Saturday, January 30, 2010

கவனமாகப் படியுங்கள்

கவனமாகப் படியுங்கள்
இந்த கவிதையின் வரிகளுக்கிடையில்
நீங்கள் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறீர்கள்

கவனமாகப் படியுங்கள்
இந்த கவிதையில் எங்கோ ஒரு மூலையில்
நீங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறீர்கள்

இந்த கவிதையின் புள்ளிகள் கல்லெறிந்து
நீங்கள் காயப்பட்டிருக்கிறீர்கள்

இந்த கவிதையின் வார்த்தைகளுக்கிடையில்
நீங்கள் நசுங்கிக் கொண்டிருக்கிறீர்கள்

கவனமாகப் படியுங்கள்
இந்தக் கவிதையின் முடிவில்
நீங்கள் நாடுகடத்தப்பட்டிருக்கிறீர்கள்

இந்தக் கவிதையின் அடியில்
நீங்கள் நீச்சலை மறந்துப் போயிருக்கிறீர்கள்

இந்த கவிதையின் மயக்கத்தில்
நீங்கள் மூச்சைத் தொலைத்திருக்கிறீர்கள்

கவனமாகப் படியுங்கள்
இந்த கவிதையின் வண்ணங்களில்
உங்கள் நிறத்தை மறந்துபோயிருக்கிறீர்கள்

இந்த கவிதையின் சூதாட்டத்தில்
உங்களை இழந்திருக்கிறீர்கள்

கவனமாகப் படியுங்கள்
இந்த கவிதையின் வியூகத்தில்
நீங்கள் இதை எழுதியவனை விடுவித்துவிட்டீர்கள்

Friday, January 29, 2010

விடுதலையின் பாடல்

கொல்லப்பட்டவர்களின்
மூச்சுக் காற்று பிரபஞ்சத்தில்
அதில் ஓயாமல் ஒலிக்கிறது
விடுதலையின் பாடல்

நதியின் ஒழுங்கில்

நீரடியில் கிடந்த வயலினை
எடுத்த பின்னும்
கையள்ள முடியாமல்
ஓடிக்கொண்டிருந்தது இசை
நதியின் ஒழுங்கில்

Sunday, January 24, 2010

இல்லாத பந்து

இல்லாத பந்தை வைத்துக்கொண்டு
விளையாடிக் கொண்டிருந்தார்கள் சிறுவர்கள்

படிக்கச் சொல்லி
எல்லோர் வீட்டிலிருந்தும் சத்தம் வர
ஓடிப்போனார்கள்

இல்லாத பந்து
இருந்தபடி பார்த்துக் கொண்டிருந்தது
எப்போது வருவார்கள் என்று

Friday, January 22, 2010

தெரியாமல்

யாருக்கும் தெரியாமல்
அழுது கொண்டிருந்தவளை
யாருக்கும் தெரியாமல்
பார்த்துக் கொண்டிருந்தேன்

அழகு

முதியவரின் ஓட்டத்தில்
அழகாயிற்று
இளங்காலை

போதல்

எல்லா ரயிலும் போயிருந்தன
குழந்தை வரைந்த
தண்டவாளத்தில்

உயரமான கவிதை

மலையிடம் சொன்னேன்
உன்னைவிட
உயரமான கவிதை
எழுத வேண்டும்

கூழாங்கல் சிரிப்புடன்
சொன்னது மலை

தூசி வார்த்தைகளை
அப்புறப்படுத்து
மறைந்திருக்கும்
மலை தெரியும்

அனுபவ சித்தனின் குறிப்புகள்

34-

கிடைத்துவிட்டன கேள்விகள்
கிடைக்காமலா போகும்
பதில்கள்

35-

நீளமாக நீங்கள்
வரையும் கோடும்
சிறிதாக நான்
வரையும் கோடும்
கோடுகள்தான்
கோடுகளன்றி வேறில்லை

