ராஜா சந்திரசேகர் கவிதைகள்
Saturday, March 30, 2013
ஒரு பூ
சிதறிக் கிடந்த
உதிரிப்பூக்களை
மிதிக்காமல்
கடந்து போனதில்
பூத்துப் போனது
மனதில்
ஒரு பூ
Friday, March 29, 2013
கடிதத்தின் வரிகள்
பெரியவர் சொல்ல சொல்ல
கடிதம் எழுதுகிறேன்
நன்றி சொல்லி
வாங்கிப் போகிறார்
போட
கடிதத்தின் வரிகள்
மையாகி
என் விரலில்
பிசுபிசுத்துக் கொண்டே
இருக்கிறது
Tuesday, March 26, 2013
நாவின் அடுக்கில்
நாவின் மேலடுக்கில்
பொய்களும்
கீழடுக்கில்
உண்மைகளும்
நாவின் அடுக்கில்
இரண்டும்
Monday, March 25, 2013
எழுத்து
உங்கள் எழுத்தில்
தூசி ஒட்டிக் கிடக்கிறது
துடைக்கப் போகிறீர்களா
அழிக்கப் போகிறீர்களா
Sunday, March 24, 2013
இல்லாத ஒன்று
இல்லாத ஒன்றில்
இல்லாத ஒன்றை
நிரம்பும்
இல்லாத நான்
தெரியும்
இந்த வரி
உங்களை
நகர்த்தி விடாது
தெரியும்
ஆனால் என்னை
அசைத்தது
Saturday, March 23, 2013
இருந்தும்
கண்ணீரைக்
கடந்துதான்
வந்தேன்
துடைக்க நீளும்
கையிருந்தும்
கேட்கக்
காதுகள் இருந்தும்
Friday, March 22, 2013
தெரியவில்லை
குடித்துவிட்டு
போதையில்
என்னைப் போட்டு
உடைத்து விட்டேன்
எப்படிச் சேர்ப்பதென்று
தெரியவில்லை
Thursday, March 21, 2013
மழையை வரைதல்
மேகத்தை
வரைகிறாள் குழந்தை
மழை பெய்யுமா
என்கிறேன்
மழை போல சிரித்து
வரைகிறாள் மழையை
Tuesday, March 19, 2013
விளிப்பில்
தியானத்தின் விளிப்பில்
அசைகிறது ஒரு சொல்
மெளனம் பார்க்க
மெளனமாய்
நானும் பார்க்க
Sunday, March 17, 2013
நாடோடி
நான் நாடோடி
என் கிளைகளிலும்
பறவைகள் வந்தமர்ந்து
போவதுண்டு
Saturday, March 16, 2013
எழுதும் போது
குருதி வழிகிறது
அருவி போல என்று
எழுதும் போது
பதட்டப்படும் மனம்
அருவி வழிகிறது
குருதி போல என்று
எழுதும் போது
அச்சப்படுகிறது
அனுபவ சித்தனின் குறிப்புகள்
1003-
அடர்ந்த மெளனத்தைக்
கடந்து வருவதும்
கடினமான
ஒன்றுதான்
1004-
கால்களைக்
குத்தாத இருள்
நடக்கத் துணையாய்
நட்சத்திரம்
1005-
எதுவுமில்லாத போது
மெளனம்
எனதாகிறது
1006-
அள்ளிய எல்லாம்
வழிந்து போனது
வெறுங்கையே
உன் தலைக்கனம்
முடிந்து போனதா
1007-
பிரபஞ்சம் சொன்னது
உனக்கான செய்தி
நான்தான்
1008-
நினைவுகள் துரத்த
ஓடுகிறேன்
நினைவுகள் நோக்கி
நான் வானம்
அவ்வளவு எளிதில்
என்னை உங்களால்
மடித்து வைத்துவிட்டுப்
போய் விட முடியாது.
நான் வானம்
Thursday, March 14, 2013
போகிற போக்கில்
போகிற போக்கில்
பார்த்த
வானவில்லின்
ஓரிரு வண்ணத்துளி
கண்ணில் இருக்கிறது
அனுபவ சித்தனின் குறிப்புகள்
996-
பறவையே
சொல்
நான் உன்
வானமா
கூண்டா
997-
உடைந்த
கனவொன்றை
இரண்டாக
வளர்க்கிறேன்
998-
நான்
பஞ்சுதான்
கனமான பஞ்சு
999-
பிடிக்கும் இருள்
ஒளிரவும்
செய்கிறது
1000-
இதற்கெல்லாம்
உங்களுக்கு
எங்கே
நேரமிருக்கிறது
நேரத்தில்தான்
இருக்கிறது
1001-
மனதிலிருப்பதை
மனதால் படிப்பது
மகத்தானது
1002-
என்னிடம் பேச
உங்களிடம் ஏதாவது
இருக்கிறதா
எதுவுமில்லை
வார்த்தைகள்
இருக்கின்றன
Tuesday, March 12, 2013
அழுத்தம்
அழுத்தம் தரும்
இரவிடம் சொல்கிறேன்
இதை விட உன்னால்
இன்னும்
தந்து விட முடியாது
அது குறைத்துக் கொள்ளப்
பார்க்கிறது
நான் வெளியேறப்
பார்க்கிறேன்
Sunday, March 10, 2013
போர்
மனதில் போர்
நடக்கிறது
போரை நடத்துவது
யார்
மனதா
நானா
போரேவா
Saturday, March 09, 2013
புத்தன் மெளனம்
புத்தன் மெளனம்
முறிந்தது
அவன் சொற்களில்
வழிகிறது ரத்தம்
Friday, March 08, 2013
என் பெயர்
காட்சி முடிந்தது
உருண்டு மேலோடிய
பெயர்களில்
தேடினேன்
என் பெயரை
மற்றும் பலரில்
இருந்தது
என் பெயர்
Thursday, March 07, 2013
அனுபவ சித்தனின் குறிப்புகள்
991-
நினைவின் திரியில்
அசையும்
சுடர் நீ
992-
பகலில்
வெயில் இறைக்கும் சொற்கள்
தனிமைக்குப்
போதுமானதாக இல்லை
993-
உங்கள் அருகிலேயே
இருக்கிறீர்கள்
எதற்குத் தேடுகிறீர்கள்
994-
நீரில் தெரிகிறது
எளிய பிம்பம்
கல்லெறிந்து
கலைத்துவிட்டு
வரையப் பார்க்கிறேன்
995-
ஊர்ந்து போகும் தடத்தை
ஒற்றைக் கோடாக பார்க்கிறேன்
பாதையாகப்
பார்க்கச் சொல்கிறது எறும்பு
Tuesday, March 05, 2013
வெற்றுக் கோப்பை
வெற்றுக் கோப்பையில்
ஏதோ இருப்பதாக நினைத்து
அருந்துகிறேன்
அது விஷம் என்று உணர
இறந்து போகிறேன்
Sunday, March 03, 2013
அறியுமா
கண்ணீரில்
தேங்கிபோன குருதியைக்
கண்ணீர் அறியுமா
நீண்ட தூரம்
சுவையுடன் சொன்னார் பெரியவர்
யார் சொன்னது
என் உலகம்
சுருங்கிப் போனதென்று
நான் நினைவுகளில்
உங்களை விட
நீண்ட தூரம் நடக்கிறேன்
(அப்பாவுக்கு)
Saturday, March 02, 2013
துயரத்தின் பாடல்
உதிரும் இலைகளைப்
பார்க்கும் புல்லாங்குழலில்
துயரத்தின் பாடல்
‹
›
Home
View web version