Wednesday, August 29, 2018

பொய்கள்

பழைய பொய்களைச்
சொல்கிறோம்

பழைய பொய்கள்
தயாரித்துத் தரும்
புதிய பொய்களைச்
சொல்கிறோம்

   

Saturday, August 04, 2018

வாய்மையை மென்று உண்


மக்களை ஊறுகாய் போல் தொட்டுக்கொள்
விருந்து உண்பது போல் அதைச் செய்

அவர்கள் கோபத்தில் நியாயமுண்டு
கோபத்திற்குக் கைது செய்
நியாயங்கள் நீர்த்துப் போகட்டும்

கட்டளைகளுக்கு ஆடு
புனிதர் வேடம் போடு
கருணை வசனம் பேசு

பெரிதாய்ப் பெறு
சொன்னபடி காய் நகர்த்து

முளையிலேயே கிள்ளி எறி
மலையாக வளர விடாதே

பதட்டம் வடிய வேண்டாம்
கொதிநிலை குறையாமல் பார்த்துக்கொள்
வேறு எதையும் சிந்திக்க விடாதே
குழப்பம் குறையக்கூடாது

போதை தள்ளாட்டம் இருக்கட்டும்
அப்போதுதான் நாம் விழாமல் இருப்போம்

பொய்களால் வண்ணம் பூசு
நம்பிக்கை வானவில் நீங்கள்
எனச்சொல்லி நம்ப வை

பேசுவதை நிறுத்தாதே
அவர்களைப் பேச விடாதே

யார் என்ன சொன்னால் என்ன
கேட்பது போல் நடி

வழிகள் கண்டுபிடி
வரவுகள் வரட்டும்
எம் மனசு வெள்ளை மனசு என்று
இரக்க மொழி பேசு

ஊடக வெளிச்சம் பாயும் போது
உள்ளிருள் காட்டாதே
சுற்றி வளைத்துப் பேசு
புன்னகையால் கடந்து விடு

ஒப்பந்தம் செய்
பணபந்தம் சேர்
குளோசப்பில் கண்ணீர் முகங்களும்
கதறலும் வரும் போது
சேனல் மாற்று

வாய்மையை மென்று உண்
வாய்மையே வெல்லும் என்று சொல்


பழைய நண்பர்

கடந்து போகிற
யாரோ ஒருவர்
பழைய நண்பரை
ஞாபகப்படுத்துகிறார்
காலங்களைக் குடைந்து
நினைவுகள் போகின்றன
புகைமூட்டமான முகம்
சித்திரமாக விரிகிறது
சபாஷ் எனச்சொல்லி
சத்தமாகச் சிரிப்பார்
போகும் ரயிலின்
மங்கும் ஒலி போல்
அது முடிவடையும்
கண்களைத் துடைத்தபடி
அங்கிருந்து திரும்பினேன்
கடந்து போனவர்
அருகில் வந்து நின்றார்
தேநீர் அருந்தினார்
மணிக் கேட்டுப் புன்னகைத்தார்
உற்றுப் பார்த்துச் சொன்னார்
என் சிநேகிதன் மாதிரியே
உங்களுக்கு முகஜாடை
அதான் வந்து பாத்தேன்
அவரப் போயிப் பாக்க முடியாது
இறந்துட்டாரு
நன்றி சொல்லிவிட்டுப் போனார்
சபாஷ் எனச்சொல்லி
சத்தம் போட்டு
சிரிக்க வேண்டும் போல் தோன்றியது

