படிக்கலாம்
மதுவிலிருந்து கவிதையும்

அந்தக் கவிதை

எழுதியது போலிருந்த
அந்தக் கவிதையை
இதுவரை
நான் எழுதவே இல்லை

Thursday, February 12, 2009

பேச நினைத்தவை

நீங்கள் பேசாமல் போனால்
உங்களிடம் நான் பேச
நினைத்தவை எல்லாம்
வார்த்தைகளின் சீழாக
என் காதுகளில்
வடியும் என
பரிதாபமாக சொல்லியவனைப்
பார்த்தபடி இருந்தேன்
அவன் சொன்னதுபோல்
வார்த்தைகளின் சீழ் வடிந்தது
என் காதுகளிலிருந்து

Monday, February 09, 2009

எழுதிய என்னாலும் அவனைக் காப்பாற்ற முடியவில்லை...

காலையை வணங்கினான்
சில உடற்பயிற்சிகள் செய்தான்
அவசர குளியல்
ஏதோ திருப்தி தந்தது
தேநீர் நட்பானது
நடந்தான்
பள்ளிக் குழந்தைகளுக்கு
கையசைத்தான்
ஒரு பாட்டி
அவன் கை பிடித்து
சாலைக் கடந்தாள்
கடந்து போய்
திரும்பி வந்து
கடவுளைக் கும்பிட்டான்
மனதிலிருந்த திட்டத்தில்
மாற்றமில்லை
நண்பனுக்கு
கடிதம் எழுதினான்
சம்பளம் வாங்கி
ஊருக்கு அனுப்பினான்
சில நிராகரிப்புகளை
நினைத்துப் பார்த்தான்
அதற்காக வருத்தப்படவில்லை
புன்னகை நிறைந்த தருணங்களுக்கு
நன்றி சொன்னான்
கால் நனைத்த
அலையைத் தொட்டான்
தொட நினைத்த அலை
போயிருந்தது
சாதகமான உயரத்திலிருந்த
மின்விசிறியை நிறுத்தினான்
அவனை வழி அனுப்புவதுபோல்
மெதுவாகி
நின்றன இறக்கைகள்
முன்பாக ஒரு
கணம் யோசித்தான்
இதை முதலில் செய்திருந்தால்
இன்றைய இவ்வளவு
நிகழ்வுகளை
இழந்திருப்போமே என்று
ஹாலில் நிறுத்தப்படாத டீவி
ஈழத்தமிழர்களின் இறப்புகளைச்
சொல்லிக் கொண்டிருக்க
அவன் கைபேசி
ஒலித்துக் கொண்டே இருந்தது

பறவையே...

பறவையே
மன்னிக்க வேண்டும்
உனக்கு உணவு
கொடுக்க முடியவில்லை
எனவே உனனை
உணவாக்கிக் கொள்கிறோம்

Sunday, February 08, 2009

அமைதியின் பெருவெளி

அமைதியிலிருந்து
உதிரும் வார்த்தைகள்
கொண்டு சேர்க்கும்
அமைதியின் பெருவெளிக்குள்

இரவின் முடிவில்

காலையில்
அறுக்கப்போகிறவனின்
கையை நக்கி
கருணையை பொழிகிறது
கன்றுக்குட்டி

இருவரும்

ஜன்னலோர இருக்கையில்
அமர்ந்து கொள்ளலாமா என
கேட்கும் பெண்ணுக்கு
இடம் கொடுத்து
மாறி அமர்ந்தேன்
பயணம் முடியும் வரை
பேசிக்கொள்ளவில்லை
இருவரும்
ஆனாலும் பழக்கமாயின
அவளுக்கு இயற்கையும்
எனக்கு அவள் ரசனையும்

Tuesday, February 03, 2009

பூக்களின் குழந்தை

மரத்தை அசைக்கிறாள் சிறுமி
பூக்கள் உதிர்கின்றன
கைதட்டி சிரிக்கிறாள்
மறுபடி அசைக்கிறாள்
தொலைவிலிருந்து
கூப்பிடுகிறார் தாத்தா
சிறுமியின் கைகள்
சொன்னதைக் கேட்டு
வடிந்து விட்டன்
அநேகமாய்
எல்லா பூக்களும்
அழைத்துப் போகிறார் தாத்தா
திரும்பிப் பார்த்தபடி செல்லும்
சிறுமியின் தலையில்
ஒட்டிக் கொண்டிருக்கின்றன
சில பூக்களும்
மரத்தின் பிரியமும்

