Friday, March 30, 2012

மாயப்பல் சக்கரம்


மாயப்பல் சக்கரம் 
நசுக்கும்
புகுந்து மீள 
வாழ்க்கைக் 
கொஞ்சம் இருக்கும்

Thursday, March 22, 2012

பிகாஸோவுடன் உணவருந்துதல்

பிகாஸோவுடன்
உணவருந்திக் கொண்டிருந்தேன்

உனக்கு வரையத் தெரியுமா என்றார்

பதட்டத்துடன்
தெரியாது ஆனாலும்
நான் உங்கள் ரசிகன் என்றேன்

பரவாயில்லை
ஏதாவது வரைந்து காட்டு என்றார்

நீரை
நடுங்கிய விரலால் தொட்டு
சமனற்ற ஒரு கோடு
வரைந்து சொன்னேன்
என் சக்தி இவ்வளவுதான் என்று

சிரித்தார்

கோடு மறைந்து போயிருந்தது

அவர் மறைந்து போனார்

நானும் மறைந்து கொண்டிருந்தேன்
நினைவில் படிந்து போயிருந்த
அவர் ஓவியத்திற்குள்

Wednesday, March 21, 2012

ஒரு பாடல்

உனக்காக ஒரு பாடலை
சுமந்து வந்தேன்
நீ இறக்கி வைத்துவிட்டுச் சொன்னாய்

நீ ஊதி என் மேல் செலுத்தும்
காற்றுப் போதும்
என் உயிரில் கலந்த
இசையாய் மாறும்

Tuesday, March 13, 2012

புல்

வனம் முழுதும்
துணை வந்து
வழிகாட்டி
அனுப்பி வைத்தது புல்
தொலைதூரம்
வந்த பிறகு தோன்றியது
பெயர் கேட்க மறந்தது

Monday, March 12, 2012

அனுபவ சித்தனின் குறிப்புகள்

876-

மையப்படுத்தும்
மையத்தில்
இருக்க வேண்டும்
என்பதே
மெய்மையின் கோட்பாடு

877-

பயணத்தை
சிறகில் வைத்திருக்கும் பறவை
தூரத்தைக்
கண்களில் வைத்திருக்கும்

878-

இறந்து போனவனை
எழுப்பினேன்
என்னை சாகடித்துவிட்டு
நடந்து போனான்

879-

கிளை வழிகளிலும்
பெரு வழிகளிலும்
பயணித்து
அடைந்தேன்
என் வழியை

880-

துயரத்தைப் பாடிய பறவை
பறந்துவிட்டது
கிளையில் வழிகிறது மழை

Sunday, March 11, 2012

இந்த வரி

நான் மரணத்தைத் தின்று
தனிமையைக்
குடித்துக் கொண்டிருக்கிறேன்

இந்த வரி
அந்தப் பெரியவரைப்
பார்க்கத் தோன்றியது

பொருத்திப் பார்க்கத்
தோன்றவில்லை

Saturday, March 10, 2012

சிறு செடி

பாறையென நினைத்து
அகற்றிக் கொண்டிருக்கிறீர்கள்
என்னை

அதன் கீழ்
சிறு செடியென
நான்
பூத்திருப்பது
தெரியாமல்

இரவின் தூரிகை

இரவின் தூரிகை
இருளில் வரைகிறது
இருள் மட்டுமே
பார்க்கும் ஓவியத்தை

Thursday, March 08, 2012

விழிப்புகள்

அறுந்து போன தூக்கத்தைப்
பிறகு சந்திக்கவில்லை
வந்தது எல்லாமே
வேறு வேறு விழிப்புகள்

