Tuesday, March 17, 2009

வண்ணங்களின் நறுமணம்

ஓவிய அரங்கம்
நேரம் முடிந்து
மூடப்படுகிறது

பார்வையாளர்கள்
வெளி வருகின்றனர்

சிலர் கண்களில்
வண்ணம்
ஒட்டி இருக்கிறது

நிசப்த இரவில்
நிறங்கள்
ஆறாகப் பெருகி
அரங்கம் எங்கும்
வழிந்தோடுகிறது

நான்காவது ஓவியப் பெண்
ஓடி வந்து
ஏழாவது ஓவியத்திலிருக்கும்
பெரியவரை
நலம் விசாரிக்கிறாள்

மூன்றாம் ஓவியத்திலிருக்கும்
மஞ்சள் பூக்களை
இரண்டாவது ஓவியத்தின் குழந்தை
கை நீட்டிப்
பறித்து எறிகிறது

வண்ணங்களில்
விளையாடிப் போகின்றன
பூக்கள்

ஏழாவது ஓவியத்தில்
வராமல் பயந்தபடி
பார்க்கும் பூனையைத்
தூக்கி வருகிறாள்
ஒரு தாய்

அவள் கைகளை
நக்குகிறது பூனை
அன்பின் வண்ணங்கள் மின்ன

பசிக்கும் குழந்தை
நீலத்தை சாப்பிட்டு
பச்சை நீரைக் குடிக்கிறது

அடுத்த நாள் ஞாயிறு

விடுமுறை குதூகலத்தில்
எல்லோரும்

திங்களன்று
பார்வையாளர்கள் வருகைக்காக
கதவைத் திறக்கும் காவலாளி
காலடியில் தட்டுப்படும்
மஞ்சள் பூவை எடுத்து
மெல்ல முகர்ந்தபடி
ஓவியங்களைப் பார்க்கிறான்

வண்ணங்களின் நறுமணம்
அவனுள்
பரவத் தொடங்குகிறது

(ஆனந்த விகடன்,27.05.08 இதழில்
விடுமுறை வண்ணங்கள் என்ற தலைப்பில்
பிரசுரமானது)

6 comments:

  1. வித்தியாச‌மான‌ அழ‌கான‌ க‌விதை. த‌லைப்பும் அதைவிட‌ க‌வித்துவ‌மாக‌ இருக்கின்ற‌து. வாழ்த்துக‌ள்

    ReplyDelete
  2. உங்கள் கவிதைகளுக்கு மிக கூர்மையான கண்கள். நிசப்த அரங்கத்தின் நிகழ்வுகளை அழகாய் பார்கிறது. பார்த்து எனக்கும் சொல்கிறது பின் வண்ணங்களின் நறுமணம் என்னுள்ளும்.

    ReplyDelete
  3. காதல் தேவதையின் ஆசிர்வாதங்கள் உங்களுக்கு அதிகம் போல எனக்கும் கொஞ்சம் சிபாரிசு செய்யுங்களேன்
    அன்புடன்
    ஜகதீஸ்வரன்
    http://jackpoem.blogspot.com

    ReplyDelete
  4. சுவாரஸியமா இருந்தது.. :)

    ReplyDelete