Wednesday, October 06, 2010

பார்வைகள்

நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் தாஜ்மஹாலை
எனக்குச் சொல்ல முடியுமா
உங்கள் வார்த்தைகளின் வழியே
அதைப் பார்த்துக் கொள்கிறேன் என்றார்
பக்கத்திலிருந்த பார்வையற்ற தோழர்

என் அறிவுக்கெட்டியபடி
அந்த அதிசயத்தைச்
சொல்ல ஆரம்பித்தேன்

இசை கேட்பது போல
அவர் தலையசைத்து
உள்வாங்கியதை
பிறகு சொல்லி
சரிபார்த்துக் கொண்டார்

அவர் வார்த்தைகளின் பார்வையில்
என்னால் தரிசிக்க முடிந்தது
இன்னொரு தாஜ்மஹாலை

3 comments:

  1. திரு.வண்ணதாசன் மின்னஞ்சல்...

    vannadasan sivasankaran to me

    நீங்கள் பார்த்து அவரிடம் சொல்லி
    அவர் பார்த்து உங்களிடம் சொல்ல
    நீங்கள் பார்த்த
    அந்த இன்னொரு தாஜ்மஹல்
    நன்றாக இருக்கிறது
    நான் இன்னும் பார்க்காததை விடவும்,
    *
    சி.க

    ReplyDelete
  2. திரு.வண்ணதாசன் அவர்களுக்கு என் பதில் மின்னஞ்சல்...

    சார் வணக்கம்.
    உங்கள் வரிகள் என்னை நெகிழவைத்தன.
    உங்களின் கூர்ந்த கவனிப்பும் நிறைந்த அக்கறையும்
    உங்கள் கவிதையைப் போலவே உன்னதமானவை.
    நன்றியுடன்
    ராஜா சந்திரசேகர்

    ReplyDelete
  3. //வார்த்தைகளின் பார்வையில்// அருமையான வார்த்தைப் பிரயோகம்.

    ReplyDelete