36-

நீ தூக்கி
எறிந்து
நீயே பிடி
உன்னை

பிறர் பிடித்தால்
பின் தூக்கி
எறியப்படுவாய்
திரும்ப உனக்குள்
வந்து சேராதபடி

37-


இரண்டாவது
உதிர்ந்த இலை
துணையாயிற்று
முதலில்
விழுந்த இலைக்கு

38-

உறக்கத்திலிருந்து
வெளியேறி விட்டேன்
ஆறுதல்படுத்த வேண்டும்
இமைகளை

Monday, January 18, 2010

காற்றின் அடியில்

உன்னோடு சேர்ந்து
உரக்க நானும்
அந்த கேள்வியைச்
சொல்லிப் பார்க்கிறேன்

நம் குரல்களின்
சமவிகிதம் பரவும்
காற்றின் அடியில்
மறைந்து கிடக்கும் பதில்
மேலேழும்பி வந்து
அடையலாம் நம்மை

நீதான்

நீதான்

இந்தக் கொலையைச்
செய்தது நீதான்

பொய் சொல்லாதே
மறைக்காதே
பதுங்காதே
ஓடி விடாதே

உன் கத்தி
ரத்தம் கக்கி
எல்லாவற்றையும்
சொல்லி விட்டது

கத்தியில்
ஒட்டிக் கிடக்கும்
வெட்டுப்பட்டவனின் நாக்கு
உரக்கச் சொல்கிறது
உன் பெயரை

நீதான்

இந்தக் கொலையைச்
செய்தது நீதான்

நீயேதான்

இதே வழியில்

இந்த வழியில்
நீங்கள் போகும்போது
பசியோடு இருந்து
பசியை சொல்லியவன்
இதே வழியில்
நீங்கள் திரும்பும்போது
இன்னும் பசியுடன்
அதை சொல்ல
மொழியற்று
கண்களால் கெஞ்சியபடி

பறிக்காத பூ

நீங்கள்
பறிக்காது போன பூ
உதிர்கிறது
உங்கள் பெயரைத்
தாங்கியபடி

ஆடு

தண்டவாளத்தில்
புற்களைத் தின்னும் ஆடு
ரயிலுக்கு
விளையாட்டுக் காட்டிவிட்டு
ஓடிப்போகிறது

Friday, January 15, 2010

அவர்கள்

அவர்கள்
வெளியேறுவதற்காக
உள்ளே வந்தவர்கள்
உள்ளே வந்து
உங்களை வெளியேற்றியவர்கள்

அவர்கள்
வெட்டுவதற்கு முன்னால்
உயிரைத் தடவிக் கொடுப்பவர்கள்

அவர்கள்
இனிப்புப் புன்னகையில்
ஈக்களாய் உங்களை
மொய்க்க வைப்பவர்கள்

அவர்கள்
நீங்கள் விழித்திருக்கும்போது
தூக்கத்தைத் திருடுபவர்கள்
தூங்கும்போது
கனவுகளைக் களவாடுபவர்கள்

அவர்கள்
உங்கள் பயண திசைகளை
மாற்றி வைப்பவர்கள்
உங்கள் கால்களால்
ஓடுபவர்கள்

அவர்கள்
உங்கள் பசியை
உண்பவர்கள்

அவர்கள்
உங்களை பொம்மைகள் என்று
நம்ப வைப்பவர்கள்
விளையாடிவிட்டு பின்
உடைத்துப் போடுபவர்கள்

