Powered by Blogger.

தீவிரம்

Friday, December 30, 2011

உன் தீவிரம்
இரவைக் குலுக்குகிறது

சுவடற்று கிடக்கிறேன்
கனவின்
பின் வாசலில்

அனுபவ சித்தனின் குறிப்புகள்

Wednesday, December 28, 2011

786-

நினைவு
தள்ளி விட
நினைவைத்
தள்ளிவிட்டு
நின்றேன்
விழாமல்

787-

எந்த வழியாக
வந்தீர்கள்

நான் உண்டாக்கிய
வழியாக

788-

நீங்கள்
சொல்லி இருக்கலாமே
என்றேன்

நீங்கள்
கேட்டிருக்கலாமே
என்றார்

789-

ஏதோ ஒரு கவிதையில்
இரவை
கிழித்தெறிந்தபோது
விடிந்திருந்தது

790-

விழித்திருக்கச் சொல்லவில்லை
இந்த நள்ளிரவு
நான்தான் தூங்காமல்
பார்த்துக்கொண்டிருக்கிறேன்
இருளின் பிம்பங்களை

791-

மறைக்க
மறைத்தது
மறைத்தது
என்னை

792-

கொல்வதற்கு முன்
ஆடு வாங்க வந்தேன்

கொன்று விட்டார்கள்
இறைச்சி வாங்கிச் சென்றேன்

793-

சவப்பெட்டியை
பிணம் அசைப்பதில்லை
உன் வரியில்
உயிரில்லை

794-

தனிமையிடம்
தோற்றுவிடுகிறேன்

தனிமையும்
தோற்றுவிடுகிறது

சரியான விகிதத்தில்
வெற்றியைப்
பகிர்ந்து கொள்கிறோம்
இப்படி

795-

எல்லாமே
சொல்லப்பட்டுவிட்டன

எவ்வளவோ சொல்லியும்
பேனாவின் நாக்கு
சத்தமாய் உச்சரிப்பதை
நிறுத்தக்காணோம்

வருகிற வழியில்

வருகிற வழியில்தான்
நண்பர் வீடு

நண்பர் நட்பை
முறித்துக்கொண்டார்

நான் வழியை
முறித்துக்கொள்ளவில்லை

கை நீட்டும் குழந்தை

கை நீட்டுகிறது குழந்தை
ஒன்றுமில்லை
உள்ளங்கையில்
முத்தம் மட்டும்
வைக்கிறேன்
பெரும் சந்தோஷத்துடன்
ஓடுகிறது
உலகைக் கொண்டு
செல்வதைப் போல

திரும்பிய குழந்தை

பள்ளிச் சென்று
திரும்பிய குழந்தை
நனைந்திருந்தாள்

துடைத்தபடியே
பள்ளியில் நடத்தியது பற்றி
கேட்கிறாள் அம்மா

மழை கற்றுக்கொடுத்தது பற்றி
சொல்கிறாள் குழந்தை

கடைசி உதடு

Tuesday, December 27, 2011

பெட்டி
பெட்டி
பெட்டி
பெட்டி
என உதடுகள்
மாறி மாறி
சொல்ல
கடைசி உதடு
சொல்லி
முடிக்கும்
சவப்பெட்டி

குடித்த பின்

Sunday, December 25, 2011

குடித்த பின்
உன்னை உடைத்து விடுவேன்
மதுக்கோப்பையிடம் பேசினேன்

கேட்டு மெளனமாய்
சொன்னது

அப்படியே உடைத்தாலும்
உன்னைப் போல்
சிதைந்து போகமாட்டேன்

அனுபவ சித்தனின் குறிப்புகள்

780-

யார் என் இலையில்
பசியைப்
பரிமாறியது

781-

மனதில்
அறியப்படும் சுமை
தோளுக்கு பாரமாக
இருப்பதில்லை

782-

என் ஆயுதம்
கீழே கிடந்தாலும்
கையெட்டும் தூரத்திலேயே
இருக்கிறது

783-

நீங்கள் எறிந்த கத்தியை
உங்கள் மேல்
திருப்பி எறிகிறேன்
சரியாக
குறி பார்த்து

784-

நான் தூங்கி இருக்கக்கூடாது
என் வேடத்தில்
நுழைந்து விட்டவன்
எனது காட்சியில்
நடித்துக் கொண்டிருக்கிறான்

785-

உருகுவதையே
பார்த்துக் கொண்டிருந்தேன்
ஒளியைப் பார்க்கத்
தவறிவிட்டேன்

அனுபவ சித்தனின் குறிப்புகள்

Wednesday, December 21, 2011

775-

கவிதையின்
கீழிறங்குகிறது ரத்தம்
கொல்லப்பட்டவனும் எழுதியவனும்
ஒன்றானவனாக இருக்க
கீழிறங்கி
நீள்கிறது ரத்தம்
கவிதையின்
கடைசி வரியாய்

