Thursday, April 19, 2012

நான்


நான் சுமந்து
நான் சுமந்து
நான் சுமந்து
பாரமானேன்
நான் இறக்கி
நான் இறக்கி
நான் இழந்து
இலேசானேன்

Monday, April 09, 2012

எதோ ஒரு கணத்தில்

எதோ ஒரு கணத்தில் 
பூனையின் கண்களில் 
கருணையை 
அறியும் எலி
அந்தக் கணத்தைத் 
தன் தப்பித்தலுக்குரிய 
தருணமாக்கி விடுகிறது

Sunday, April 08, 2012

பெயர்கள் வழியே

என் புனைப்பெயர்கள் வழியே 
நீங்கள் என்னை 
வந்தடைய முடியாது 
திசை சிக்கலாகும் 
என் பெயர் வழியே 
நீங்கள் வந்தடைந்தால் 
திரும்பிப் போக முடியாது 
வழி மறந்து போகும்

வனம்

வனம் கட்டிப் போடும்
புல்லாங்குழலை
என்னிடம்
விட்டுச் சென்றான் வழிபோக்கன்
வாசிக்க
கட்டவிழ்ந்தது என்னுள்
இருந்த வனம்


Tuesday, April 03, 2012

நீங்கள் யார்


நீங்கள் யார் 
நான் 
உங்கள் கேள்வியில் 
முடியும் பதில் 

உங்கள் பதிலில் 
தொடங்கும் கேள்வி

Friday, March 30, 2012

மாயப்பல் சக்கரம்


மாயப்பல் சக்கரம் 
நசுக்கும்
புகுந்து மீள 
வாழ்க்கைக் 
கொஞ்சம் இருக்கும்

Thursday, March 22, 2012

பிகாஸோவுடன் உணவருந்துதல்

பிகாஸோவுடன்
உணவருந்திக் கொண்டிருந்தேன்

உனக்கு வரையத் தெரியுமா என்றார்

பதட்டத்துடன்
தெரியாது ஆனாலும்
நான் உங்கள் ரசிகன் என்றேன்

பரவாயில்லை
ஏதாவது வரைந்து காட்டு என்றார்

நீரை
நடுங்கிய விரலால் தொட்டு
சமனற்ற ஒரு கோடு
வரைந்து சொன்னேன்
என் சக்தி இவ்வளவுதான் என்று

சிரித்தார்

கோடு மறைந்து போயிருந்தது

அவர் மறைந்து போனார்

நானும் மறைந்து கொண்டிருந்தேன்
நினைவில் படிந்து போயிருந்த
அவர் ஓவியத்திற்குள்

Wednesday, March 21, 2012

ஒரு பாடல்

உனக்காக ஒரு பாடலை
சுமந்து வந்தேன்
நீ இறக்கி வைத்துவிட்டுச் சொன்னாய்

நீ ஊதி என் மேல் செலுத்தும்
காற்றுப் போதும்
என் உயிரில் கலந்த
இசையாய் மாறும்

Tuesday, March 13, 2012

புல்

வனம் முழுதும்
துணை வந்து
வழிகாட்டி
அனுப்பி வைத்தது புல்
தொலைதூரம்
வந்த பிறகு தோன்றியது
பெயர் கேட்க மறந்தது

Monday, March 12, 2012

அனுபவ சித்தனின் குறிப்புகள்

876-

மையப்படுத்தும்
மையத்தில்
இருக்க வேண்டும்
என்பதே
மெய்மையின் கோட்பாடு

877-

பயணத்தை
சிறகில் வைத்திருக்கும் பறவை
தூரத்தைக்
கண்களில் வைத்திருக்கும்

878-

இறந்து போனவனை
எழுப்பினேன்
என்னை சாகடித்துவிட்டு
நடந்து போனான்

879-

கிளை வழிகளிலும்
பெரு வழிகளிலும்
பயணித்து
அடைந்தேன்
என் வழியை

880-

துயரத்தைப் பாடிய பறவை
பறந்துவிட்டது
கிளையில் வழிகிறது மழை

Sunday, March 11, 2012

இந்த வரி

நான் மரணத்தைத் தின்று
தனிமையைக்
குடித்துக் கொண்டிருக்கிறேன்

இந்த வரி
அந்தப் பெரியவரைப்
பார்க்கத் தோன்றியது

பொருத்திப் பார்க்கத்
தோன்றவில்லை

Saturday, March 10, 2012

சிறு செடி

பாறையென நினைத்து
அகற்றிக் கொண்டிருக்கிறீர்கள்
என்னை

அதன் கீழ்
சிறு செடியென
நான்
பூத்திருப்பது
தெரியாமல்

இரவின் தூரிகை

இரவின் தூரிகை
இருளில் வரைகிறது
இருள் மட்டுமே
பார்க்கும் ஓவியத்தை

Thursday, March 08, 2012

விழிப்புகள்

அறுந்து போன தூக்கத்தைப்
பிறகு சந்திக்கவில்லை
வந்தது எல்லாமே
வேறு வேறு விழிப்புகள்

