Thursday, April 17, 2008

...என்றொரு மருத்துவர்

என் நோய்கள் குறித்து
அக்கறையோடு விசாரித்தார்
மருத்துவர்

தெரியாத பலவும்
தெரிவித்தார்

மருந்துகளின் வரிசை
நீண்டது

மதுக்கடைப்பக்கம்
போகக்கூடாது
கட்டளையிட்டார்

வயது கூட
அது நோய்களுக்குக்
கதவுகளைத் திறந்து விடுகிறது
மறக்காதே என்றார்

கடைசியாய்க் கேட்டார்

என்ன தொழில்
செய்கிறீர்கள்

எழுத்தாளன்
கதை கவிதை
எனது தொழில்

புன்னகைத்தார்

உங்கள் எழுத்து
வாழ்க்கையை நகர்த்துகிறதா

அறை மின்விசிறி
நின்று போக
வெளிக் காற்றில்
தாள்கள் படபடக்க
முகம் துடைத்தபடிப்
பார்த்தேன்

வயது கூட
அது நோய்களுக்குக்
கதவுகளைத் திறந்து விடுகிறது
ஆரம்பித்திருந்த
என் கதையின் வரி
அங்கேயே நின்றிருந்தது

3 comments:

  1. //உங்கள் எழுத்து
    வாழ்க்கையை நகர்த்துகிறதா?//

    மருத்துவர் சரியாகத்தான் கேட்டுள்ளார்.
    எழுத்தும் ஏழ்மையும் எப்போதும் சேர்ந்தே இருக்குமோ ...?

    ReplyDelete
  2. தருமி
    நான் சொல்ல வந்தது அது அல்ல.
    ஆரம்பத்தில் நேரடியாக சித்தரிக்கப்படும் மருத்துவர் அவன் கவிதையில் வருபவர் என்கிற அம்சம்தான்.

    ReplyDelete
  3. maruthuvar kavithanmaiyoduthaan kettu irukkiraar

    ReplyDelete