776-

உன்னிடம்
பதில் இல்லையா
பதிலிடம்
நீயில்லையா

777-

நான் அழுவதை
கண்ணாடியில் பார்த்தபோது
கண்ணாடிப் பார்த்தது
நான் புன்னகைப்பதை

778-

உடல் ஒரு தீப்பெட்டி
ஒவ்வொரு குச்சியாய்
எரித்துக் கொண்டிருக்கிறேன்

779-

உருண்டோடும் திராட்சைகள்
விளையாடும்
பழத்தோட்டம்

அனுபவ சித்தனின் குறிப்புகள்

Saturday, December 17, 2011

773-

இந்த முகங்களில்
எது என்
சொந்த முகம்

774-

அங்கும் இங்கும்
தவ்வும்
தூரம் போகாத்
தவளை மனம்

அனுபவ சித்தனின் குறிப்புகள்

Thursday, December 15, 2011

771-

உன் பெரிய
கனவென்ன

சின்னக் கனவை
பெரிதாக்குவது

772-


கூழாங்கல்லைப் போல்
உருண்டோடி விடுபவர்களை
மலைப்பயணத்தில்
துணைக்கழைத்துச்
செல்லாதீர்கள்

அனுபவ சித்தனின் குறிப்புகள்

Tuesday, December 13, 2011

769-

மெய்யறிய
பொய்யானேன்

770-

இந்த மலை விளிம்பில்
இரண்டு சாத்தியம்

விழுந்து போகலாம்
பறந்து போகலாம்

விழுந்து போக
இருந்த என்னை
சுமந்தபடியே
பறந்து போனேன்

அனுபவ சித்தனின் குறிப்புகள்

Monday, December 12, 2011

763-

இந்த வரி
எழுதாதபோது
இன்னும் அழகாகவே
இருந்தது

764-

வாள் எனும் சொல்லை
உரக்கச் சொன்னேன்
காற்றை கிழித்து
அடங்கியது எனக்குள்

765-

வரைந்த தூக்குக்கயிறு
எறும்பு இழுத்துப் போக
நேராச்சு

766-

பொருளற்ற கவிதையில்
நானே
பொருள்

767-

முடியவில்லை ஆட்டம்
ஒப்பனையை
இறக்கி வைக்காதீர்கள்

768-

என்னை வீழ்த்துவதற்கான
வீயுகங்களை வகுக்கிறீர்கள்
அவைகளை நான்
கடந்து போவது தெரியாமல்

ரொட்டித் துண்டு

Sunday, December 11, 2011

பசியே சொல்கிறது
கொஞ்சம் ரொட்டித்துண்டை
மீதம் வை
அடுத்த வேளைக்கு
எனக்கு வேண்டும்

பூ

Wednesday, December 07, 2011

பூவைக் கிள்ளி முடித்த குழந்தை
இதழ்களில் தேடுகிறது
பூவை

முடிந்துவிடும்

Tuesday, December 06, 2011

மழையைப் பார்த்தபடியே
தேநீர் அருந்துகிறாள் மூதாட்டி
தேநீர் முடிவதற்குள்
மழை முடிந்துவிடும்
என்ற நம்பிக்கையில்

அனுபவ சித்தனின் குறிப்புகள்

760-

பிரபஞ்சம் என்னைக்
கல்லாக எறியும்

பூவாகத் தாங்கிக்
கொள்ளும்

761-

மனதில் தொடங்கி
உடலில் முடியும்
அலைபாய்தல்

762-

என் பதிலை
கேள்வியாக்குகிறீர்கள்
அதற்கு
பதில் சொல்ல வேண்டிய
அவசியம் எனக்கில்லை

போ

தற்கொலையே
போ

தானாக
பூத்தது போல
அதுவாக உதிரும்
இந்த மலர்

அனுபவ சித்தனின் குறிப்புகள்

Saturday, December 03, 2011

755-

நான் நள்ளிரவில்
பகலை
நெய்பவன்

756-

கேட்காத இடத்தில்
கொட்டுவதும்
கேட்கும் இடத்தில்
துப்புவதும்
மனிதர்கள் செய்யும்
அபத்தம்

757-

நான் இறப்பதை
அனுமதிக்கவே மாட்டேன்
இறக்கும் வரை

758-

கால்களுக்குப்
பிடிபடாத பாதை என்று
எதுவுமே இல்லை

759-

ஓய்வு கொள்ளும்
உறங்காது
ஆயுதம்
 
அமேசானில் மின்னூல்கள்Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்