Wednesday, March 07, 2012

அனுபவ சித்தனின் குறிப்புகள்

871-

எறும்பின்
நிழல்
யானை போல்

872-

ஊஞ்சல் போல்
அசைகிறது
ஒற்றை வரி

873-

கை மணலில்
ஓடும்
சிறு நதி

874-

இருக்கும் இடத்திலேயே
இருக்கிறது
தேடிக்கொண்டிருப்பது

875-

நகர்ந்து போகும் வாழ்க்கை
நம்மை ஓடவிட்டுப்
பிடிக்கச் சொல்கிறது

Tuesday, March 06, 2012

விளிம்பிலிருந்து

அழகு வழிகிறது
வாழ்க்கையின்
விளிம்பிலிருந்து
பருகி சுவைக்கலாம்
பார்த்து ரசிக்கலாம்

அனுபவ சித்தனின் குறிப்புகள்

869-

வரைந்த கல்லறையில்
உயிரோடு வசிப்பது
சுகமாக இருக்கிறது

870-

கனவை கனவில்
குறித்து வைத்தேன்
குறிப்புகள் முழுதும்
மறந்து விட்டேன்

Saturday, March 03, 2012

கவிதையில் தைப்பவன்

மரணம் கிழித்துப் போட்டவனை
கவிதையில் தைத்துக்கொண்டிருக்கிறேன்
என்றவனை
மழை பெய்யும் இரவில்
சந்தித்தேன்

காப்பாற்றி விடுவாயா என்றேன்

முகநீரைத் தள்ளியபடி சொன்னான்

முயன்று பார்ப்பேன்
இல்லையெனில்
என் கவிதையும்
அவனோடு சேர்ந்து
இறந்து போகும்

மீண்டு வந்த நான்

போரில்
நீ இறந்துவிட்டாய்
இந்த வசனம்
நீ பேசக்கூடாது

மீண்டு வந்த நான்
எம் மண்ணின் நாவால்
பேசித்தான் ஆகவேண்டும்

நகர்ந்து போங்கள்
இல்லை
துண்டாகிப் போவீர்கள்

காகித கப்பும் பெரியவரும்

பேருந்துக்காக
காத்திருக்கும் அவனை
நெருங்கி அமரும்
பெரியவர் சொல்கிறார்
உங்கள எங்கயோ
பாத்திருக்கேன் தம்பி
உங்கள எங்கயோ பாத்திருக்கேன்

பேச்சை தவிர்க்க விரும்பி
அவன் வேகமாகச் சென்று
ஒரு தேநீர் வாங்கி வந்து
அவர் கையில் தருகிறான்

தண்ணீர் போல
சில நொடிகளில்
குடித்து முடிக்கிறார்

தம்பி உங்கள்
இங்கதான் பாத்திருக்கேன்
ஆனா எங்கயோ
பாத்த மாதிரி இருக்கு
எனச்சொல்லிவிட்டு
நன்றியுடன் கும்பிட்டபடி நடக்கிறார்

அவர் கை இறுக்கத்தில்
அந்த காகித கப்
அவன் அவருக்குத் தந்த
நினைவுப் பரிசைப் போல

Thursday, March 01, 2012

அனுபவ சித்தனின் குறிப்புகள்

863-

இல்லாதவன்
அள்ளிக் கொடுக்கிறான்
இல்லாததை

864-

புள்ளி மேல்
வழியும் நதி
வாக்கியம் போல

865-

என் விழுதலின்
கணக்கு
உங்களிடம்

எழுதலின்
குறிப்பு
என்னிடம்

866-

தயங்காமல் உதவ
நீளும் கரங்கள்
தாய்மையின் கிளைகள்

867-

என்ன
விற்கிறாய்

என்னை

868-

கால் நீட்டி
படுக்கச் சொல்கிறது
பிரபஞ்சம்
உடல் சுருக்கிப்
படுக்கச் சொல்கிறது
அறை

பூனை எலி மற்றும் கவிதை

கவிதையை
இழுத்துப் போன பூனை
எலியிடம்
போட்டு விட்டுச் சென்றது

எங்கு போடலாம் என
யோசித்த எலி
அங்கேயே
விட்டு விட்டுச் சென்றது

Monday, February 27, 2012

கண்டெடுத்தோம்

உரையாடலின் நடுவில்
ஓடியது அமைதி
நதி போல
அதில் கண்டெடுத்தோம்
புதிய பேச்சுக்கான
வார்த்தைகளை

மழலைக்கிளை

குழந்தை அசைக்கும்
மழலைக்கிளை
உதிர்கின்றன
என் வயதுகள்

Sunday, February 26, 2012

தந்தது குழந்தை

நான் விட்டுப் போன
வரியை
வளைத்து நெளித்து
திரும்ப வந்தபோது
தந்தது குழந்தை

வரியின் வடிவம்
ஓவியமாகவும்
படிக்க கூடிய
கவிதையாகவும்
மாறி இருந்தது

ஏன்

தொலைந்து போனவைகளையே
உங்கள் கவிதையில்
அடுக்கி வைக்கிறீர்கள்
இழந்துபோனவைகளையே
எடுத்துச் செல்கிறீர்கள்
ஏன்

