Monday, February 09, 2009

எழுதிய என்னாலும் அவனைக் காப்பாற்ற முடியவில்லை...

காலையை வணங்கினான்
சில உடற்பயிற்சிகள் செய்தான்
அவசர குளியல்
ஏதோ திருப்தி தந்தது
தேநீர் நட்பானது
நடந்தான்
பள்ளிக் குழந்தைகளுக்கு
கையசைத்தான்
ஒரு பாட்டி
அவன் கை பிடித்து
சாலைக் கடந்தாள்
கடந்து போய்
திரும்பி வந்து
கடவுளைக் கும்பிட்டான்
மனதிலிருந்த திட்டத்தில்
மாற்றமில்லை
நண்பனுக்கு
கடிதம் எழுதினான்
சம்பளம் வாங்கி
ஊருக்கு அனுப்பினான்
சில நிராகரிப்புகளை
நினைத்துப் பார்த்தான்
அதற்காக வருத்தப்படவில்லை
புன்னகை நிறைந்த தருணங்களுக்கு
நன்றி சொன்னான்
கால் நனைத்த
அலையைத் தொட்டான்
தொட நினைத்த அலை
போயிருந்தது
சாதகமான உயரத்திலிருந்த
மின்விசிறியை நிறுத்தினான்
அவனை வழி அனுப்புவதுபோல்
மெதுவாகி
நின்றன இறக்கைகள்
முன்பாக ஒரு
கணம் யோசித்தான்
இதை முதலில் செய்திருந்தால்
இன்றைய இவ்வளவு
நிகழ்வுகளை
இழந்திருப்போமே என்று
ஹாலில் நிறுத்தப்படாத டீவி
ஈழத்தமிழர்களின் இறப்புகளைச்
சொல்லிக் கொண்டிருக்க
அவன் கைபேசி
ஒலித்துக் கொண்டே இருந்தது

5 comments:

  1. அன்புள்ள ராஜா

    உங்கள் கவிதையை படித்தேன் நன்றாக உள்ளது. பீறிட்டு எழும் மன உணர்வுகளை சொற்களில் நேரடியாக வெளிப்படுத்தாமல் எளிய உரையாடலாக அல்லது விவரிப்பாக எழுதும் இந்த பாணியின் மிகச்சிறந்த கவிதைகள் தமிழில் ஆத்மாநாமால் எழுதப்பட்டவை. தற்கொலை பற்றிய இந்தக் கவிதையின் மொழி ஆத்மாநாமின் புகழ்பெற்ற கவிமொழியாக இருப்பது ஒரு அழகான தற்செயல் அல்லவா?

    ReplyDelete
  2. இளங்கோ
    உங்களின் கூர்மையான ஆய்வு என்னை நெகிழ வைத்தது.
    நன்றியும் அன்பும்...

    ReplyDelete
  3. !புன்னகை நிறைந்த தருணங்களுக்கு
    நன்றி சொன்னான்!

    இந்தத் தருணங்களின் நினைவுகளோடு இன்னும் வாழ்ந்திருக்கலாம்.

    தற்கொலைகள் தீர்வாகா என்பதை ஒரு தரம் மீளாய்வு செய்திருந்தால் ஒரு இழப்பு இல்லாதிருந்திருக்கும்.

    சாந்தி

    ReplyDelete
  4. நெருக்கமான, மிக அற்புதமான கவிதை.
    இதற்கு மேல் என்னால் வேறெதுவும் சொல்லமுடியவில்லை.

    ReplyDelete
  5. simple narration and a nice ending. the reason for his act is not relevant anymore, just like his ringing mobile phone.

    அவனை வழி அனுப்புவதுபோல்
    மெதுவாகி
    நின்றன இறக்கைகள்

    you didn't need to say the word 'suicide' or 'hanging'.

    thanks,
    mukundhn

    ReplyDelete