ராஜா சந்திரசேகர் கவிதைகள்
Thursday, February 28, 2013
சொல்
என் தனிமைக்கு
வண்ணம் பூசுகிறாய்
எப்போது வந்தாய்
சொல்
சிறு முத்தம்
அன்பின் சொல்லெடுத்து
வீசும் உன் கண்களுக்குத்
தர வேண்டும்
சிறு முத்தம்
Wednesday, February 20, 2013
நாம் சந்திக்கும் போது
ஒரே கவிதையை
அந்த முனையிலிருந்து நீயும்
இந்த முனையிலிருந்து நானும்
எழுதி வருகிறோம்
நாம் சந்திக்கும் போது
கவிதை முடிந்து விடும்
Tuesday, February 19, 2013
அனுபவ சித்தனின் குறிப்புகள்
982-
எனக்குள்ளிருந்து
என்னை
விரட்டுபவனிடமிருந்து
தப்பிப்பதெப்படி
983-
ஞானக்காட்டில்
தொலைந்திட வேண்டும்
மௌனக்கூட்டில்
அடைந்திட வேண்டும்
984-
மெளனம் தியானிக்கும்.
நான் அமைதியாய்
பார்த்தபடி
985-
உங்கள் மன்னிப்பின் மீது
என் குற்றங்கள்
முளைத்துக் கிடக்கின்றன
986-.
எழுதிய வரியும்
எழுத நினைத்த வரியும்
வேறு வேறா
ஒன்றா
987-
சிறை
அழகான சிறை
எனும் போது
விரிவு கொள்கிறது
988-
குகைக்குள் பயணிக்கும்
இருள்
பயமற்று
989-
காட்சி முடிகிறது
கடைசியில் வரும்
மற்றும் பலரில்
என் பெயரும்
இருப்பது புரிகிறது
990-
யாரது
இரவை உலுக்குவது
என் மீதும்
கனவுகள் கொட்டுகிறது
Sunday, February 17, 2013
தலையனை அடியில்
அவள் தன் தலையனை அடியில்
அவனுக்குத் தெரியாமல்
ஒரு கனவைப் பதுக்கி வைத்தாள்
அவன் தன் தலையனை அடியில்
அவளுக்குத் தெரியாமல்
ஒரு காதலை ஒளித்து வைத்தான்
அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த
அவர்களுக்குக் கேட்காமல்
பேசிக் கொண்டிருந்தன
கனவும் காதலும்
ரகசியமாய்
இருந்தது
என் குரல்
பதிவு செய்யப்பட்ட
ஒலி நாடாவில்
இடைஇடையே
அருகில் வசிக்கும்
புறாக்களின் சத்தம்
கேட்டபடி இருந்தது
திரும்பத் திரும்பக் கேட்க
வரிகளுக்கிடையே
புறாக்கள் வந்து
வசிப்பது போலவும் இருந்தது
Friday, February 15, 2013
மீன்-நான்
மீன் போல
நீந்தும் என்னை
மீன் என்று
சொல்கிறது மீன்
நான் என்று
சொல்கிறேன் நான்
‹
›
Home
View web version