நீங்கள்
தொலைந்து போகாமல் இருக்க
இழந்து போகாமல் கடக்க

அனுபவ சித்தனின் குறிப்புகள்

859-

மறந்து போகாமலிருக்க
பிரபஞ்சத்திடம்
சொல்லிவைத்திருக்கிறேன்

860-

மனதில் இருந்த வரிக்கும்
தாளில் வந்த வரிக்கும்
இடையில் தேடினேன்
தொலைந்த வரியை

861-


இருள் வழி
நடக்க
இருள் ஒளியாச்சு

862-

தள்ளி வைத்த தூக்கம்
சொல்லாமல் வந்து
தட்டுகிறது
இமைகளின் கதவை

பொங்கும் கடல்

இந்தக் கனவு
நேற்றிரவு நீந்தியது
அழகான மீன் தொட்டி
அழகழகான மீனகள்
மேஜையிலிருந்து
விழுந்து கொண்டிருக்கிறது
மேஜையின் அடியில்
நுரைத்துப் பொங்கும் கடல்

Tuesday, February 21, 2012

அனுபவ சித்தனின் குறிப்புகள்

849-

இது என்
இன்றைய முகம்
இதுவே என்
முகமல்ல

850-

வசதியாக
கால் நீட்டி நடக்கிறான்
வழிப்போக்கன்

851-

இந்த பூக்களில்
நீங்கள்
எந்த பூவின்
வாசம்

852-

தெரியாமல்
நடந்த வழி
திரும்பி நடக்க
நட்பாச்சு

853-

அன்பின்
கரம் நீளும்
பிரபஞ்ச
விளிம்பைத் தொடும்

854-

நாய் வாலை
நிமிர்த்திய வரியில்
பொய் சுருண்டிருந்தது

855-

முந்திச்
சென்றவனின் பிணம்
பிந்திச் சென்றது

856-

நான் இல்லாது
போனபின்
என் நிழல்
என்ன செய்யும்

857-

உங்கள்
எந்த முகமூடியும்
அந்த வரிக்கு
பொருந்தவில்லை
விட்டுவிட்டுப் போய்
வேறு வேலை
பாருங்கள்

858-

இருள்
மகுடியென

சுடர் அசையும்
பாம்பென

குழந்தையின் வானவில்

வண்ணம் கத்தரித்து
ஒட்டி ஒட்டி வானவில்
உருவாக்குகிறாள் குழந்தை

அதில் மெதுவாய்
பின்னால் வந்து
நிறைகிறது வானம்

அலை ஒளி

அலை ஒளியாய்
ஓடி வந்து
காலை முத்தமிடும்
நீரில் தள்ளிய நிலா

Sunday, February 19, 2012

வரிசை மாற்றம்

நீங்கள்
அவர்கள்
மற்றும்
நான்

இதில்
நான்
விரும்புவதெல்லாம்
வரிசை மாற்றமே

நீங்கள்
நான்
மற்றும்
அவர்கள்

அவர்கள்
நான்
மற்றும்
நீங்கள்

என

Wednesday, February 15, 2012

பார்க்கிறேன்

இறந்துபோன நான்
என்னைப் படுக்க வைத்திருக்கும்
கோணத்திலிருந்து பார்க்கிறேன்
யார் யார் வந்திருக்கிறார்கள் என்று

எவ்வளவோ பேர்
விடுபட்டுப் போயிருக்கின்றனர்

எப்போதும்
என் கால் நக்கி
சுற்றிவரும் நாய்க்குட்டி
நான் மூடிவைக்கப்பட்டிருக்கும்
கண்ணாடிப் பெட்டியை
முட்டி முட்டித் தள்ளி
என் கால்கள் தொடப்
போராடிக்கொண்டிருக்கிறது

மிதத்தல்

குளிர்ந்த திரவத்தை
விஷமாகப் பார்த்தபோது
என் மரணம்
மிதந்துகொண்டிருந்தது
பனிக்கட்டியைப் போல

Tuesday, February 14, 2012

யாரென்று

உங்கள்
துப்பாக்கிக் குறியை
மாற்றிவைத்திருக்கிறேன்
செத்து விழும்போது தெரியும்
யாரென்று

