Tuesday, September 27, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

672-

அசையும் கல் நான்
தூக்கி எறியலாம்

அசையா மலை நான்
பார்த்துப் போகலாம்

673-

காத்திருக்கிறேன்
கிடைக்கவில்லை
என்றாலும்
காத்திருப்பேன்
கிடைக்கும்

674-

முறிந்து கிடக்கும்
சொற்கள்
ஒட்டப் பார்க்கும்
மழை

675-

குளிருக்கு பயந்து
நிறைய போர்வைகள்
போர்வைகளின் அடியில்
நசுங்கிய தூக்கம்

676-

தாகத்தை
விதைத்தேன்
கிணறு
முளைத்தது

677-

பறந்து பறந்து
என்ன அடைந்தாய்
பறவையிடம் கேட்டேன்

கேட்டு கேட்டு
என்ன சாதித்தாய்
பறவைக் கேட்டது

678-

வழிகள் நண்பர்கள்
வழிப்போக்கன்
நான்

679-

எந்த நீர்குமிழியும்
உடையவில்லை
உடைந்ததெல்லாம்
நான்தான்

680-

இரு பார்வைகள்

என் தியானம்
மெளனத்தில் தொடங்குகிறது

என் தியானம்
மெளனத்தில் முடிகிறது

681-

மரணம்
ஒரு பெரும் கதவாகி
மூடும்போது
நான் அதன்
சிறு துவாரம் வழியே
வெளியேறி விடுவேன்

2 comments:

  1. மரணத்தில் துளிர்க்கும் கவிதை ஒரு மலர் போல அசைகிறது.

    ReplyDelete