மக்களை ஊறுகாய் போல் தொட்டுக்கொள்
விருந்து உண்பது போல் அதைச் செய்
அவர்கள் கோபத்தில் நியாயமுண்டு
கோபத்திற்குக் கைது செய்
நியாயங்கள் நீர்த்துப் போகட்டும்
கட்டளைகளுக்கு ஆடு
புனிதர் வேடம் போடு
கருணை வசனம் பேசு
பெரிதாய்ப் பெறு
சொன்னபடி காய் நகர்த்து
முளையிலேயே கிள்ளி எறி
மலையாக வளர விடாதே
பதட்டம் வடிய வேண்டாம்
கொதிநிலை குறையாமல் பார்த்துக்கொள்
வேறு எதையும் சிந்திக்க விடாதே
குழப்பம் குறையக்கூடாது
போதை தள்ளாட்டம் இருக்கட்டும்
அப்போதுதான் நாம் விழாமல் இருப்போம்
பொய்களால் வண்ணம் பூசு
நம்பிக்கை வானவில் நீங்கள்
எனச்சொல்லி நம்ப வை
பேசுவதை நிறுத்தாதே
அவர்களைப் பேச விடாதே
யார் என்ன சொன்னால் என்ன
கேட்பது போல் நடி
வழிகள் கண்டுபிடி
வரவுகள் வரட்டும்
எம் மனசு வெள்ளை மனசு என்று
இரக்க மொழி பேசு
ஊடக வெளிச்சம் பாயும் போது
உள்ளிருள் காட்டாதே
சுற்றி வளைத்துப் பேசு
புன்னகையால் கடந்து விடு
ஒப்பந்தம் செய்
பணபந்தம் சேர்
குளோசப்பில் கண்ணீர் முகங்களும்
கதறலும் வரும் போது
சேனல் மாற்று
வாய்மையை மென்று உண்
வாய்மையே வெல்லும் என்று சொல்
/வாய்மையை மென்று உண்
ReplyDeleteவாய்மையே வெல்லும் என்று சொல்
/ கடைசி வரி அருமையோ அருமை