ராஜா சந்திரசேகர் கவிதைகள்
Wednesday, October 31, 2012
கவிதையானது
நாங்கள் பசியைக்
கண்களால் பரிமாறுகிறோம்
நீங்கள் உணவைக்
கைகளால் பரிமாறுங்கள்
என்று எழுதிய பேனாவிற்கு
இந்த வரி உணவானது
எனக்கு கவிதையானது
Wednesday, October 24, 2012
அனுபவ சித்தனின் குறிப்புகள்
970-
அருகருகே தவறுகள்
சரி செய்ய நடக்கிறேன்
அங்கிருந்து இங்கும்
இங்கிருந்து அங்கும்
971-
உண்மையின் பக்கத்தில்
நிற்கிறேன்
ஆனாலும்
பொய் மீது
சாய்ந்து கொள்கிறேன்
972-
அமைதியின் நிழல்
விழுகிறது
தனிமை மீது
Monday, October 22, 2012
முடிந்தது எது?
கனவு என்னைத் தள்ள
நான் கனவைத் தள்ள
கனவு கனவைத் தள்ள
நான் என்னைத் தள்ள
முடியாத விளையாட்டில்
முடிந்தது எது?
Sunday, October 14, 2012
அனுபவ சித்தனின் குறிப்புகள்
965-
அங்கொரு சொல்
இங்கொரு சொல்
எனச் சிதறிக்
கிடக்கிறது
966-
என் மண் புழு
கனவுக்கும்
திமிங்கலப்
பசியுண்டு
967-
புன்னகையற்று முடியும்
உரையாடலில்
கசப்பு
செய்தியாகி விடுகிறது
968-
கொடுப்பதற்கு
உங்களிடம்
ஒன்றுமில்லை
எடுத்துக் கொள்வதற்கு
நிறைய இருக்கிறது
969-
பெரிய கனவு
நசுங்கும் இரவு
நடுவில் நான்
கடல் நீந்துகிறது
மீன் தொட்டியில்
கடல் நீந்துகிறது
என்ற வரியை
எழுதிய பிறகு
மீன்களை
கடலில் விடத்
தோன்றுகிறது
Saturday, October 13, 2012
வந்த கனவு
அக்டோபர் இரண்டில்
டாஸ்மாக் திறந்திருந்தது
இது நல்ல கனவா
கெட்ட கனவா
தெரியாது
ஆனால்
வந்த கனவு
Thursday, October 04, 2012
ஒரு வார்த்தை
பசியின் மீது
பறக்கிறது
ஒரு வார்த்தை
பசி பசி என்று
சொல்லியபடி
ரணம்
தொண்டையில்
சிக்கிய முள்ளை
கனவில் எடுத்தேன்
ரணம்
இரண்டு இடங்களிலும்
தொடர
வானவில்லை
இழுத்துப் போகும்
எறும்புகள்
நட்சத்திரங்கள்
பின் தொடர
ஏதோ ஒரு...
நான் கலைந்து போகும்
மேகம்தான்
என் ஒரு துளியேனும்
ஏதோ ஒரு செடியை
நனைக்கும்
‹
›
Home
View web version