அனுபவ சித்தனின் குறிப்புகள்

842-

பாறை இருள்
தள்ளிப் பார்த்து
முடியாமல்
நின்றுவிட்டேன்

843-

காணமல் போய்
கிடைத்தேன்
வேறு நானாய்

844-

புகையாகவே சுழலும்
வரி வடிவம்
விரும்பா வார்த்தைகள்

845-

கல்லறையில் மழை
புரண்டு
படுக்கிறேன்

846-

கண்ணீரே
கோபித்துக்கொள்ளாதே
அழுவதற்கு
எனக்கு காரணங்கள்
கிடைக்கவில்லை

847-

என் உயரத்திலிருந்த
மிருகத்தை சந்தித்தேன்
பெயர் கேட்டேன்
சொன்னது
என் பெயரை

848-

எழுது என்ற கட்டளை
தூக்கிப்போட்டது
மொழி வனத்திற்குள்

Saturday, February 11, 2012

அனுபவ சித்தனின் குறிப்புகள்

839-

ஒரு மரம்
கல்லெறியப்
பறந்தது வனம்

840-

என் உடலில்
எங்கிருந்தும்
நீ என்னைத்
தோண்டி எடுக்கலாம்

841-

வெட்டி எறிந்த
வன்மத்தை
ஒரு நாள் பார்த்தேன்
காயம் ஆறா
மிருகமென

ஒன்றுமில்லை

மழை பெய்கிறது
என்னிடம்
சொல்வதற்கு
ஒன்றுமில்லை

Tuesday, February 07, 2012

பதில்

கவிதையில் ஊர்ந்து சென்ற
எறும்பிடம் சொன்னேன்
ஏதாவது ஒரு எழுத்தை
இழுத்துச் செல்லேன்
உனக்கு உணவாகும் என்று
கவிதையின்
மொத்த அர்த்தத்தையும்
எடுத்துச் செல்கிறேன்
தெரியவில்லையா உனக்கு
எனச் சொல்லிப் போனது

நட்பு

எலியுடன் நட்புகொள்ளாதீர்
எத்தனையோ நாள்
சொல்லியும்
கேட்காத நண்பர்
சிக்கிப் போனார்
ஒருநாள்
எலிப்பொறிக்குள்

Saturday, January 28, 2012

அனுபவ சித்தனின் குறிப்புகள்

834-

உன்னால் பாயமுடியாது
வேகமாக பாய்ந்தேன்
குரல் நின்று போனது

835-


காட்சிக்கும் பார்வைக்கும்
இடையில்
உதிரிகளாக
தென்படாதவைகளும்

836-

உப்புகரிக்காத
கண்ணீர்துளி என்று
ஒன்றும் இல்லை

837-

ஏதோ குறைகிறது என்று
எழுத்து ஏற்படுத்தும் சமிக்ஞை
படைப்பின் பூரணத்துவத்தை
பரிசோதிக்கச் செய்கிறது

838-

கொஞ்சம் ஓய்வு தேவை
என்ற வரி
நிறைய வேலை தேவை
என்ற வரியிடம்
சரணடைந்து விடுகிறது

Thursday, January 26, 2012

இரவின் கிளையில்

இரவின் கிளையில்
கனவொன்றைப் பறித்து
இறங்கினேன்
ருசிப்பதற்குள்
விடிந்து போயிருந்தது

ஆனாலும்

என் நிழலைக் கத்தரித்து
இன்னொரு நானாக்கினேன்
ஆனாலும் நீண்டிருந்தது
மற்றொரு நிழல்

Tuesday, January 24, 2012

நீ வீட்டுக்குப் போ

நீ வீட்டுக்குப் போ
என்று சொல்லிவிட்டு
அப்பா நீரில் குதித்து
தற்கொலை செய்துகொண்டதாக
அவன் சொன்னான்

அதன் பிறகுதான்
நீச்சல் கற்றுக்கொண்டதாகவும்
சொன்னான்

நதியில்
தொலைந்துபோன அப்பாவை
ஒரு நாள் கண்டுபிடித்துவிடுவேன்
என்றும் சொன்னான்

வரைந்த கத்தி

தலைக்கு மேல்
வரைந்த கத்தி
தொங்கிக்கொண்டிருந்தது
எந்த நேரத்திலும் விழுந்து
பதம் பார்த்துவிடலாம்
கத்தியிடமிருந்து தப்பிக்க
என்னை ஓவியமாக
மாற்றியாக வேண்டும்

Sunday, January 22, 2012

கடினமான இரவு

கடினமான இரவை
தனிமையால்
செதுக்குகிறேன்
விடிவதற்குள்
எனக்கொரு
சிற்பம் கிடைத்துவிடும்

உறைந்த காலம்

மேஜையின் மேல்
நீண்ட காலமாக
எழுதிய கவிதை

பார்க்கும்போதெல்லாம்
தோன்றுகிறது
காலம்
உறைந்துகிடப்பதைப் போல

தத்துவம்

தத்துவத்தின் மேல்
அமர்ந்திருந்தேன்
தத்துவம்
தள்ளிவிட
தத்துவத்தின் மேல்
விழுந்தேன்

Saturday, January 21, 2012

அனுபவ சித்தனின் குறிப்புகள்

830-

புன்னகை
பூங்கொத்தைப் போல
யாருக்கும் தரலாம்

831-

என்னிடம் எதுவுமில்லை
உள்ளங்கையில்
வந்து விழும்
மழைத்துளிகளைத் தவிர

832-

தொலைவிலிருந்து
வருகிறேன் என்றான்
அவன் கண்களில்
நீண்டிருந்த தூரத்தை
வரியில் உணர முடிந்தது

833-

வனத்திற்குச்
சென்றபோது
நானொரு மூங்கில்
திரும்ப
புல்லாங்குழல்

சாலையில்

வழிப்போக்கனைப் போல
இந்த சாலையில்
நுழைந்தேன்
அது என்னை
விருந்தினரைப் போல
வரவேற்றது

