Thursday, June 28, 2012

அனுபவ சித்தனின் குறிப்புகள்

915-

பல வருடங்களாக
இந்த கல் மேல்
உட்கார்ந்திருக்கிறேன்
நான் சோம்பேறியா?

இல்லை
இன்னொரு கல்

916-

அப்படியே 
நிற்க வைத்திருக்கிறேன் 
கண்ணீர்த் துளிகளை 

கல்லாக்கி 
எறியலாம் 

விழவும் 
வைக்கலாம்

917-

என்னிடம் ஒன்றுமில்லை 
என்பதில் கூட 
ஏதோ இருக்கிறது
ஒன்றுமே இல்லை 
என்பதில்தான் 
எதுவுமே 
இல்லாமல் இருக்கிறது

918-

கடல்மனம் கொண்ட
மீன் நீந்தும்
மீன் தொட்டிக்கு
வெளியிலும்

919-

உன் பிரமிப்பைக் கண்டு
வியக்கச் சொல்கிறாய்
புள்ளி அளவு கூட
உண்மை இல்லாத
உன் வரி 
உதிர்ந்து போனது
தெரியாமல்

920-

எப்போதும் எனக்குத் 
தோல்வி தேவைப்படுகிறது
எப்போதாவது 
வெற்றியும் தேவைப்படுகிறது

921-

தராசில் வைத்துப் 
பார்க்கப்படும் மனிதம் 
எடைக்கல்லாகி விடுகிறது

922-

உறைந்து போன
கேள்விகளை
உடைக்கிறேன்
பதில்கள் சிதற


2 comments:

  1. தராசில் வைத்துப்
    பார்க்கப்படும் மனிதம்
    எடைக்கல்லாகி விடுகிறது
    அற்புதம் அருமை.

    ReplyDelete