- கல்கி(5 ஆகஸ்ட் 2018) இதழில் வெளியான கவிதை-

Friday, July 20, 2018

இருத்தல்

எப்படி எல்லாம் தற்கொலை செய்து கொள்ளலாம் என்பதை
அவன் பட்டியலிட்டான்
கயிற்றில் தொங்கலாம்
.தண்டவாளங்களின் நடுவில் நடந்து போய்
ரயில் மோதிச் சிதறலாம்
விஷமாத்திரைகள் விழுங்கலாம்
கை நரம்புகள் அறுத்து மரணம் வடிய முடியலாம்
மலை மீதிருந்து குதிக்கலாம்
கடல் இறங்கிக் கரை மிதக்கலாம்
உண்ணா நோன்பிருந்து மரணம் புசித்துப் போகலாம்
உடலில் எண்ணெய் ஊற்றித் தீக்குச்சி உரசிப் பற்றவைத்துக்கொள்ளலாம்
இப்படி வரிசைப்படுத்தினான்
ஒருகணம் வாழ்ந்துப் பார்த்துவிட வேண்டும் என
பொறிதட்ட வரிசை இப்படி மாறியது
கயிற்றில் குழந்தைப் போல் கொடிகளைக் கட்டி
வீட்டை அலங்கரித்தான்
போகும் ரயிலுக்குக் கை அசைத்துவிட்டு
தண்டவாளத்தை முத்தமிட்டான்
விஷமாத்திரைகள் என்று தாளில் எழுதி
ரப்பரால் அழித்து ஊதித்தள்ளினான்
ஒரு கையில் பறவையும் மறு கையில் வானமுமாக
பச்சைக்குத்திக்கொண்டான்
மலை மீது ஏறிக் காட்சிகள் பார்த்துக் கண்களுக்குள் சேமித்தான்
வானத்துக்கும் அவனுக்கும் இடையில் போன பறவையை
எட்டிப் பிடிக்கப் பார்த்தான்
நீச்சல் கற்றுக்கொண்டு நீந்தி நீந்திக் கடலோடு உரையாடினான்
அலைகளோடு அலையானான்
எல்லா இடங்களிலும் எல்லா வகை உணவுகளையும்
ரசித்து ருசித்துச் சாப்பிட்டான்
எண்ணெய் ஊற்றித் தீக்குச்சி உரசி அழகான விளக்கேற்றி
எழுத அருகில் சில தாள்களை வைத்தான்
அசையும் சுடரின் தாளலயத்துக்கேற்ப
இருத்தல் பற்றி எழுதத் தொடங்கினான்


-குங்குமம்(20.7.2018)இதழில் வெளியானது.-

Thursday, July 19, 2018

ஓடி ஓடி

ஓடி ஓடி
என்னைப் பிடித்தேன்
பிறகு விடுவித்தேன்
ஓடிப்போகட்டும் என்று
 
 

Tuesday, July 17, 2018

யோசனைக்கூடம்

கேள்விகள் கேட்டால்
அடைக்கிறீர்கள்
பதில்கள் சொல்லாமல்
தவிர்க்கிறீர்கள்
அவர்களுக்கு
அது சிறையல்ல
யோசனைக்கூடம்
மேலும் கேள்விகளோடு
வருவார்கள்
உங்களைக் கிழிக்க

Saturday, July 14, 2018

இடையில்

பிடிபடாத மெளனம்
பிடிபடும் சொற்கள்
இடையில் இருக்கிறது
எழுத வேண்டிய கதை

Saturday, June 23, 2018

தூரிகை பாவம்

குழந்தை கை அசைவின் 
தூரிகை பாவத்தில்
பிரபஞ்சத்திற்கு 
கிடைக்கிறது ஓவியம் 

Monday, June 18, 2018

நாங்கள் கூழாங்கற்கள்

மலைப்பிரசங்கம் செய்தவர்கள்
மலையை 
அபகரித்துக்கொண்டு 
போய் விட்டார்கள்
நாங்கள் கூழாங்கற்கள்
பொறுக்கியபடியே
வீடு திரும்பிக்கொண்டிருக்கிறோம்

Saturday, June 16, 2018

அலைகளோடு

கடலருகே அமர்ந்து
எழுதிக்கொண்டிருந்தேன்
ஒரு கதாபாத்திரம்
ஓடிப்போய்
அலைகளோடு விளையாடி விட்டு
கதைக்குத் திரும்பி விட்டது


Wednesday, June 06, 2018

பழைய கடிதங்கள்

முன் போல்
அப்பாவால்
நீண்ட கடிதம்
எழுத முடிவதில்லை
கை நடுங்குகிறது
அவரின் பழைய கடிதங்களை
இந்தத் தேதியிட்டு
படித்துக்கொள்கிறேன்




Sunday, May 27, 2018

உயிர்

ஏங்க அடிக்கிறீங்க?