ஒளி

கண் சிமிட்டியது
நட்சத்திரம்
நம்பிக்கையில்
பரவியது
ஒளி

Friday, January 20, 2012

அனுபவ சித்தனின் குறிப்புகள்

826-

தனிமை
நிரம்பித் ததும்பும்
இந்த அறையில்
தனிமைக்குத்
துணையாய் நான்

827-

என் கால்களின் செவி
அறியும் ஒற்றைச் சொல்
செல்

828-

என்னைப்
பூட்டிவைத்துப் போகிறாய்
உனக்குத் தெரியாது
நான் புகைபோல கசிந்து
வெளியேறிவிடுவேன் என்று

829-

மெளனம் படர்ந்து
மெளனம் படர்ந்து
மெளனம் நாவாய் ஆனது

வார்த்தை மறந்து
வார்த்தை அழிந்து
மொழியே முடிந்து போனது

திசை மேய்ந்து

நான் தொலைந்த ஆடு
மந்தையைத்
தொலைத்த ஆடு
ஒற்றை ஆடு
தன் திசை மேய்ந்து
தன் வழிப்போகும்
தனி ஆடு

Monday, January 16, 2012

முழுதும்

முழுதும்
எழுதியப் பிறகும்
இந்த பக்கத்தை
வெள்ளை காகிதமாகப்
பார்க்க முடிகிறது
என்னால்

அனுபவ சித்தனின் குறிப்புகள்

817-

அந்தரத்தில்
மிதக்கிறது
என் முகவரி

818-

என் பிரார்த்தனைகள்
முடிந்து போயின
இனி நான்
கடவுளை சந்திக்க
நாளாகும்

819-

ஒருவரை ஒருவர்
தள்ளிவிடாமல்
பேசிக்கொண்டோம்
ஆனாலும்
எத்தனையோ முறை
விழுந்து போனோம்

820-

எதுவுமில்லை
அன்பை பரிமாறிப்
பசியடைக்கப்
பார்க்கிறோம்

821-

நினைவின் பாதையில்
நீண்ட தூரம்
நினைவுகளற்று

822-

உறங்கச் சொல்கிறேன்
கண்களிடம்
விழிக்கச் சொல்கிறேன்
இமைகளிடம்

823-

சொல்
திறக்கும் காற்று
இசை எடுத்துப் போகும்

824-

குடித்துக் கொள்ள
வைத்திருந்த தண்ணீர்
அந்த வேளை
உணவானது

825-

அன்பின் நெகிழ்வில்
உயிர்த்திருக்கிறது
வாழ்வின் ருசி

Sunday, January 15, 2012

ஆசிர்வாதம்

என் குடை
நனையும் ஒரு ஏழைக்கு
பயன்படும் எனில்
அதை தந்துவிட்டுச்
செல்லும்போது
அந்த மழையே
என்னை ஆசிர்வதிக்கும்

எளிமையான கவிதை

இது தண்ணீரைப் போன்று
எளிமையான கவிதை
தாகம் தீர்க்குமா
என்று தெரியாது

மழையில்

மழையில்
நனைந்து வந்திருக்கிறீர்களே என்று
நீங்கள் சொன்னபோதுதான்
எனக்குத் தெரிந்தது
நான் மழையை
அழைத்து வந்திருப்பது

Saturday, January 14, 2012

அனுபவ சித்தனின் குறிப்புகள்

811-

நான் தயாரித்த
கண்ணாடி எனினும்
இருப்பதுபோல்தான்
என்னையும் காட்டும்

812-

நகர்த்த நகர்த்த
நகர்வது
வேகமாகும்

813-

நடிக்கத் தெரியாத
வார்த்தைகள்
வரும்
ஒத்திகையின்றி

814-

நடந்த கதை
நடக்கும் கதை
நடக்கப்போகும் கதை
மூன்றிலும்
காலம் எப்போதும்
கதாபாத்திரமாய்

815-

கண்ணீர் துளி
அருகில் செவி
உற்றுக் கேட்க
கடலின் ஒலி

816-

நான்
இருக்கிறேன்

கடைசிப் பக்கத்தில்

இந்தக் கதையின்
கடைசிப் பக்கத்தில்
நான் இறந்துபோகப் போகிறேன்

அதற்கு முன் பக்கத்திலேயே
நீங்கள் போய்விடுவீர்கள் எனில்
உங்களோடு நானும்
உயிரோடு வந்துவிடலாம்

கடைசிப் பக்கத்தைத் தாண்டி
போவீர்கள் எனில்
என் சவப்பெட்டியின் மேல்
உங்கள் காலடித்தடங்கள்
பதிந்து போயிருக்கலாம்

Monday, January 09, 2012

அனுபவ சித்தனின் குறிப்புகள்

808-

இந்த வனத்தின்
சிறு புல் நான்
நீங்கள் தேடி
கண்டெடுப்பது கடினம்

809-

நான் வழிப்போக்கன்
என்னிடம்
வேறெதும் இல்லை
வழிகளின்
குறிப்புகளைத் தவிர

810-

உங்கள் அரிசியில்
யார் பசியாவது
எழுதப்பட்டுள்ளதா என்று
பார்த்துவிட்டு
உண்ணத் தொடங்குங்கள்

