ஆழ்ந்த தியானத்தில்
காற்றை உள்ளிழுத்தபோது
கூடவே போய்விட்டன
சில வார்த்தைகளும்
மீன்குஞ்சுகளைப் போல
சுற்றின வார்த்தைகள்
ஒரு மீன்குஞ்சு
மெல்ல நகர்ந்து
ரத்தத்தில் ஓடிய
கெட்ட கனவுகளை
உட்கொண்டது
ஒரு மீன்குஞ்சு
இதயத்தில் தங்கிக்கிடந்த
வன்மத்தை
எடுத்துக்கொண்டது
தலைக்கு வந்த ஒன்று
அங்கு படிந்து போயிருந்த
புராதன கோபங்களைத் தின்றது
தியானத்தின் மூச்சு நீள
உள் சென்ற வார்த்தைகள்
வெளி வந்து விழுந்தன
இறந்த மீன்குஞ்சுகளாய்
ஒன்று மட்டும்
காப்பாற்றச் சொல்லி
போராடியது
இறுதியில்
என் மீது ஒட்டியிருந்தது
அது வீசிச் சென்ற
மரணத்தின் எச்சில்
புராதன கோபம் - புதுசா இருக்கே. இறுதி வரிகள் மிக அருமை ராஜா சார்.
ReplyDelete