Powered by Blogger.

புத்தர்கள்

Thursday, February 25, 2010

களவாடிக் கொண்டு வந்த புத்தர்
கை நழுவி விழுந்து
உடைந்து போனார்
புத்தர்களாக

பல திருடன்களாகிப்
பார்த்துக் கொண்டிருந்தேன்
எந்த புத்தரை
எடுப்பதென

விழு

விழுந்து கொண்டிருக்கும் நான்
விழுந்து கொண்டிருக்கும் என்னை
விழுந்து போகாமல்
பார்த்துக் கொண்டிருந்தேன்
விழுந்து போகும் வரை

அவன்

ஒரு பூவை நினைத்தபடியே
தற்கொலை
செய்து கொண்டான்

அவன் மரணத்தில்
ரோஜா பூத்திருந்தது

பொய்கள்

Tuesday, February 23, 2010

என் கைபட்டு
விழுந்து கொண்டிருந்தது
பொம்மை

கை நீட்டிப்
பிடிப்பதற்குள்
உடைந்து போயிற்று

சிதறிக் கிடக்கிறது
பொம்மையின் உயிர்

குழந்தை வருவதற்குள்
எடுத்தாக வேண்டும்
பொம்மை கேட்டு
அழுது அடம் பிடித்தால்
நிறுத்த முடியாது

அப்புறப்படுத்துவதற்குள்
வந்து சேர்ந்த
குழந்தையின் கையில்
சிக்கியது
பொம்மையின் கால்

அழவில்லை
தேடலுடன்
பார்த்தது குழந்தை

மற்ற பகுதிகளை
மறைத்தபடி சொன்னேன்

ஒற்றைக்காலுடன்
ஓடிவிட்டது பொம்மை

திரும்பி வருமா
என்பது போல்
பார்த்தது குழந்தை

வரும் வந்து
விட்டுப் போன
காலைத் தேடும்
உடையாமல் வைத்திரு
எனச்சொல்ல
கைக்குள்
இறுக்கிக் கொண்டது

விரட்டி வரும்
ஒற்றைக்கால் பொம்மையிடமிருந்து
தப்பிக்க
ஓடிக்கொண்டிருந்தன
கால் முளைத்த
என் பொய்கள்

பசி

Monday, February 22, 2010

பசியைத் தடவியபடி
அவன் சொன்னான்
கடவுள் ஏழைகளுக்கு
உதவி செய்யாமல்
யாருக்கு செய்வார்

முதலில் எனக்கு
சோறு கொடுத்து விட்டு
பிறகு உன் கடவுளைப்
பற்றி யோசி

சொன்னது பசி

வயோதிக வாசனை

Saturday, February 20, 2010

வயோதிக வாசனை
வீசியதில்லை
தாத்தாவின்
சாய்வு நாற்காலியில்

நண்பர்களும் நட்பும்

நண்பர்கள்
இறந்துபோகும்போதெல்லாம்
நட்பும்
இறந்து போகிறது
தேநீர் குடித்தபடியே
ராமசாமி சொன்னான்

போனவாரம்
எங்களோடு டீகுடித்த
முத்தையாவின் இடம்
வெறுமையாக இருந்தது

அனுபவ சித்தனின் குறிப்புகள்

47-

எனக்குத் தரப்பட்ட
இடத்தில் இருந்தன
நானே எடுத்துக்கொள்ள
ஏராளமான இடங்கள்

48-

அவனை எல்லோரும்
பைத்தியம் என்றார்கள்

அவன் எல்லோரையும்
பைத்தியம் என்றான்

விவாதம் முடிவுக்கு வந்தது

49-

கூண்டுடன்
பறந்துபோனது கிளி
கனவில்
கூண்டை பத்திரமாக்க
கிளியைப் பறக்கவிட்டான்

கனவைத் தந்து சென்றவன்

Monday, February 15, 2010

நான் திரும்ப வந்து
கேட்கும் வரை
பத்திரமாக வைத்திரு
எனச் சொல்லி
அவன் ஒரு கனவைத்
தந்து சென்றான்

அதை வைத்திருப்பது
பெரும்பாடாக இருந்தது

நீண்ட நாட்களுக்குப் பிறகு
திரும்பியவன்
கனவைக் கேட்டான்

பின் சொன்னான்

இது என் கனவில்லை
நீ மாற்றி இருக்கிறாய்
நான் தந்ததுபோல
தா என்றான்

உன் கண்ணீரும் புலம்பலும்
இதில் சேர்ந்திருக்கிறது

உன் கனவுகளை
இடையிடையே புகுத்தி
சிதைத்திருக்கிறாய்

சொல்லிக்கொண்டே போனான்

நீ சொன்னது போல்
எதுவும் நடக்கவில்லை
என்றாலும் கேட்கவில்லை

இரவல் கனவை ஏன்
வாங்கினோம்
என்றிருந்தது எனக்கு

இப்போதும்
கனவில் வரும் அவன்
குற்றம் சொல்வதை
நிறுத்தவில்லை

என்னாலும் இந்த
கனவிலிருந்து
மீள முடியவில்லை

அனுபவ சித்தனின் குறிப்புகள்

Sunday, February 07, 2010

44-

கிளையில்
அமர்ந்தது பறவை
கல்லெறிய
பறந்தது சத்தம்

45-

பல்லிக்கும் பூச்சிக்கும்
இடையில்
சுற்றுகிறது பசி

46

ஓடிக்கொண்டிருப்பவனோடு
ஓடிக்கொண்டிருக்கிறது
பாதையும்

ஒற்றன்

Saturday, February 06, 2010

ஒவ்வொரு வார்த்தையாய்
அழித்துக் கொண்டே
வந்த ஒற்றன்
மொத்தமாய் கொன்று
முடித்த பிறகு சொன்னான்
மரணம் பற்றிய
உன் கவிதை
கடைசியில் இறந்துவிட்டது

கடல்

Wednesday, February 03, 2010

கடல் காட்டி
கடலில்
விளையாட்டுக் காட்டிய
அப்பாவின் அஸ்தியை
கரைத்தாயிற்று

குத்துகிறது
ஒரு துளி
கண்ணில்

பால்யம் குழைத்து
மறக்காமல் வா
விளையாட
அப்பாவும் நானும்
இருக்கிறோம்

சொல்லி அனுப்புகிறது
கடல்

(ராகவன் சித்தப்பாவின்
நினைவுக்கு)

அனுபவ சித்தனின் குறிப்புகள்

Tuesday, February 02, 2010

39-

உள்ளமர்ந்து
தவம்
என்
உள்ளமர்ந்து

40-

கண்ணாடியைத் திறந்து
வெளியேறுகிறது
என் பிம்பம்

41-

தன் வெளிச்சத்தில்
பார்க்கிறது மெழுகுவர்த்தி
உருகுவதை

42-

கை குவித்த மலை
கல்லாயிற்று
கை விரித்த கல்
மலையாயிற்று

43-

கிடைத்து விட்டது
தொலைந்ததல்ல
கிடைக்க வேண்டியது

என் பெயர்

பயணத்தை
சுவையாக்கியப் பெரியவர்
இறங்கும்போது சொன்னார்

தம்பி உங்க பேரக் கேக்கலன்னு
தப்பா நெனைச்சிக்காதிங்க
மறந்து போயிடும்
இல்ல மாத்தி சொல்லிடுவேன்
அதான்...

கையசைத்தபடியே
பார்த்து நின்ற
அவர் அன்பில்
ஒட்டி இருந்தது
என் பெயர்
 
அமேசானில் மின்னூல்கள்Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்