Wednesday, March 07, 2012

அனுபவ சித்தனின் குறிப்புகள்

871-

எறும்பின்
நிழல்
யானை போல்

872-

ஊஞ்சல் போல்
அசைகிறது
ஒற்றை வரி

873-

கை மணலில்
ஓடும்
சிறு நதி

874-

இருக்கும் இடத்திலேயே
இருக்கிறது
தேடிக்கொண்டிருப்பது

875-

நகர்ந்து போகும் வாழ்க்கை
நம்மை ஓடவிட்டுப்
பிடிக்கச் சொல்கிறது

Tuesday, March 06, 2012

விளிம்பிலிருந்து

அழகு வழிகிறது
வாழ்க்கையின்
விளிம்பிலிருந்து
பருகி சுவைக்கலாம்
பார்த்து ரசிக்கலாம்

அனுபவ சித்தனின் குறிப்புகள்

869-

வரைந்த கல்லறையில்
உயிரோடு வசிப்பது
சுகமாக இருக்கிறது

870-

கனவை கனவில்
குறித்து வைத்தேன்
குறிப்புகள் முழுதும்
மறந்து விட்டேன்

Saturday, March 03, 2012

கவிதையில் தைப்பவன்

மரணம் கிழித்துப் போட்டவனை
கவிதையில் தைத்துக்கொண்டிருக்கிறேன்
என்றவனை
மழை பெய்யும் இரவில்
சந்தித்தேன்

காப்பாற்றி விடுவாயா என்றேன்

முகநீரைத் தள்ளியபடி சொன்னான்

முயன்று பார்ப்பேன்
இல்லையெனில்
என் கவிதையும்
அவனோடு சேர்ந்து
இறந்து போகும்

மீண்டு வந்த நான்

போரில்
நீ இறந்துவிட்டாய்
இந்த வசனம்
நீ பேசக்கூடாது

மீண்டு வந்த நான்
எம் மண்ணின் நாவால்
பேசித்தான் ஆகவேண்டும்

நகர்ந்து போங்கள்
இல்லை
துண்டாகிப் போவீர்கள்

காகித கப்பும் பெரியவரும்

பேருந்துக்காக
காத்திருக்கும் அவனை
நெருங்கி அமரும்
பெரியவர் சொல்கிறார்
உங்கள எங்கயோ
பாத்திருக்கேன் தம்பி
உங்கள எங்கயோ பாத்திருக்கேன்

பேச்சை தவிர்க்க விரும்பி
அவன் வேகமாகச் சென்று
ஒரு தேநீர் வாங்கி வந்து
அவர் கையில் தருகிறான்

தண்ணீர் போல
சில நொடிகளில்
குடித்து முடிக்கிறார்

தம்பி உங்கள்
இங்கதான் பாத்திருக்கேன்
ஆனா எங்கயோ
பாத்த மாதிரி இருக்கு
எனச்சொல்லிவிட்டு
நன்றியுடன் கும்பிட்டபடி நடக்கிறார்

அவர் கை இறுக்கத்தில்
அந்த காகித கப்
அவன் அவருக்குத் தந்த
நினைவுப் பரிசைப் போல

Thursday, March 01, 2012

அனுபவ சித்தனின் குறிப்புகள்

863-

இல்லாதவன்
அள்ளிக் கொடுக்கிறான்
இல்லாததை

864-

புள்ளி மேல்
வழியும் நதி
வாக்கியம் போல

865-

என் விழுதலின்
கணக்கு
உங்களிடம்

எழுதலின்
குறிப்பு
என்னிடம்

866-

தயங்காமல் உதவ
நீளும் கரங்கள்
தாய்மையின் கிளைகள்

867-

என்ன
விற்கிறாய்

என்னை

868-

கால் நீட்டி
படுக்கச் சொல்கிறது
பிரபஞ்சம்
உடல் சுருக்கிப்
படுக்கச் சொல்கிறது
அறை

பூனை எலி மற்றும் கவிதை

கவிதையை
இழுத்துப் போன பூனை
எலியிடம்
போட்டு விட்டுச் சென்றது

எங்கு போடலாம் என
யோசித்த எலி
அங்கேயே
விட்டு விட்டுச் சென்றது