Sunday, January 08, 2012

அனுபவ சித்தனின் குறிப்புகள்

805-

மொழி கடந்த ஞானி
எழுதுகிறான்
வரியற்ற கவிதையை

806-

நான் திறக்க
நான் திறக்கும்

807-

கரையிலேயே
எல்லா நீச்சலும்
முடிகிறது
நதி பார்த்து
சிரிக்கிறது

Friday, January 06, 2012

ஒவ்வொரு முறையும்

பிய்த்தெறிகிறாய்
ஒவ்வொரு முறையும்
சேர்த்து வைக்கிறேன்
ஒவ்வொரு வலியும்

Thursday, January 05, 2012

வழியே

மணலைப் போல
உன் விரல்கள் வழியே
நான் வழிந்து போகிறேன்

மலையைப் போல
என் நினைவுகள் வழியே
நீ வளர்ந்து போகிறாய்

நினைவுப் பொருள்

பழுதடைந்துவிட்ட
கடிகாரத்தைப் போல
பழுதடைந்த
இந்த வரியை
வைத்துக்கொண்டு
ஒன்றும் செய்ய முடியாது
ஆனாலும்
ஒரு நினைவுப் பொருளாக
வைத்துக்கொள்ள
விரும்புகிறேன்

இதோடு

வேறெதுவும் பதிலில்லை
என்னிடம்
உன்னிடம் சொல்ல

வேறெதுவும் கேள்வியில்லை
உன்னிடம்
என்னிடம் சொல்ல

ஆனாலும்
நம் உரையாடல்
இதோடு முடிந்து போக வேண்டுமா

Wednesday, January 04, 2012

இருந்தும்

நான் உனக்கு
எதுவும்
தரப்போவதில்லை
இருந்தும்
காத்திருக்கிறாய்
நான் உனக்கு
ஏதோ
தரப்போவதைப் போல

மன்னிப்பு

கண்ணீரிடம்
மன்னிப்பு கேட்க வேண்டும்
நான் செய்த
தவறுக்காக

வராமல்
என்னைத் தண்டித்துக்கொண்டே
இருக்கிறது

Monday, January 02, 2012

ஒத்த புன்னகை

உன்னிடம் தர
ஒன்றுமில்லை என்கிறேன்

நீ அந்த வாக்கியத்தை
கண்கள் மலர
வாங்கிக் கொள்கிறாய்

நான் நிறைய
தந்தது போலிருக்கிறது

நீ நிறைய
பெற்றுக்கொண்டது போலிருக்கிறது

நம் ஒத்த புன்னகையில்
இந்தப் பொருள்
வராமல் இல்லை

ஒரு மழைச் சொட்டில்

ஒரு மழைச் சொட்டில்
உயிர் சிலிர்க்கிறது
உள்ளிருக்கும் சிலை

ஒன்றும் நிகழாதது
போலிருக்கிறது பாறை

இறங்கும் வழியில்

கனவிலிருந்து
இறங்கும் வழியில்
ஒரு ரோஜா பூத்திருந்தது
அது உதிரவும் இல்லை
நான் அங்கிருந்து
நகரவும் இல்லை

Sunday, January 01, 2012

பார்த்தல்

நான் தனியாக
வந்திருக்கிறேன்
நீங்கள்தான் என் பின்னால்
ஒரு கூட்டம் இருப்பதுபோல
பயத்துடன் பார்க்கிறீர்கள்

நீங்கள் கூட்டத்தோடு
வந்திருக்கிறீர்கள்
நான்தான் நீங்கள்
தனியாக வந்திருப்பதுபோல
பயமற்றுப் பார்க்கிறேன்

தவறுதலாக

தவறுதலாக
சைத்தான் கையில்
கொடுத்துவிட்டேன்
போய் சேர வேண்டிய
கடிதத்தை

புரியவில்லை என்று
கிழித்துப்போட்டு விட்டது

அனுபவ சித்தனின் குறிப்புகள்

796-

ஆழம் காண
ஆழம் போனேன்
ஆழம் கண்டு
ஆழமானேன்

797-

என் நான்களை
முகர்ந்து பார்த்துவிட்டு
தின்னாமல் போகின்றன
பன்றிகள்

798-

ஏதோ
இருப்பதால்
ஏதோ இருக்கிறேன்

799-

நீள அகலங்களை
கணக்கிட்டுக்கொண்டிருக்கிறீர்கள்
வார்த்தைகளின் ஆழத்தில்
கவிதை

800-

பயணத்தைக்
கலைத்துப் போட்டது யார்
பல நூறு வழிகளில்
என் காலடித் தடங்கள்

801-

அறுபடவில்லை
விடுபட்டுப் போயிருக்கிறது
அவ்வளவுதான்

802-

விட்டுவிடுங்கள்
இறந்துகொண்டிருக்கும் என்னை
உங்கள் மருந்தால் மேலும்
சாகடிக்க வேண்டாம்