ஏய்யா அடிக்கற?

எதுக்குடா அடிக்கற?

உயிர் பிரிந்திருந்தது.

Saturday, May 26, 2018

உங்களைக் கொல்லவேண்டும்

 #bansterlite #savethoothukudi #kumarteastall #conversationwithafriend
அதுவாகச் சரியாகிவிடும் என்றார்
மெதுவாக
இந்த மனோபாவம்தான்
நம்மைக் கொன்றுகொண்டிருக்கிறது என்றேன்
சத்தம் குறைத்துப் பேசச் சொன்னார்
உங்களைக் கொல்லவேண்டும்
போலிருக்கிறது
சைகையால் சொன்னேன்
மீதித் டீயைக் குடிக்காமல்
எழுந்து போய்விட்டார்
துக்கத்தை
விழுங்கிக்கொண்டிருந்தேன்
தேநீரைக்குடித்து
- ராஜா சந்திரசேகர்


#bansterlite #savethoothukudi #kumarteastall #conversationwithafriendஅதுவாகச் சரியாகிவிடு

Thursday, May 24, 2018

தெரியவில்லை

யாரென்று
தெரியவில்லை
எழுதியவரின்
பெயரில்லை
எழுதியதில்
அவர் இருந்தார்


Wednesday, May 16, 2018

நடுவில்

சொற்களின் நடுவில்
காற்று இருக்கிறது
புத்தகம் மிதக்கிறது



வரைந்த வானவில்

வரைந்த வானவில்லை
முத்தமிடுகிறது குழந்தை
வானம் அசைகிறது


பயணித்தல்

வெளியே பயணித்தல்
தூரங்களால் ஆனது
உள்ளே பயணித்தல்
ஆழங்களால் ஆனது


Tuesday, May 15, 2018

நீயே விழிச்சுக்கப் பாரு


நீயே விழிச்சுக்கப் பாரு
இங்கு எதுவும் சரியில்ல 
தம்பி கேளு
தண்ணிய கேட்டா
டாஸ்மாக் காட்டுறான்
தடுமாறி விழுந்தா
போட்டு அடிக்கறான்
கட்டளைக் கேட்டு
பொம்மைகள் ஆடுது
உரிமைகள் எல்லாம்
காத்துலப் பறக்குது
அரசியல் புனிதர்
ஆயிரம் பேசுறார்
உண்மைய விட்டு
உளறிக் கொட்டுறார்
விளைஞ்சப் பயிறு
வாடிக்கிடக்குது
விதைச்ச மனசு
துடிச்சிப்போகுது
உள்ளுக்குள்ள
பேசி மறைக்கிறான்
ஊமை வேஷம்
போட்டுப் போகிறான்
கார்ப்பரேட் பையில
காசு சேருது
எங்க வயித்துல
பசி ஊறுது
நிம்மதி குறைஞ்சிப் போச்சு
நினப்பு கொதிநிலையாச்சு
மனசுல கூடுது கனம்
போராடிப் பாக்குது ஜனம்
தீர்வ நோக்கி நகரல
திரைக்குள் பேரம் முடியல
எல்லாம் தப்பாப் போகுது
நாடு நஞ்சா ஆகுது
ஒழுக்கம் நசுங்கிப் போச்சு
உண்மை ஓட்டை ஆச்சு
எதுவும் சரியா நடக்கல
என்ன ஆகுமோ தெரியல
நீயே விழிச்சுக்கப் பாரு
இங்கு எதுவும் சரியில்ல
தம்பி கேளு
- குமுதம் இதழில் (16.5.201) வெளியானது -

Monday, May 14, 2018

வழிப்போக்கன்

உறங்குகிறது 
நிழல் 

இளைப்பாறுகிறது 
நாய்

கடக்கிறான்
வழிப்போக்கன் 


Saturday, May 12, 2018

சிறுபுல்

நான் சிறுபுல் 
பெருவனம் 
முத்தமிடும்போதெல்லாம் 
கூடுதலாகக் கொஞ்சம் 
அசைந்து கொள்வேன்