அவர்கள்
உங்கள் ஏமாற்றத்தின் விந்தில்
உற்பத்தியாகிறவர்கள்

அவர்கள்
உங்களில் இருப்பவர்கள்
ஆனால் நீங்கள்
அவர்களில் இருப்பதில்லை

வரிகள்

கதையின் வரி
இப்படித் தொடங்குகிறது

இது உண்மையானவர்களைப்
பற்றிய உண்மைக் கதையல்ல
பொய்யானவர்களைப் பற்றிய
உண்மைக் கதை

கவிதையின் வரி
இதோடு முடிகிறது

திருடர்கள்

எல்லோரும்
திருடிக் கொண்டிருக்க
யார் கண்டுபிடிப்பது
திருடனை

தள்ளி வைத்தல்

ஆறுதல் வார்த்தைகளைத்
தள்ளி வைக்கிறேன்

பொய் சொல்லாத
முட்கள் மீது நடப்பது
பிடித்திருக்கிறது

ஸோலோ

உன் பெயர்

ஸோலோ

என்ன பெயர்

ஸோ…லோ…

ம்..சரி
நீ ரொட்டியைத் திருடினாயா

எனக்குத் தெரியாது

சரியாக சொல்
இவர் கடையிலிருந்து
நீ ரொட்டியைத் திருடினாயா

எனக்குத் தெரியாது
என் பசியைத்தான்
கேட்க வேண்டும்

Tuesday, January 12, 2010

அப்படியேதான் இருக்கிறது

அப்படியேதான் இருக்கிறது

நான் உங்களிடம்
சொல்லாத

நீங்கள் என்னிடம்
சொல்லாத

அந்த வரி
அப்படியேதான் இருக்கிறது

ஒரு உயிர்

துடித்து புரண்டு
ரத்தம் பெருக
உதவி கேட்டு
கெஞ்சி கைநீட்டி
போராடியவரை
யாரும்
காப்பாற்றவில்லை

அவர் மரணத்தைக்
காப்பாற்றினார்கள்

(வெற்றிவேலின் நினைவுக்கு)

அனுபவ சித்தனின் குறிப்புகள்

33-

நடந்தபோது
ஏதோ இடறி
கீழே விழுந்து
பின் எழுந்து பார்க்க
என் சடலம்

சடலம்
சத்தம் போட்டது

துர்க்கனவுகளை
இரவில்
நட்டுவைக்காதே
போய் நிம்மதியாய்த்
தூங்கு

Thursday, January 07, 2010

...........

இறந்து கிடக்கிறது
வெட்டிய மரம்
கூடவே குஞ்சுகளும்

அனுபவ சித்தனின் குறிப்புகள்

32-

திறந்த வெளியில்
மூடிக்கிடக்கும்
நான்

குழந்தைகள் உலகம்

1-

நிலவை விவரிக்கும்
குழந்தையின் வார்த்தைகளில்
நிலவுகள் ஒளிர்கின்றன

2-

மழை கூப்பிடுகிறது சிறுமியை
விளையாட
நனைந்து விடுவாய் என்று
தடுக்கிறாள் தாய்

இருத்தல்

ஜென் தோட்டம்
உள்ளிருந்தபோதும்
வெளியில் இருந்தேன்
வெளியில் வந்தபோதும்
உள்ளிருந்தேன்

கடினம்

கடினமாக இருக்கிறது

எல்லோரும் நிறைந்த இடத்தில்
மெளனமாக அழுவதும்

யாருமற்ற இடத்தில்
சத்தமாக சிரிப்பதும்

Sunday, January 03, 2010

தேடுவோம்

இனி ஒரு விதி செய்வோம்
கூச்சலை நிறுத்துவோம்

செய்த விதிகள்
எங்கே போயின
அதை தேடுவோம்

பிளாட்பாரக் கிழவி

உள்ளிருப்பவர்களைப் பற்றி
கவலைப்படுவதில்லை
வந்து போகும்
ஒவ்வொரு ரயிலுக்கும்
கையசைக்கிறாள்
பிளாட்பாரக் கிழவி

உனக்கான நதி

அழைப்பதில்லை
எந்த நதியும்

நீ பாய்ந்து
நீந்து

உனக்கான நதியை
எடுத்துக் கொண்டு
மேலேறு

பலி

என்னை
பலி கேட்கிறார் கடவுள்
வேகமாக ஓடுகிறேன்
கடவுளிடமிருந்தும்
கனவிடமிருந்தும்

Friday, January 01, 2010

ஏழாவது முறை

ஏழாவது முறையாக
நாள் குறித்தும்
இறந்து போகவில்லை பாட்டி
ஊர் திரும்புகிறார்கள் எல்லோரும்
கொண்டு வந்த கண்ணீருடன்

உங்களிடமிருந்து

பூவின் பெயர்
கண்டறிய
அகராதி புரட்டுவதை
நிறுத்துங்கள்
மணம் ஓடிக்கொண்டிருக்கிறது
உங்களிடமிருந்து

நீள்கிறது

அப்பாவுடன் போகும் போது
சிறிதாக தெரியும் சாலை
தனியே நடக்கும் போது
பெரிதாக நீள்கிறது