(நேத்ராவுக்கு)

Sunday, February 01, 2009

யாருக்கும் தெரியாதவன்

நான் வில்லனாக சித்தரிக்கப்பட்ட
உங்கள் நெடுங்கதையில்
என்னை கதாநாயகனாக
வைத்திருந்த பக்கங்களை
கிழித்து விட்டீர்கள்

உங்கள் கொடூரமும் வன்மமும்
ஏற்றப்பட்டு நான்
உலவ ஆரம்பித்தேன்

சண்டையிட்டேன்
குரூரம் பயின்றேன்
கொன்றேன்
இன்ன பலவும் செய்தேன்

என் ரத்தத்தை
உங்கள் பேனாவில் நிரப்பி
எழுதிக் கொண்டிருந்தீர்கள்

உங்கள் பசி அடங்க
எனனை பசிக்க வைத்தீர்கள்

என்னிடமிருந்து மனிதம்
எட்டிப் பார்க்கும் போதெல்லாம்
உள் தள்ளிப் பூட்டினீர்கள்

இரவு போதையில்
என்னை உங்களோடு அமரவைத்து
உரையாடி
மேலும் பல வியூகங்களை உருவாக்கினீர்கள்
என் கண்ணோரத் துளியைப்பற்றி
கவலைப்படாமல்

உங்கள் எழுத்தின் நியமனங்களின்படி
முடிவில் நான்
இறந்து விடுவேன்

உங்கள் கதை விவாதிக்கப்படும்
நீங்கள் பேசப்படுவீர்கள்
முடிந்திருப்பேன் நான்
யாருக்கும் தெரியாத கதாநாயகனாய்

அவனும் நானும்

இடது கை இழந்த
ஒரு மனிதனை
நான் வரைந்து கொண்டிருந்தபோது
அவன் வலது கையை நீட்டி
வண்ணங்களை எடுத்து
தன் இடது கையை
வரைந்து கொண்டிருந்தான்
புன்னகைத்தபடியே

Thursday, January 29, 2009

உங்கள் பெயர்

அருகில் வர
அச்சப்படுகிறது
பறவையின் தானியங்களில்
உங்கள் பெயரை
எழுதி வைத்திருக்கிறீர்கள்

குழந்தையின் வரிகள்

முதல் வரியிலிருந்து
ஒரு பட்டாம் பூச்சி பறந்தது

இரண்டாம் வரியில்
ஒளிர்ந்தது வானவில்

மூன்றாம் நான்காம் வரிகளில்
ஒரு மூங்கில் சாதுர்யத்துடன்
புல்லாங்குழல் இசைத்தது

ஐந்தாம் வரியின் மேல்
தூறல் நடனமிட்டது
இசையின் லயத்திற்கேற்ப

ஆறு ஏழு மற்றும் எட்டாம் வரிகளில்
மான்களின் ஓட்டமும்
மயில்களின் ஆட்டமும்
வனத்தின் பேச்சும்
காண கேட்கக் கிடைத்தன

ஒன்பதாம் வரியை
துடைத்து விட்டுப் போனது
ஒரு மேகம்

பத்தாம் வரியில்
ஒரு பெரியவர் சிதையூட்டப்பட்டு
எரிந்து கொண்டிருந்தார்

வரி பதினொன்றில்
பிறந்த குழந்தை
தான் எழுதிய இந்த கவிதையை
முதல் வரியிலிருந்து
வாசித்துப் பார்க்க
குழந்தைக்குப் பெயர் வைத்த
பட்டாம் பூச்சி
சுற்றிக் கொண்டிருந்தது
பெயரை சொல்லியபடி

