Friday, July 30, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

139-

கல்லாக என்னை
எறிந்து எறிந்து
மலையானேன்

140-

புதிதாக
பிறந்து கொண்டே இருப்பதால்
அடிக்கடி
இறந்து போவது
பிடிக்கிறது

141-

வலிகளை
கொண்டாடு
கண்ணீரில்
நிறங்கள் எடு

142-

என்னால் மட்டுமே
வீழ்த்த இயலும்
என்னை

Wednesday, July 28, 2010

ஆடுதல்

தூக்கு கயிறை
ஊஞ்சலாக்கு
வரியில் ஆடியது கவிதை

Tuesday, July 27, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

136-

அவள் கண்களில்
நீளமான கதை
கண்ணீரில் கிடைத்தது
சில குறிப்புகள் மட்டுமே

137-

அமர்ந்து போன
கிளையில் அசைகிறது
பறவையின் நன்றி

138-

இருளில் கேட்கிறது
அனாதை இருட்டின்
கதைகள்

ஏணிகள்

குழந்தை ஏணி வரைய
அப்பா ஏணி
செய்து கொண்டிருந்தார்

உள்ளிருந்து சாப்பிட
அழைப்பு வர
இருவரும் போனார்கள்

அப்பாவின் ஏணி
குழந்தையின் ஏணியில் ஏறி
விளையாடிக் கொண்டிருந்தது
அவர்கள் வரும் வரை

Tuesday, July 20, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

134-

எனக்குள் இருக்கும்
கடவுளைக் காட்டும்
கடவுளைக் காண்பது எக்கணம்

135-

ஐயாயிரம் வரிகள்
எழுதிய பிறகு
அவன் சொன்னான்
என் முதல் வரியை
இப்போது
எழுதத் தொடங்குகிறேன்

Monday, July 19, 2010

எதிர்பாராதது

எதிர்பார்த்தது போல
எதிர்பார்த்த நண்பர்
எதிரே வந்தார்

எதிர்பாராத
சைகை செய்து
வேகமாகி
மறைந்து போனார்

முடிவற்ற தெருக்கள்
பார்த்துக் கொண்டிருந்தன

புதிர் நிறைந்த மனிதர்களையும்
புதிது புதிதான
விசித்திரங்களையும்

சிறகின் மேல்

உன் குரல்
ஒரு பட்டாம் பூச்சியின்
சிறகின் மேல்

பிடிக்க முயல
குரலிலிருந்து
பறந்தது பட்டாம் பூச்சி
இசையெழுப்பி

Saturday, July 17, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

130-

குமிழ் மேல்
நின்று
குமிழை
உடைக்காமல்
குமிழைப் பார்க்கிறது
மற்றொரு குமிழ்

131-

எப்படியும்
உங்களுக்குக் கிடைக்கலாம்
எனதுடல்
எனது கனவை
அடைய
பலநூறு ஆண்டுகள் ஆகும்
உங்களுக்கு

132-

நிகழாது போன
உரையாடலுக்குள்
தழைத்திருக்கிறது மொழி

133-

எல்லோரும் நசுக்க
யாரிடமும் சாகாமல்
ஊர்ந்து கொண்டே போகிறது
பல காலங்களாய்
எறும்பு

அதே பறவை

நான் வரும்போது
துடித்துக் கொண்டிருந்த பறவை
வீடு போய் சேர்வதற்குள்
இறந்து போகலாம்
உன் சாவு சிந்தனை விடு
திரும்ப போய்ப்பார்
உன்னைப் போன்றவர்களுக்கு
குருதியில்
ஏதாவது செய்தி
வைத்துவிட்டு
தொலைவாகி இருக்கலாம்
அதே பறவை
தன் அலகால்
மரணம் தின்ற
மதர்ப்புடன்

Sunday, July 11, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

126-

அன்பால் யாராவது
நகர்த்தி இருக்கலாம் என்றது
அருகில் வந்திருந்த மலை

127-

ஆகாரத்தை மறுத்த
கூண்டு பறவையின்
கண்களில் படிக்க முடிந்தது

சுதந்திரம் எனதுணவு
அதைத் தா

128-

யாரெனும்
கண்டெடுக்கக்கூடும்
என் பால்யத்தை
எனக்கேத் தெரியாமல்

129-

நம் அருகில்
இருக்கும் தூரங்களை
எப்படிக் கடப்பது

Saturday, July 03, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

123-

கதவை திறந்து பார்க்க
பூதம் நின்றது
அதன் கையில்
என் முகவரி இருந்தது
யாரென்று கேட்க
உனது பொய் என்றது

124-

எழுத எதுவும்
கிடைக்கக் காணோம்
திரும்ப சீவுகிறேன் பென்சிலை

125-


இங்கிருந்த என்னை
காணவில்லை என்றார் ஒருவர்

அதோ அங்கிருக்கிறாரே
அவரா என்றேன்

கேட்டு வருகிறேன்
என்று போனார்

நான் காணாமல் போனேன்