Tuesday, August 11, 2009

ஒரு மூதாட்டி

As a woman I have no country.
As a woman my country is the whole world.
-Virginia Woolf

வெளியேற்றப்பட்ட ஒரு மூதாட்டி
நகரத்தின் வீதிகளில்
நடந்து கொண்டிருக்கிறாள்

அவள் பையில் இருக்கிறது
கிழிந்த புடவைகளும் மீதிக் கனவுகளும்

புறக்கணிப்பின் துயரம்
அவள் கண்களில் பெருகுகிறது

ரத்த உறவுகளின் முகவரிகளை
கிழித்துப் போட்டபடிச் செல்கிறாள்

யாரும் வாய் திறந்து சொல்லவில்லை
அவள் வெளியேற்றப்பட்டிருக்கிறாள்

சிறு தூறல் அவள் புழுக்கங்களை நனைத்து
ஒத்தடம் கொடுக்கிறது

சாலையோரத் தேநீர் ஒரு சில நிமிடங்களுக்கு
சூடான நட்பாகிறது

சீக்கிரம் போய்ச் சேர்ந்துவிட்ட
தன் கிழவனைத் திட்டியபடி நடக்கிறாள்

இந்த ஒத்தைச் சுமை
அவள் முதுமையை இன்னும்
பாரமாக்குகிறது

நிராகரிப்பின் கசப்பை
உணர்ந்தபடி நடக்கிறாள்

அவளுக்கான இடம் இல்லையெனினும்
உலகத்தை நிரப்பியபடி
நடந்து கொண்டிருக்கிறாள் அந்த மூதாட்டி

9 comments:

  1. you have hit the 'bull's eye'. ரொம்பவும் நல்லா, நிதர்சனமா, ஆழமா இருக்கு.

    //சீக்கிரம் போய் சேர்ந்துவிட்ட
    தன் கிழவனைத் திட்டியபடி நடக்கிறாள்//

    ReplyDelete
  2. இனிய தருமி
    தங்களின் தொடர்ந்த வாசிப்பிற்கும்
    பகிர்தலுக்கும் நன்றி

    ReplyDelete
  3. மண்குதிரை
    என்ன செய்ய.சில உண்மைகள் கனமாக
    இருக்கின்றன.

    ReplyDelete
  4. உங்களின் கவிதையின் மன தாக்கத்துடன் :
    -----------
    எல்லா நகரங்களிலும் இருந்தும்
    என் போன்றவர்களால்
    விரட்டப்பட்டு
    கொண்டு இருக்கிறார்கள்
    வயதானவர்கள்
    என்றொரு நாள் வரும்
    என்னையும்
    தூக்கி எறிவதற்கு.
    -------

    ReplyDelete
  5. சிறு தூறல் அவள் புழுக்கங்களை நனைத்து
    ஒத்தடம் கொடுக்கிறது

    சாலையோரத் தேநீர் ஒரு சில நிமிடங்களுக்கு
    சூடான நட்பாகிறது

    சீக்கிரம் போய் சேர்ந்துவிட்ட
    தன் கிழவனைத் திட்டியபடி நடக்கிறாள்

    இந்த ஒத்தைச் சுமை
    அவள் முதுமையை இன்னும்
    பாரமாக்குகிறது

    அருமையா இருக்கு நண்பரே!

    ReplyDelete
  6. இது போன்றதொரு கவிதை எதிர்காலத்தில் என் மகனும் எழுதக்கூடும்.

    ReplyDelete