803-

விடிந்துகொண்டிருக்கிறது
அதற்குள் தூங்கி
எழுந்துவிட வேண்டும்

804-

எப்படி இப்படிப்
பேசுகிறீர்கள்

பல
நாக்குகளால்தான்

அவர்

புரியவில்லை
என்றார்

புரிந்துகொள்ள
முயற்சித்தீர்களா என்றேன்

புரியாதது போல்
பார்த்தார்

திறத்தல்

நினைவைத்
திறக்கும்போதெல்லாம்
நீயே வந்து
வரவேற்கிறாய்

இது போதும்

இது போதும் எனக்கு
சிறு வாக்கியம் நகர்த்தும்
பெருவாழ்வை

கனவுக்காரன்

ஒரு போதும் கனவற்று
தூங்கியதே இல்லை
நான் பெருங்கனவுக்காரன்

நிற்கிறேன்

மூடி இருக்கும்
மதுபானக் கடைமுன்
நிற்கிறேன்

என் நேற்றைய போதை
கதவைத் தட்டிக்கொண்டிருக்கிறது

எப்படியும்

எப்படியும்
கண்ணீர் வரத்தான்
போகிறது
அதற்கு முன்
இந்த சிறுபுன்னகை

மழை

வரிகளுக்குள் வானத்தை
இழுத்து வரப்பார்த்தேன்
கவிதையை
அழித்துச் சென்றது மழை

Friday, December 30, 2011

தீவிரம்

உன் தீவிரம்
இரவைக் குலுக்குகிறது

சுவடற்று கிடக்கிறேன்
கனவின்
பின் வாசலில்

Wednesday, December 28, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

786-

நினைவு
தள்ளி விட
நினைவைத்
தள்ளிவிட்டு
நின்றேன்
விழாமல்

787-

எந்த வழியாக
வந்தீர்கள்

நான் உண்டாக்கிய
வழியாக

788-

நீங்கள்
சொல்லி இருக்கலாமே
என்றேன்

நீங்கள்
கேட்டிருக்கலாமே
என்றார்

789-

ஏதோ ஒரு கவிதையில்
இரவை
கிழித்தெறிந்தபோது
விடிந்திருந்தது

790-

விழித்திருக்கச் சொல்லவில்லை
இந்த நள்ளிரவு
நான்தான் தூங்காமல்
பார்த்துக்கொண்டிருக்கிறேன்
இருளின் பிம்பங்களை

791-

மறைக்க
மறைத்தது
மறைத்தது
என்னை

792-

கொல்வதற்கு முன்
ஆடு வாங்க வந்தேன்

கொன்று விட்டார்கள்
இறைச்சி வாங்கிச் சென்றேன்

793-

சவப்பெட்டியை
பிணம் அசைப்பதில்லை
உன் வரியில்
உயிரில்லை

794-

தனிமையிடம்
தோற்றுவிடுகிறேன்

தனிமையும்
தோற்றுவிடுகிறது

சரியான விகிதத்தில்
வெற்றியைப்
பகிர்ந்து கொள்கிறோம்
இப்படி

795-

எல்லாமே
சொல்லப்பட்டுவிட்டன

எவ்வளவோ சொல்லியும்
பேனாவின் நாக்கு
சத்தமாய் உச்சரிப்பதை
நிறுத்தக்காணோம்

வருகிற வழியில்

வருகிற வழியில்தான்
நண்பர் வீடு

நண்பர் நட்பை
முறித்துக்கொண்டார்

நான் வழியை
முறித்துக்கொள்ளவில்லை

கை நீட்டும் குழந்தை

கை நீட்டுகிறது குழந்தை
ஒன்றுமில்லை
உள்ளங்கையில்
முத்தம் மட்டும்
வைக்கிறேன்
பெரும் சந்தோஷத்துடன்
ஓடுகிறது
உலகைக் கொண்டு
செல்வதைப் போல

திரும்பிய குழந்தை

பள்ளிச் சென்று
திரும்பிய குழந்தை
நனைந்திருந்தாள்

துடைத்தபடியே
பள்ளியில் நடத்தியது பற்றி
கேட்கிறாள் அம்மா

மழை கற்றுக்கொடுத்தது பற்றி
சொல்கிறாள் குழந்தை

Tuesday, December 27, 2011

கடைசி உதடு

பெட்டி
பெட்டி
பெட்டி
பெட்டி
என உதடுகள்
மாறி மாறி
சொல்ல
கடைசி உதடு
சொல்லி
முடிக்கும்
சவப்பெட்டி

Sunday, December 25, 2011

குடித்த பின்

குடித்த பின்
உன்னை உடைத்து விடுவேன்
மதுக்கோப்பையிடம் பேசினேன்

கேட்டு மெளனமாய்
சொன்னது

அப்படியே உடைத்தாலும்
உன்னைப் போல்
சிதைந்து போகமாட்டேன்

அனுபவ சித்தனின் குறிப்புகள்

780-

யார் என் இலையில்
பசியைப்
பரிமாறியது

781-

மனதில்
அறியப்படும் சுமை
தோளுக்கு பாரமாக
இருப்பதில்லை

782-

என் ஆயுதம்
கீழே கிடந்தாலும்
கையெட்டும் தூரத்திலேயே
இருக்கிறது

783-

நீங்கள் எறிந்த கத்தியை
உங்கள் மேல்
திருப்பி எறிகிறேன்
சரியாக
குறி பார்த்து

784-

நான் தூங்கி இருக்கக்கூடாது
என் வேடத்தில்
நுழைந்து விட்டவன்
எனது காட்சியில்
நடித்துக் கொண்டிருக்கிறான்

