Wednesday, September 09, 2009

மின்னல் குட்டி

அணில் சொன்ன கதையில்
மரம் இருந்தது

மரத்தில் விளையாடிய போது
கதை மறைந்தது

ஒரு கிளையில் அணிலும்
மறு கிளையில் நானும்

எனது வார்த்தைகளை
பழங்களாகத் திருப்பித் தந்தது

ஒவ்வொரு பழமும்
ஒவ்வொரு ருசியில்

கிளை அசைத்து
ஒளியை ஆடவிட்டது

குதித்து உச்சி ஏறி
கை தட்டி சிரித்தது

பயத்தைப் போட்டு விட்டு
மேலே வா என்றது

நகராத என் மேல் இரக்கப்பட்டு
கீழிறங்கியது

ஒரு பொம்மை போல்
என்னை வைத்து
விளையாடிய அணிலுக்கு
மின்னல் குட்டி
என்று பெயர் வைத்தேன்

தன் சகாக்களுக்கு என்னை
அறிமுகம் செய்தது

நீ மாமிசம் புசிப்பவனா
வேகமாய் கேட்டது
சற்று வயதான அணில்

எனது ஆமாம்
கோபத்தை உண்டாக்கியது
அந்த மையத்தில்

விருந்தினரை நாகரீகமாக நடத்த வேண்டும்
எனக்காக வாதாடிய மின்னல் குட்டி
மறைந்தது போனது
கதையில் என்னை விட்டு விட்டு

2 comments:

  1. //விருந்தினரை நாகரீகமாக நடத்த வேண்டும்
    எனக்காக வாதாடிய மின்னல் குட்டி
    மறைந்தது போனது
    கதையில் என்னை விட்டு விட்டு //

    நல்ல எதார்த்தமான கவிதை அன்பரே...கொஞ்சம் கற்பனையுடன் அருமை...

    ReplyDelete
  2. பேஷ்..பேஷ்... ரொம்ப நன்னாயிட்டுயிருந்தது

    ReplyDelete