Tuesday, January 27, 2009

அனுபவ சித்தன்

அனுபவ சித்தன் நான்
கவிதையில் கனிந்து
உருகும் உலகு

உண்மை திசை

பொய் கலப்புகள் நிறைந்த
இந்த கவிதையை
படித்து முடித்தவுடன்
எரித்து விடுங்கள்
மிஞ்சிய சாம்பலை
கடலில் கரைத்து விடுங்கள்
பின் திரும்பிப் பார்க்காமல்
செல்லுங்கள்
எழுதப்படாத கவிதையின்
உண்மை திசை நோக்கி

மின்மினி பூச்சி

என்னைப் பிடிக்க முடியாமல்
தவ்வி தவ்வி
காற்றில் அலைகிறது
இந்த மின்மினி பூச்சி

Monday, January 26, 2009

பதினேழு முறை...

இதுவரை
பதினேழு முறை நான்
இறந்து விட்டேன்

உன் வலி இறக்கிய வார்த்தைகளில்
இரண்டு முறை

நண்பனின் ஏளன மெளனத்தில்
ஓரிரு முறை

தன் துரோகத்திற்கு
என் பெயர் சூட்டி மகிழ்ந்த
உறவினரின் செயலுக்கு
ஒரு முறை

தம் செளகர்யங்களுக்குத் தக்கபடி
என்னை பிடுங்கி
பின் நட்டு வைக்கும்
கரங்களில் பலமுறை

இப்படி இதுவரை
பதினேழு முறை நான்
இறந்து விட்டேன்
(சில விடுபட்டிருக்கலாம்)

வேண்டுமானால்
நீங்களும் என்னை
சாகடித்துக் கொள்ளலாம்

என் நிஜ மரணத்தில்
சேர்த்து வைப்பேன்
எல்லா இந்த
மிச்ச மரணங்களையும்

Sunday, January 25, 2009

விரல் நுனியில்

உடல் திமிர
கை நீட்டி உங்களை
குற்றம் சொல்லும்
என் விரல் நுனியில்
தொங்கிக் கொண்டிருக்கிறேன் நான்
உங்களுக்குத் தெரியாத
ஒரு குற்றமாக
அல்லது
குற்றவாளியாக

கல் மழை

நீ முகத்தில் எறிந்த
முதல் கல்லும்
பிறகு எறிந்த கற்களும்
விதவிதமான காயங்களை
உருவாக்கி இருந்தன

உன் கையில்
கல் மழை

கடைசியாக
நீ எறிந்த கல்
என் உதட்டைப் பார்த்து

குருதி சிந்திய கணத்தில்
திரும்பிப் போனாய்

உனக்குத் தெரியாது
நீ வீசிய
இறுதிக் கல்
என் புன்னகையின் மேல் என்று

ஏதாவது ஒரு நான்

பெரும் பாடுபட்டு
என்னை
ஒன்று திரட்டும் போதெல்லாம்
வெளியேறி விடுகிறது
ஏதாவது ஒரு நான்

பூமியின் கருணை

கண் நெகிழ
வணங்கி
மண்டியிட்டு
முத்தமிட்ட மண்
உதடெங்கும் ஓடி
உள் எங்கும்
பெய்தது
பூமியின் கருணையை

பார்வை குறிப்புகள்

உன் பார்வை குறிப்பில்
நானொரு
உயிரற்ற தாவரம்
ஆனாலும்
உனக்குத் தெரியாமல்
காலடியில்
பனி சூழப் பூத்திருக்கும்
புல்

இரு நூறு ஆண்டுகள்

இரு நூறு ஆண்டுகளுக்கு
முன்பிருந்து
நான் செதுக்கிய பாறைக்கு
இன்று உயிர் வந்து விட்டது
என் உளியைத் தின்று
என்னைத் தள்ளிவிட்டு
ஓடிக்கொண்டிருக்கிறது
இரு நூறு ஆண்டுகள்
முன் நோக்கி

நட்பின் ரகசியங்கள்

நட்பின் ரகசியங்களை
மிக நுட்பமாய்
சொல்லியபடி
மலை உச்சி வரை
என்னை அழைத்து வந்த நீ
தள்ளி விட்டாய்
பின் தற்கொலை
கொடூரமானது
எனச் சொல்லியபடியே
இறங்கிப்போனாய்
எந்த வித
பதற்றங்களும் அற்று