785-

உருகுவதையே
பார்த்துக் கொண்டிருந்தேன்
ஒளியைப் பார்க்கத்
தவறிவிட்டேன்

Wednesday, December 21, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

775-

கவிதையின்
கீழிறங்குகிறது ரத்தம்
கொல்லப்பட்டவனும் எழுதியவனும்
ஒன்றானவனாக இருக்க
கீழிறங்கி
நீள்கிறது ரத்தம்
கவிதையின்
கடைசி வரியாய்

776-

உன்னிடம்
பதில் இல்லையா
பதிலிடம்
நீயில்லையா

777-

நான் அழுவதை
கண்ணாடியில் பார்த்தபோது
கண்ணாடிப் பார்த்தது
நான் புன்னகைப்பதை

778-

உடல் ஒரு தீப்பெட்டி
ஒவ்வொரு குச்சியாய்
எரித்துக் கொண்டிருக்கிறேன்

779-

உருண்டோடும் திராட்சைகள்
விளையாடும்
பழத்தோட்டம்

Saturday, December 17, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

773-

இந்த முகங்களில்
எது என்
சொந்த முகம்

774-

அங்கும் இங்கும்
தவ்வும்
தூரம் போகாத்
தவளை மனம்

Thursday, December 15, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

771-

உன் பெரிய
கனவென்ன

சின்னக் கனவை
பெரிதாக்குவது

772-


கூழாங்கல்லைப் போல்
உருண்டோடி விடுபவர்களை
மலைப்பயணத்தில்
துணைக்கழைத்துச்
செல்லாதீர்கள்

Tuesday, December 13, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

769-

மெய்யறிய
பொய்யானேன்

770-

இந்த மலை விளிம்பில்
இரண்டு சாத்தியம்

விழுந்து போகலாம்
பறந்து போகலாம்

விழுந்து போக
இருந்த என்னை
சுமந்தபடியே
பறந்து போனேன்

Monday, December 12, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

763-

இந்த வரி
எழுதாதபோது
இன்னும் அழகாகவே
இருந்தது

764-

வாள் எனும் சொல்லை
உரக்கச் சொன்னேன்
காற்றை கிழித்து
அடங்கியது எனக்குள்

765-

வரைந்த தூக்குக்கயிறு
எறும்பு இழுத்துப் போக
நேராச்சு

766-

பொருளற்ற கவிதையில்
நானே
பொருள்

767-

முடியவில்லை ஆட்டம்
ஒப்பனையை
இறக்கி வைக்காதீர்கள்

768-

என்னை வீழ்த்துவதற்கான
வீயுகங்களை வகுக்கிறீர்கள்
அவைகளை நான்
கடந்து போவது தெரியாமல்

Sunday, December 11, 2011

ரொட்டித் துண்டு

பசியே சொல்கிறது
கொஞ்சம் ரொட்டித்துண்டை
மீதம் வை
அடுத்த வேளைக்கு
எனக்கு வேண்டும்

Wednesday, December 07, 2011

பூ

பூவைக் கிள்ளி முடித்த குழந்தை
இதழ்களில் தேடுகிறது
பூவை

Tuesday, December 06, 2011

முடிந்துவிடும்

மழையைப் பார்த்தபடியே
தேநீர் அருந்துகிறாள் மூதாட்டி
தேநீர் முடிவதற்குள்
மழை முடிந்துவிடும்
என்ற நம்பிக்கையில்

அனுபவ சித்தனின் குறிப்புகள்

760-

பிரபஞ்சம் என்னைக்
கல்லாக எறியும்

பூவாகத் தாங்கிக்
கொள்ளும்

761-

மனதில் தொடங்கி
உடலில் முடியும்
அலைபாய்தல்

762-

என் பதிலை
கேள்வியாக்குகிறீர்கள்
அதற்கு
பதில் சொல்ல வேண்டிய
அவசியம் எனக்கில்லை

போ

தற்கொலையே
போ

தானாக
பூத்தது போல
அதுவாக உதிரும்
இந்த மலர்

Saturday, December 03, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

755-

நான் நள்ளிரவில்
பகலை
நெய்பவன்

756-

கேட்காத இடத்தில்
கொட்டுவதும்
கேட்கும் இடத்தில்
துப்புவதும்
மனிதர்கள் செய்யும்
அபத்தம்

757-

நான் இறப்பதை
அனுமதிக்கவே மாட்டேன்
இறக்கும் வரை

758-

கால்களுக்குப்
பிடிபடாத பாதை என்று
எதுவுமே இல்லை

759-

ஓய்வு கொள்ளும்
உறங்காது
ஆயுதம்